SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவர்கட் செய்து பணம் சப்ளை செய்ய இலை தரப்புக்கு அதிகாரிகள் உதவுவதை சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-02@ 01:02:08

‘‘நடிகர் கட்சியின் வேட்பாளரை சினிமா வசனம் பேசியதை கேட்டு பொதுமக்கள் சிரித்த கதையை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட தேர்தல் களத்தில் நடிகர் கட்சி செய்யும் அலம்பல்கள் எல்லாம், அரசியலில் பல்லாண்டு காலமாக இருக்கும் கட்சிகளுக்கே திகைப்பை உண்டாக்குதாம். இங்குள்ள தெற்கு தொகுதியில் போட்டியிட ஏற்கனவே ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக எம்பி தேர்தலில் ஓரளவு ஓட்டு வாங்கின மாவட்ட நிர்வாகி, மனுதாக்கல் செய்திருந்தார். கடைசி நேரத்துல தில்லாலங்கடி வேலை செய்ததில், அதிகாரப்பூர்வ வேட்பாளரின் வாய்ப்பு பறிபோனது. அப்புறம் மாற்று வேட்பாளரான மாவட்ட நிர்வாகி தான், இப்போது வேட்பாளராக களத்தில் நிற்கிறார். இந்த வேட்பாளர் 20 ரூபாய் பத்திரத்தில் தொகுதி மக்களுக்கு, தான் அளிக்கும் வாக்குறுதிகளை உறுதிமொழி போல் எழுதி உடன் எடுத்துச் செல்கிறார். இதை காட்டி தேவையான அனைத்து வசதிகளையும் செய்வேன், முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன் என்று கூறுகிறார்.
மிக முக்கியமாக ஜெயித்த ஒரு வருஷத்திற்குள் அனைத்தையும் செய்து தருவேன். அப்படி செய்துதரவில்லை என்றால், என்னை பதவியை விட்டு தூக்குவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. நானாகவே ராஜினாமா செய்து விடுகிறேன்’’ என்று சினிமா வசனம் பேசினாராம். அதை அமைதியாக கேட்ட ‘மிஸ்டர்’ வாக்காளர்கள்,  இந்த ‘டயலாக்’ எல்லாத்தையும் நாங்க நிறைய சினிமாவுல பார்த்தாச்சு. உங்களுக்கு வாய்ப்பளித்து நீங்க ராஜினாமா செய்வதை விட, ஓட்டு போடாமல் இருந்தால் இடைத்தேர்தலை சந்திக்கும் சிரமம் எங்களுக்கு இருக்காது என்று பதிலுக்கு அடித்த கமண்ட் கேட்டு நடிகர் கட்சி வேட்பாளர் விட்டால் போதும்னு ஓடிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சி மின்சாரத்தை துண்டித்து பணப்பட்டுவாடாவில் இறங்கி இருக்கிறதாமே, உண்மையா... தேர்தல் கமிஷன் இதை கவனிக்கவில்லையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு துட்டு கொடுக்க கட்சியினர் பதுக்கி வைத்திருந்த ‘‘ப’’ அதிகாரிகள் ஒருபுறமும் பறிமுதல் செய்தாலும், மற்றொரு புறமும் வாக்காளர்களுக்கு ‘‘ப‘‘ வினியோகம் செய்ய அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி கட்சியி எடுத்து சென்றனராம். வெயில் கொளுத்தும் கோட்டை மாவட்டத்தில் இது பற்றி நன்றாக விசாரித்தால் சிக்குவது சில ஆயிரங்கள் தானாம்... ‘நார்த்’ இண்டியா அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பிவிட்டு... கோடிகளையும், லட்சங்களையும் வேட்பாளரிடம் சேர்த்துட்டாங்களாம். இப்போது இரண்டாம் கட்டமாக, பகல் நேரங்களில் ‘‘ப’’ வினியோகம் செய்ய முடியாமல் இலை தரப்பு தடுமாறுகிறதாம். இதனால கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் வினியோகம் செய்தபோது மின்சாரத்தை துண்டித்தார்களாம்.
அதுபோல தற்போது, நடைபெற உள்ள தேர்தலிலும் இரவு நேரத்தில் வினியோகம் செய்தால், சரியாக இருக்கும் என்பதால் கட்சியினரும் இரவு நேரத்தில் வழங்க முடிவு செய்துள்ளனராம். தேர்தலுக்கும் இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், தற்போது ‘‘ப’’ வினியோகத்தை தீவிரப்படுத்தி உள்ளனராம்.
இதையறிந்த வாக்காளர்கள் சிலர் இரவு நேரத்தில் தூங்காமல், அரசியல் கட்சியினர் எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றனராம். இதற்கு மின்வாரியத்திலும் சில அதிகாரிகள் உடந்தையாக இருக்காங்களாம். வேண்டும் என்றே மின் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தி, அதை வெளி நபர்கள் மூலம் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் போல புகார் கொடுக்க வைத்து சட்டசிக்கல் ஏற்படாதபடி செய்துள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தப்பை தட்டிக் கேட்ட அதிகாரியை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து... சஸ்பெண்ட் செய்த ஆளுங்கட்சிக்கு வேண்டிய அதிகாரியின் அடாவடியைப் பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடவுள் நதி பெயர் கொண்ட மாவட்டத்தில் ‘‘மண்ணுக்கு பெயர் பெற்ற’’ ஊரில் உள்ளாட்சி செயல் அதிகாரியாக ‘‘முருகக்கடவுள்’’ பெயர் கொண்டவர் இருக்கிறார். இவருக்கு மாவட்ட உள்ளாட்சி உயரதிகாரியானவர், ஆளும்கட்சியினரை அட்ஜஸ்ட் செய்து போகும்படி டார்ச்சர் செய்தாராம். இதனால் செயல் அதிகாரி மருத்துவ விடுப்பில் சென்று விட்டாராம்... இதையடுத்து பொறுப்பு பணிக்கு வந்த ‘நான்கெழுத்துக்காரர்’ உதவியால் இவ்வூரின் பழைய சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டு, இங்குள்ள இரும்பு கதவுகள், ஜன்னல்கள், பழைய சந்தையில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள், இரும்பு கர்டர்கள், முண்டுக்கல் உள்ளிட்டவற்றையும் விற்று பத்து லட்சத்துக்கும் மேல் வருவாய் பார்த்துள்ளனர்.
இந்த பணத்தில் உயரதிகாரியுடன், ‘பொறுப்பு’ பகிர்ந்து கொண்டாராம்.. விடுப்பு முடிந்த வந்த செயல் அதிகாரி, பழைய பொருட்கள் விற்பனை குறித்து கணக்கு கேட்டாராம். இதில் கடுப்பான உயரதிகாரி, ‘சோலார் லைட் வாங்கியதில் ஊழல்’ எனக்கூறி, செயல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்தாராம். வேண்டுமென்றே குற்றச்சாட்டு கூறி தன் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக மாவட்ட தலைமை துவங்கி, உயரதிகாரிகள் வரையிலும் முறையிட்டும் பயனில்லையாம்.
இதையடுத்து சஸ்பெண்ட் ஆனவரின் ஆதரவு பணியாளர்கள், பொறுப்புப்பணிக்கு வந்த நான்கெழுத்துக்காரர், உயரதிகாரி செய்துள்ள ஊழல் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்