SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நூதன பண பட்டுவாடா தில்லுமுல்லு வேலைகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-06@ 00:27:02

‘‘அமைச்சர் தொகுதியில் நடந்த மஞ்சள்நிற டோக்கன் மர்மம் என்ன...’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் அமைச்சர் தொகுதி உள்பட 3 தொகுதிகளிலும் இலைகட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டார்களாம்... கிராம பகுதிகளில் மாலை நேரத்தில் வீடுகளுக்கு வரும் இலைகட்சியினர் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என சரிபார்ப்பது போல் மஞ்சள் நிறத்தில் டோக்கன் கொடுத்தார்களாம்.. அந்த வீட்டில் எத்தனை வாக்காளர்கள் என்பதை குறித்து விட்டு சென்றார்களாம்.. பின்னர் நள்ளிரவு வந்து கதவை தட்டும் இலைகட்சியினரிடம் மஞ்சள்நிற டோக்கனை காண்பித்தால் அதற்கான தொகையை கொடுத்து சென்றார்களாம்.. இதே போல் ஊரக பகுதிகளில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நபர்களை வரச்சொல்லி அங்கு கூட்டம் போட்டு பேசுதுவது போல் பாகம் வாரியாக குறிப்பிட்ட நபரிடம் பணத்தை கொடுத்து பட்டுவாடா செய்யும்படி இலைகட்சியினர் கூறிவிட்டு சென்றார்களாம்...
இன்று மாலை வரை பணப்பட்டுவாடா செய்ய இலைகட்சியினர் ரகசியமாக திட்டமிட்டுள்ளார்களாம்... முன்னதாக பணப்பட்டுவாடா செய்தால் வாக்காளர்கள் பணத்தை பெற்றுகொண்டு மறந்துவிடுவதால் வாக்களிக்க செல்லும் சிறிது நேரத்திற்கு முன்னதாகவும் பணம் விநியோகம் செய்ய உள்ளார்களாம்.. மாவட்ட நிர்வாகம் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை கண்டுகொள்ளாமல் வாக்குகளை விற்கும் நோக்கில் தான் ஆளுங்கட்சியினர் செயல்படுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரிகளை மிரட்டுகிறார்களாமே மக்கள் தொடர்பு அலுவலர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மோகனமான மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளார். இவரு எனக்கு தெரியாம எந்த ஒரு செய்தியும் பத்திரிகைகளுக்கு போகக்கூடாது, என்று கூறி, கலெக்டர் அலுவலக அதிகாரிகளையே மிரட்டி வர்றாராம். இதுக்கெல்லாம் காரணமே வைட்டமின் தான்னு சொல்றாங்க. இதனால மக்களுக்கு பயன்படுற சில விஷயங்களும் வெளியே தெரியாம போய்டுது.
இதுதொடர்பா, யாராவது அதிகாரிங்க இவர தட்டிக்கேட்டா, நான் வக்கீலு, பல பேர பாத்துட்டுத்தான் இந்த சீட்டுக்கு வந்திருக்கேன். எனக்கு அமைச்சர நல்லா தெரியும், நான் சொல்றத தட்டமாட்டார். எங்க வேணும்னாலும் கம்ப்ளய்ண்ட் பண்ணுங்க, ஒண்ணும் செய்ய முடியாது. மிஞ்சிபோனா என்ன செய்வாங்க, இந்த போஸ்டிங்கல இருந்து, ஏபிஆர்ஓ போஸ்டிங் போடுவாங்க அவ்ளோதானே. எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்னு மிரட்டும் தொனியில் பேசுறாராம்.
இதுதொடர்பாக புகாருங்க ஏதாவது கலெக்டருக்கு போனா, அவர்கிட்ட ஏதாவது ஒரு பொய்யச்சொல்லி தப்பிச்சுக்குறாராம். அப்புறமா, அந்த துறைசார்ந்த செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுக்காம அதிகாரிகளை மிரட்டுறாராம். அதோட இல்லாம, எனக்கு அமைச்சர தெரியும், அமைச்சர தெரியும்னு சொல்லி, சொல்லியே பில்டப் காட்டுறாராம். மொத்தத்துல ஆளும் கட்சியில பதவி வழங்காத கொள்கை பரப்பு செயலாளரா தான் வலம் வர்றாராம். கலெக்டர் ஆபிஸ்ல இவர் ஆடுற ஆட்டத்துக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைக்கப்போறாங்களோ தெரியலன்னு பிஆர்ஓ ஆபீஸ்ல இருக்குற ஊழியருங்களும், அதிகாரிங்களுமே புலம்பி வர்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்டண கழிப்பறை வசூல் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் சுருட்டப்படுகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மீனவர் பிரச்னை மையம் கொள்ளும் கடலோர மாவட்டத் தலைநகரின் புதிய பஸ் ஸ்டாண்டில் இரு கழிப்பறைகள் இருக்கிறது. இதில் ஒன்று நம்ம டாய்லெட் பெயரிலும், மற்றொன்று கட்டண கழிப்பறையாகவும் செயல்பட்டு வருகிறது. நம்ம டாய்லெட் கழிப்பறைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த டாய்லெட் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மற்றொன்றான கட்டண கழிப்பறையை செயல்படுத்த ஒவ்வொரு நிதி ஆண்டும் குத்தகைக்கு விடுவதுண்டு. ஆனால் இக்கட்டண கழிப்பறை 9 மாதங்களாக குத்தகைக்கு விடப்படவில்லை. நகராட்சி பணியாளர்கள் நிர்வகிக்கும் இந்த கட்டண கழிப்பறையில் வசூலாகும் தொகையில் பல லட்சம் ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் கொள்ளையடிக்கப்படுகிறதாம். இத்தகவல் தெரிந்தவர்கள் எல்லாம், ‘‘அடச்சே, ஆளுங்கட்சிக்காரங்க கழிப்பறையிலுமா காசு பார்ப்பாங்க’’ என்கின்றனர். இந்த சுருட்டலில் அரசு அதிகாரிகளுக்கும் பங்கு செல்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேசிய தலைவர்களின் வருகையை அதிமுகவினர் விரும்பாமல் புறக்கணித்ததுதான் இம்முறை பெரிய பேச்சாக இருக்கிறதாமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. அதென்னவோ உண்மைதான்... தென்மாவட்டங்களில் அதிமுகவை ஆதரித்து பேச முதல்வரை தவிர வேறு முக்கிய தலைவர்கள் யாரும் வராத நிலையில் ஆளும் கட்சியான அதிமுக பல தொகுதிகளில் நுழைய முடியாமல் பலமான எதிர்ப்பையும் சந்தித்தது. அதுவும் தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மை சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் எதிர்ப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது. இதனால் தென்மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் யாருடைய ஆதரவும் இன்றி அம்போ என விடப்பட்டனர். முதல்வரும் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே தலைகாட்டி விட்டுச் சென்ற நிலையில் தங்களை ஆதரித்துப் பேச யாருமே இல்லையே என்ற உணர்வில் அதிமுக வேட்பாளர்கள் துவண்டு போய் விட்டனர். இந்நிலையில் தான் தேசிய கட்சியின் 2ம் கட்ட தலைவர் இறுதியாக நெல்லை வந்த போதிலும் அவரது தேர்தல் பிரசாரத்தை அதிமுக வேட்பாளர்கள் விரும்பவில்லை. தப்பித்தால் போதும், அந்த பொதுக்கூட்டத்துக்கு வருவதற்கு பதில் தொகுதியை சுற்றினாலாவது கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும் என்று தீர்க்கமாக சொல்லி விட்டனராம். இதனால் தான் 2ம் கட்ட தலைவரின் பிரசாரத்தில் 2 வேட்பாளர்களை தவிர யாரும் தலைகாட்டவில்லையாம்’’ என்றார்
விக்கியானந்தா.     

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்