SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர் பிரச்னையை தீர்க்க மறந்த எம்எல்ஏ: பல்லடம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன்

2021-03-30@ 00:36:34

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று பல்லடம் தொகுதி. இத்தொகுதி, 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பல்லடம் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என இத்தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தொகுதி அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் ேபாடப்பட்டுள்ளது.

பல்லடம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்கும் விதமாக சாலை மையத்தடுப்புகள் அமைக்க வேண்டும். பல்லடம் -மங்கலம் சாலையை விரிவுபடுத்தி, புதிதாக தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். பல்லடம்-மங்கலம் நான்கு சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் எம்எல்ஏ கண்டுகொள்ளவில்லை.

பல்லடம் தொகுதியில், விசைத்தறி அதிகளவு உள்ளது. விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் இப்பகுதி நாட்டிலேயே 2ம் இடம் வகிக்கிறது. பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்களில், சுமார் 2 லட்சம் விசைத்தறி இயங்குகின்றன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். விசைத்தறி தொழிலை நசிவடைய செய்யும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.

பல்லடத்தில் கோழி கழிவுகள் எரியூட்டும் ஆலை பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதை, சீர்படுத்த வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனை கழிவறை கட்டிடம் உரிய பராமரிப்பு இல்லாமல், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதை சீர்படுத்த வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனை உரிய பராமரிப்பு இல்லாமல் ‘குடி’மகன்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதை சீரமைக்க வேண்டும். பல்லடம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள தாட்கோ கடைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். பெருகிவரும் வாகன எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்கவேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை. ஆனால், எதையுமே எம்எல்ஏ கண்டுகொள்ளவில்லை.

பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காடாத்துணிகளை விற்பதற்கு, தனிச்சந்தை உருவாக்க வேண்டும். பண்ணைகளில் கறிக்கோழிகளை வளர்க்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அரசு மானியத்தில் தீவனங்கள் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டு விட்டன. கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக வேட்பாளரே தொடர்ந்து வெற்றிபெற்று வரும் இத்தொகுதியில் வளர்ச்சிப்பணி என்பது மந்தமாகவே உள்ளது. ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் இப்படி பாராமுகமாக இருப்பது, இத்தொகுதி மக்களை வெறுப்படைய செய்துள்ளது.

‘குறைகள் ஒன்றும் இல்லை’
கரைப்புதூர் நடராஜன் எம்எல்ஏ கூறும்போது, ‘‘தொகுதி முழுவதும் தார்சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால் என அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். தொகுதி மக்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால் தொலைநோக்கு பார்வையுடன் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக உள்ளது. அதுவும் நிச்சயம் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

‘எதையும் கண்டுகொள்ளவில்லை’
பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘பைபாஸ் சாலை, புறவழிச்சாலை, மேம்பாலம், ஜவுளிப்பூங்கா, மங்கலம் ரோடு விரிவாக்கம், கிராம பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் என மக்களின் அடிப்படை தேவைகள் எதையும் நிறைவேற்றவில்லை. நூல் விலை உயர்வால் நசியும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கறிக்கோழி உற்பத்திக்கு அரசு மானியத்துடன் கடனுதவி பெற்றுத்தருவேன் என்றார். அதையும் கண்டுகொள்ளவில்லை. நானும் எம்எல்ஏ எனக்கூறிக்கொண்டு, 5 ஆண்டுகளை வீணடித்துவிட்டு சென்றதுதான் மிச்சம்’’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • Thaipoosam

  ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்