SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாம்பழ கட்சி தாமரையை தவிர்ப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2021-03-30@ 00:46:37

‘‘பணம் இங்கே... பாசம் அங்கே என்று வேட்பாளருக்கு ‘தண்ணீ’ காட்டும் இலை கட்சியினர் பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மதுரை மாவட்டத்தில் பத்து தொகுதிகளில் எட்டு தொகுதியில் இலை தான் பிரதானமாக நிற்கிறது. ஒரு தொகுதியை தாமரைக்கும், மற்றொரு தொகுதியை இன்னொரு அமைப்புக்கும் கொடுத்துள்ளனர். போட்டியிடும் வேட்பாளர்களில் தெர்மோகோல் மந்திரி, கும்பிடு புகழ் மந்திரி, மாவட்டத்தின் செல்லமானவர் ஆகியோர் போட்டியிடும் 3 தொகுதிகளில் மட்டுமே தொண்டர்கள் ஆர்வமாக பணியாற்றுகிறார்களாம். இதில் மந்திரிகள் மீதான அதிருப்தி, தொகுதி மாறிய செல்லமானவரின் மந்தமான செயல்பாட்டால் இம்முறை மூவரும் வெல்வது குதிரைக்கொம்புதான் என்கின்றனர். இது ஒருபுறமிருக்க மற்ற 7 தொகுதிகளில் இலை கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில்லையாம். அதுல மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் இலை கட்சியினர்... சொந்த வேட்பாளர்களுக்கே தண்ணீ காட்டுறாங்களாம்... இவர்கள் இந்த தொகுதி வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மந்திரிகள் தொகுதியில் மையமிட்டுள்ளார்களாம். இது மற்ற இலை வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம். மதுரை வடக்கு தொகுதி தாமரை வேட்பாளரிடம் இலை தரப்பு தினமும் பணம் வாங்கிக்கொண்டு, தெர்மோகோல் மந்திரி தொகுதிக்கு ஜம்ப் ஆகிவிடுகிறார்களாம். இதுகுறித்து தனது கட்சி தலைமை, இலை தலைமை வசம் தாமரை வேட்பாளர் புகார் செய்தும் பலனில்லையாம்... இப்படியே சென்றால் இந்த முறை மதுரை மாவட்டத்தில் இலை ஒரு சீட் பெறுவதே பெரிய விஷயம்தான்... சொந்தக்கட்சியினரும் கண்டு கொள்வதில்லை... கூட்டணி கட்சியினரும் வேலை பார்ப்பது இல்லை... நட்சத்திர பேச்சாளர்களும் 7 தொகுதிகளையும் புறக்கணிக்கின்றனர் என தூங்கா நகர மாவட்ட இலை கட்சி சீனியர்கள் புலம்பறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெயில் அதிகமாக இருக்கிறதோ இல்லையோ... வெயிலூரில் பணப்பட்டுவாடா வேகமாக நடக்குதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களிடம் நேரடியாக சென்று தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியில் சேர்க்கவேண்டும். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 7124 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 24,485 பேரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் 531 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,629 பேரும் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பெற்றனர். தபால் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்ற 31 ஆயிரத்து 609 பேரின் பட்டியலும் ஆளுங்கட்சியினர் வசம் இருந்ததாம். இவர்களின் பட்டியலை தொகுதி வாரியாக, பகுதி வாரியாக, வார்டு வாரியாக பிரித்து வைத்துக்கொண்டு பெரும்பாலானோருக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.500 என வீடு தேடி கொடுத்து தபால் ஓட்டுக்கான முதல் கட்ட பட்டுவாடாவை முடித்துவிட்டார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயிக்க தானே தேர்தலில் நிற்கிறோம்... அப்படி என்றால் அவங்க கட்சி கொடி, படங்களே வேண்டாம்... ஈசியா ஜெயித்துவிடலாம்னு மாங்கனி மாவட்டத்துல மாங்கனி கட்சிக்காரங்க பேசிக்கிறாங்களே.. அது உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் இலையின் கூட்டணியில் போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஒருமித்த கருத்து இல்லை என்பது, பிரசார களத்தில் அடிக்கடி அம்பலமாகிறதாம். இலை வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு போகும் இடங்களில் மாம்பழ கட்சி கொடிகள் அரிதாகவே தென்படுகிறதாம். அதே நேரத்தில் மாம்பழ வேட்பாளர்களுடன் ஓட்டு கேட்டு செல்வதை முடிந்தவரை இலை கட்சி நிர்வாகிகள் தவிர்த்து வருகிறார்களாம். இவர்கள் இப்படி என்றால் இவர்களின் கூட்டணியில் தாமரை இருக்கும் இடமே தெரியவில்லையாம். இதில் சமீபத்தில் சின்ன டாக்டர் பங்கேற்ற கூட்டத்தில் தாமரையின் கொடிகள் அறவே இல்லாதது பெரும் புகைச்சலை கிளப்பி இருக்காம். சி.எம். போட்டியிடும் தொகுதியில் பிரசாரத்திற்கு வந்தாராம் சின்ன டாக்டர். அந்த பிரசாரத்தின் போது மாம்பழ கட்சி கொடிகள் மட்டுமே இருந்ததாம். இலையின் கொடிகள் ஒற்றை இலக்கத்தில் இருந்ததாம். ஆனால் தாமரைக் கொடியோ, பெயரளவுக்கு கூட இல்லையாம். இது தொடர்பாக மாம்பழ நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘‘எங்கள் கூட்டணிக்கு கிடைத்த பார்லிமென்ட் எலக்‌ஷன் முடிவுகளுக்கு முக்கிய காரணம் தாமரை கட்சிதான். அதனால் முடிந்தவரை அந்த கட்சியின் கொடியையும், பெயரையும் தவிர்க்கிறோம். இதில் தப்பு ஒன்றும் இல்லையே,’’ என்கிறார் கூலாக. அப்புறம் எதுக்குங்க அவர்களுடன் கூட்டணி என்றால், இதைப்பத்தி அப்புறம் பேசுவோம் என்பது அவரது பதிலாக இருக்கிறது.
‘‘விட்டால் போதும்னு மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு... எஸ்கேப் ஆன இலை கட்சி வேட்பாளரை நினைத்து மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அரண்மனை மாவட்டம் அறந்தை தொகுதியில் வேட்பாளராக இலைகட்சி மாஜி எம்எல்ஏ போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர், அறந்தை தொகுதியான பருத்திவயல் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றுள்ளார். இதை பார்த்த கிராம மக்கள் வேட்பாளரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் நீங்கள் இந்த ஊருக்கு வருகிறீர்கள். எங்க ஊருக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என சரமாரியாக கேள்விகளை கேட்டனர். சுதாரித்துக்கொண்ட வேட்பாளர், நான் எம்எல்ஏவாக இருந்தது 5 ஆண்டுகள்தான். உடனே கிராமமக்கள் நீங்கள் எம்எல்ஏவாக இல்லாவிட்டால் என்ன உங்கள் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. 10 ஆண்டுகளாக இலைகட்சி ஆட்சியில் வாரத்திற்கு 500 ரூபாய்க்கு குடிநீர் வாங்க வேண்டி உள்ளது. தேர்தல் என்பதால் வாக்குகள் கேட்டு வந்துள்ளீர்கள் என்று கிராம மக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேற வழியில்லாமல் அங்கு நின்றவர்களின் காலில் விழுந்து வணங்கி விட்டு ஓட்டு கேட்காமலேயே வந்த வேகத்திலேயே வேட்பாளர் எஸ்கேப் ஆகி விட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்