SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெர்மாகோல் அமைச்சரின் இரட்டை பேச்சால் தலைதெறிக்க ஓடிய மகளிரணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-05@ 06:25:23

‘‘தொகுதியில் கெத்தாக சுற்றிய இலை கட்சி முக்கிய பிரமுகர் தலைமறைவாக உள்ளதை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, வடவள்ளியை சேர்ந்த ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் மீது வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர், கைது செய்யப்படவில்லை. இருந்தாலும் அவர், கைது நடவடிக்கைக்கு பயந்து, தலைமறைவாகி விட்டார். வாக்குப்பதிவு நிறைவுபெற்று, நிலைமை சீரான பிறகுதான் ஏரியாவுக்குள் தலைகாட்டுவேன் என்ற சபதத்துடன் அவர், தலைமறைவாக உள்ளார். இதற்கிடையில், அவர், தனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை, வாய்ப்பு தரவில்லையே என்ற ஏக்கத்திலும் இருக்கிறாராம். அதனால், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, ஒரு இடத்துக்குக்கூட போகவில்லை. இதன்மூலம், கட்சிக்குள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். ஒரு பக்கம் போலீஸ் நெருக்கடி, இன்னொரு பக்கம் கட்சிக்குள் புகைச்சல் என மண்டைக்குடைச்சல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், விழி பிதுங்கி நிற்கிறார். ‘’எந்நாளும் அதிகாரத்தின் உச்சியில் இருக்க முடியாது..., வாழ்க்கை சக்கரம் சுழலும் தம்பி’’ என அவரது கட்சி நிர்வாகிகளே கமெண்ட் அடிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்துல பணப்பட்டுவாடா பட்டபகலிலேயே தாராளமாக நடந்துச்சாம்... காக்கிகள் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் அதிகாரிகள் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக விவிஐபி போட்டியிடும் மாங்கனி மாவட்ட தொகுதியில், ஓட்டுக்கு துட்டு ரொம்பவும் விளையாடிச்சாம். அதுவும் வெளிப்படையாகவே ஒவ்வொரு ஓட்டுக்கும் ஆயிரம் ரூபாயை இலைகட்சி நிர்வாகிகள் கொண்டு போய் கொடுத்தாங்களாம். போலீசாவது, பறக்கும் படையாவது என்ற தொனியில் வெளிப்படையாக பட்டுவாடாவை நடத்தி முடிச்சிருக்காங்களாம். மேலிடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை, எந்த சோதனையும் தொகுதியில் நடக்கவில்லையாம். இதேமாதிரி மாங்கனி மாவட்டத்தின் மற்ற தொகுதியிலும் இலை கட்சியினர், கனக்கச்சிதமாக பண பட்டுவாடாவை நடத்தி முடிச்சிருக்காங்களாம். சோதனை, விரட்டிப் பிடித்தல் போன்ற எதுவுமே இல்லாதது இந்த தேர்தல் தான் என்று அதிகாரிகளே ஆச்சரியத்தோடு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓரம் போ... ஓரம் போ தள்ளுவண்டி வருது என்று பறக்கும் படையினர் புலம்பும் கதையை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு குழுவினருக்கு 8 மணி நேர பணி என்ற அடிப்படையில் 3 குழுக்களாக பிரிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்து வருகின்றார்களாம்.. அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனத்திற்கு டீசல் நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறதாம்... இதை வைத்து கொண்டு நீண்ட தூரங்களுக்கு எப்படி செல்ல முடியும் என பறக்கும் படையினர் புலம்புகின்றனர். அதிகாரி ஒரு இடத்திலும், இந்த குழுவில் பணியாற்றும் காவலர்கள் வேறு ஒரு இடத்திலும் இருக்கிறார்கள். இவர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அழைத்து வருவதற்குள் டீசலே தீர்ந்து விடுகிறதாம்.. இதில் எங்கே ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியும். ஜிபிஆர் கருவி மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் குறிப்பிட்ட இடத்திலேயே நீண்ட நேரமும் நிற்க முடியாது.. நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் டீசல் மட்டுமே கொடுத்து பணியை மட்டும் அதிக அளவில் வாங்குகின்றனர் என தேர்தல் பணியாற்றும் பறக்கும் படை அதிகாரிகள் புலம்புகின்றார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தெர்மாகோல் அமைச்சரின் லொள்ளு பேச்சை கேட்டு பெண்கள் ஓடிட்டாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தெர்மாகோல் அமைச்சர், சில தினங்களுக்கு முன், தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்சியின் மகளிரணியில் சேர்ந்த பெண்களை அழைத்து பேசினாராம். பேச்சு கொஞ்சம் சர்ச்சை ரகமாம். ‘‘பேசுவதை விட செயலில் தான் என்னுடைய பணியை உங்களிடம் காட்டுவேன். தேர்தலுக்காக, வாக்குக்காக உங்களிடம் பேசவில்லை. உங்களுக்காக உண்மையாக உழைப்பேன். கூச்சமில்லாமல் என்னிடம் என்ன உதவி வேண்டும் என்றாலும் கேட்கலாம். என்னுடைய தொலைபேசியும் என்னுடைய வீட்டுக் கதவும் எந்த நேரமும் உங்களுக்காக திறந்திருக்கும்..’’ என்று பேசினாராம். அமைச்சரின் பேச்சைக் கேட்டு கட்சியில் சேர வந்திருந்த பெண்கள் ஷாக் ஆகிப் போனார்களாம். ‘இவர் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறாரா.. இல்லை, அவரது பேச்சே அப்படி தானா... தெரியாமல் உளறுகிறாரா என்று தலையில் அடித்து கொண்டு பாதி பேர் கூட்டத்தில் இருந்து விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆயிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்