SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணப்பட்டுவாடா விஷயத்தில் காக்கி கைகளை கட்டிப்போட்ட ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-08@ 01:17:58

‘‘இலை தரப்பு சக்சஸ்புல்லாக பணப்பட்டுவாடாவை கடலோர மாவட்டத்தில் முடித்தார்களாமே, காக்கி உயரதிகாரிகள் உத்தரவால்... பிடித்தவர்களை கூட விட்டுட்டாங்களாமே, இதுல தேர்தல் எங்கே ஒழுங்கா நடத்து இருக்கப்போகுது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் இலை கட்சி கூட்டணியில் உள்ள மாம்பழம் சின்னத்தை சேர்ந்தவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பேராலய எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில்  சைக்கிள் சின்னத்தை சேர்ந்த நிர்வாகிகள் 2 பேர் வாக்குப்பதிவின் போது மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடும்படி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் வந்ததாம். புகாரையடுத்து பணப்பட்டுவாடா செய்த 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து ஸ்டேசனுக்கு கொண்டு வந்து உரிய விசாரணை நடத்தினார்களாம். அப்போது உயரதிகாரிகளிடம் இருந்து விசாரணை காக்கிகளுக்கு போன் கால் வந்ததாம். இதனால்  காக்கிகளால் மேல்விசாரணை தொடர முடியவில்லையாம். இருவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் உடனே விடுவிட்டுட்டாங்களாம். பணப்பட்டுவாடா தொடர்பாக ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை கூட முழுமையாக நடத்த முடியவில்லையாம். மாவட்டம் முழுவதும் இப்படி தான் நடந்ததாம். இதன் மூலம் காக்கிகள் கை கட்டப்பட்டு இருக்கிறது... இதுல தேர்தல்ல பணப்பட்டுவாடாவே நடக்கலைன்னு சொல்ல சொல்றாங்க... இது அந்த தெய்வத்துக்கே அடுக்காது என்று காக்கிகள் புலம்புறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சுருட்டிய காசில் சுமோ வாங்கலாமா... அள்ளிய காசில் ஆட்டோ வாங்கலாமானு இலை நிர்வாகிகள் கணக்கு போட்டு இருக்கிறாங்களாம்.. அவங்களை பிடிக்க இலை தலைமை நினைச்சு இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ சென்னை கொளத்தூர் தொகுதியில் இலை சார்பில் ஆதியானவர் களமிறக்கப்பட்டார். அவர் ஆரம்பத்திலேயே என்னிடம் பணம் இல்லை என்று கறாராக கூறிவிட்டார். இருந்தபோதிலும் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று கூறி அவரை களத்தில் இறக்கி விட்டனர். தொகுதியில் உள்ள மக்களுக்கு கணிசமாகப் பணத்தை கொடுத்தால்தான் ஓரளவுக்காவது வாக்குகளைப் பெற முடியும் என்று கருதிய தலைமை 15 சி வரை தொகுதியில் செலவு செய்ய கொடுத்து அனுப்பினார்கள். அதுமட்டுமில்லாமல், வேட்பாளருக்கு தனியாக செலவுக்கு என்று 5 சி கொடுத்துள்ளார்கள். இதில் 15 சியை பிரித்து கட்சியின் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், பாக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து மக்களிடம் கொடுக்க சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் சில இடங்களில் மட்டும் ஓட்டுக்கு 500, 1000 என பெயரளவிற்கு கொடுத்துவிட்டு மொத்த பணத்தையும் ஆட்டய போட்டுவிட்டனர். எப்படியும் வெற்றி பெறப்போவதில்லை. பிறகு எதற்கு பணத்தை தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டும் என நினைத்து இவ்வாறு மொத்தமாக அடித்து விட்டனர். அதிலும் குறிப்பிட்ட ஒரு பகுதி செயலாளர் ஒரு நல்ல தொகையை பார்த்துள்ளார். தற்போது இவர்கள் எல்லாம் புதிதாக எந்தக் கார் வாங்கலாம்... எங்கு சுற்றுலா செல்லலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் அந்த பணத்தை மீட்க இலை தலைமை காக்கிகள் உதவியுடன் முடிவு செய்துள்ளதாம்...’’ என்றார்.
‘‘தேர்தல் முடிந்த பிறகு கதர் கட்சி தலைவருக்கு கல்தா கொடுத்த கதையை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பு அடங்குவதற்குள் காங்கிரஸ் தலைவர் அன்று இரவே குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றி புதிய தலைவரை நியமித்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம். ஏற்கனவே, மேற்கு மாவட்ட தலைவராக இருந்த ராஜமானவர் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில்.. புதியதாக மேற்கு மாவட்டத்துக்கு பெண் ஒருவரை தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். தேர்தல் முடியட்டும் என்று காத்திருந்து எதற்காக இந்த மாற்றம் என்று காங்கிரஸ் கட்சியினர் விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் பெண் சிட்டிங் எம்.எல்.ஏ.வை எதிர்த்து கட்சி நிர்வாகி ஒருவர் போட்டியிட அவர் உட்பட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். போட்டி வேட்பாளருக்கு  ஆதரவாக சிலர் செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில் அவர்களை மேற்கு மாவட்ட தலைவர் ராஜமானவர் கட்சியில் இருந்து நீக்கினார். இப்போது ராஜமானவரின் மேற்கு மாவட்ட தலைவர் பதவியையும் கட்சி தலைமை பறித்துள்ளது ஏன் என்று தெரியாமல் கட்சியினர் கேள்விகளால் மேல்மட்ட தலைவர்களை துளைத்து எடுத்து வருகிறார்களாம்.
பதவியை பறிகொடுத்தவருக்கும், பதவியை பெற்றுக்கொண்டுவருக்கும் எதற்காக இந்த மாற்றம் என்று தெரியவில்லை என்கின்றனர். ஆனால் தேசிய முன்னாள் தலைவரின் சுற்றுப்பயணத்தின்போது தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது மீனவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களது சமூகத்தை சேர்ந்தவருக்கு அகில இந்திய தலைமையின் உத்தரவுப்படி பொறுப்பு வழங்கியுள்ளதாக கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்