SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 83 பேருக்கு தொற்று

2021-04-08@ 21:25:25

* 20 வார்டுகளில் தெருக்களுக்கு சீல்
* மாநகராட்சி ஆணையர் தகவல்

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா அதிகமாக பரவுவதாக 20 வார்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்ட தெருக்களை கண்டறிந்து, அவற்றை மூடும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. ஏற்கனவே இந்த வார்டுகளில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் கொரோனா தொற்று கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா 2வது அலை அதிகரித்து வருகிறது.

மதுரையில் கடந்த 15 நாட்களாகவே கொரானோவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மதுரையில் 83 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட 20 வார்டுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த 20 வார்டுகளிலும் கொரோனா தடுப்பு பணிகளை, தற்போது மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் ஏற்கனவே மருத்துவ முகாம்கள் நடந்து வரும் பகுதிகளில், வீடு வீடாக சென்று தொற்று பாதித்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரே தெருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அந்த தெருக்களை உடனடியாக மூடவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தெருக்களுக்கு உடனடியாக  சீல் வைக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களை அங்கு வசிப்பவர்களுக்கு விநியோகம் செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று மாநகராட்சி ஆணையர் விசாகன் தலைமையில் நடந்தது. அப்போது கமிஷனர் விசாகன் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சி பகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை முடுக்கி விட்டுள்ளோம். குறிப்பாக 20 வார்டுகளில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்.

அதிகம் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள, ஏற்கனவே பின்பற்றப்படும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடைக்கப்படும். அப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய  பொருட்கள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தொடர்ந்து கண்காணிக்கப்படும். மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி அழைப்பு மையம் 8428425000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

நேற்று ஒருவர் பலி
கடந்த ஓராண்டில் மதுரையில் மட்டும் கொரோனா காரணமாக 469 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த 57 வயது நபர், கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 707 பேர் மதுரை அரசு மருத்துவமனை, தோப்பூர் முகாம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்