SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சிவகங்கை தொகுதியில் வெல்வது மாஜி எம்எல்ஏவா? மாஜி எம்பியா?

2021-03-26@ 14:06:38

* அமைச்சர் செயல்பாடுகளால் அதிமுக மீது அதிருப்தி
* திமுக கூட்டணி கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம்

சிவகங்கை தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்எல்ஏவும், அமைச்சருமான பாஸ்கரனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் எம்பி செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு சீட் வழங்காததால் ஆதரவாளர்களின் கோபம், அதிமுக மீதான மக்களின் அதிருப்தியால் இம்முறை திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதியாக சிவகங்கை விளங்குகிறது. தற்போது தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,47,093, பெண் வாக்காளர்கள் 1,52,021, இதரர் 4 என மொத்தம் 2,99,118 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிக வறட்சி பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு என மழை பெய்தால் மட்டுமே வாழ்க்கை எனும் வானம் பார்த்த பூமியாக சிவகங்கை தொகுதி இருக்கிறது. பெரிய அளவில் எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லாத இப்பகுதியில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியால், பல ஆண்டுகளாக விவசாயமும் பொய்த்து போனது. கிராபைட் ஆலை முடக்கம்: ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய சிவகங்கை கிராபைட் தொழிற்சாலை அதிமுக ஆட்சியில் முடங்கியே போனது. தொழிற்சாலைகள் வருவதற்கு தேவையான சிவகங்கை, காளையார்கோவில் வழியாக செல்லும் மதுரை - தொண்டி ரயில் பாதை வசதி, விரிவடைந்த சாலை போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் என எதுவும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை.

வேலை தேடி வெளியூருக்கு... சிவகங்கை அருகே இப்பகுதி விவசாயிகள், வர்த்தகர்கள் பயனடையும் வகையில் மிளகாய் உள்ளிட்ட வாசனை பொருட்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் இல்லாதது, விவசாயம் படிப்படியாக குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களான திருப்பூர், சென்னை, கோவை மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது.

வாக்குறுதிகளை வீசி... சிவகங்கை, காளையார்கோவில் தொழில் வளர்ச்சிக்கு விரிவடைந்த தொழிற்பேட்டைகள், வைகை, முல்லை பெரியாற்றில் உரிய பங்கு நீர், கிராபைட் ஆலை விரிவாக்கம், காளையார்கோவிலில் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கையில் வேளாண், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, மதுரை, தொண்டி ரயில் பாதை திட்டம், வரலாற்று சிறப்புமிக்க கம்பன், மருதுபாண்டியர் நினைவிட சுற்றுலா மேம்பாடு உள்ளிட்டவைகள் இத்தொகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும். இதையெல்லாம் சிட்டிங் அதிமுக எம்எல்ஏவான பாஸ்கரன் வாக்குறுதியாக அளித்திருந்தார். ஆனால், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. போராடி மக்கள் ஓய்ந்ததுதான் மிச்சம்.

வளர்ச்சி திட்டங்கள் இல்லை: விவசாயத்திற்கு கண்மாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதியில் ஆயிரக்கணக்கான கண்மாய்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இவைகள் சரிவர தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு இத்தொகுதியில் அமைச்சரான பாஸ்கரன் தொகுதி வளர்ச்சிக்கு சொல்லிக் கொள்ளும்படியான எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அமைச்சராக வளர்ச்சித் திட்டங்கள், வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய திட்டங்கள் கொண்டு வருவார் என ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வழக்கமாக தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்படும் பஸ் ஸ்டாப், நாடக மேடை, சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணிகளையே இவரும் செய்துள்ளார். மேலிடம் தந்த ‘ஷாக்’ : அமைச்சராக இருந்தும் தொகுதியில் இவர் மேலுள்ள அதிருப்தியால் சீட் வழங்காமல் மேலிடம் அதிர்ச்சி அளித்தது. முதல்வர், துணை முதல்வர் என சீட்டுக்காக அலைமோதியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதை பயன்படுத்தி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சீட் பெற்றுள்ளார். இவர் தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்நதவர். வேறு தொகுதியை சேர்ந்தவர் என்பதால், இவருக்கான ஆதரவாளர்கள் தொகுதிக்குள் குறைவாக இருக்கின்றனர்.

மேலும் அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் தராததால் அவரின் ஆதரவாளர்களிடம் அதிருப்தி மேலோங்கி நிற்கிறது. இதனால் தேர்தல் பணியை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். தொகுதிக்குள் கூட்டணி பலமும் பெரிதாக இல்லை. ஆளும் அதிமுக, பாஜ மீது கடும் அதிருப்தி இருக்கிறது. அமைச்சராக பாஸ்கரன் இருந்தும் தொகுதிக்கு எதுவுமே செய்யாதது பொதுமக்களை ஆத்திரத்திற்கு ஆளாக்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் கரையேறுவது நடக்காத காரியம்.
மக்களுடன் நெருக்கம்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக எஸ்.குணசேகரன் உள்ளார். முன்பு 2006, 2016 ஆகிய காலங்களில் 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்ததால், குக்கிராமங்கள் வரையிலும் பழக்கம் உள்ளது.

அனைத்து கிராமங்களுக்கும் இவரது எம்எல்ஏ நிதியில் தேவையான திட்டங்களை செய்துள்ளதால் மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. எம்எல்ஏவாக இல்லாத காலத்திலும் கூட, பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வந்தார். அத்தோடு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிகள் பலமும் வெற்றிக்கான வலிமை சேர்க்கிறது. அமமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுகிறார். அதிமுக தரப்பு ஓட்டுகள் இவரால் ஓரளவு பிரியும் நிலை இருக்கிறது. மநீம சார்பில் நேசம் ஜோசப், நாம் தமிழர் சார்பில் மல்லிகா உள்ளிட்டோர், சுயேச்சைகள் என பலரும் களத்தில் இருந்தாலும், இது திமுக கூட்டணிக்கும், அதிமுகவிற்குமான நேரடிப்போட்டியாகவே இருக்கிறது. தொகுதிக்குள் திமுக கூட்டணியே ஒளிர்ந்து நிற்கிறது.

அனைத்து கட்சிக்கும் வாய்ப்பு
சிவகங்கை 1985ம் ஆண்டில் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. சிவகங்கை சட்டமன்ற தொகுதி 1952ம் ஆண்டிலிருந்து தேர்தலை சந்தித்து வருகிறது. சிவகங்கை சட்டமன்ற தொகுதி சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாக்கள், காரைக்குடி தாலுகாவில் உள்ள சில கிராமங்களை உள்ளடக்கிய 90க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியை கொண்டதாகும். 1952ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்வி.சுவாமிநாதன் வெற்றி பெற்றார். இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ள சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் அனைத்து முக்கிய கட்சிகள் சார்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்ட பன்முகம் கொண்ட தொகுதியாக விளங்குகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உ.சுப்பிரமணியன் இத்தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்வி.சுவாமிநாதன், திமுகவை சேர்ந்த சேதுராமன், தற்போது திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.குணசேகரன் ஆகியோர் தலா இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றியது தா.கிருஷ்ணன், பாஸ்கரன் ஆகிய இருவர் மட்டுமே.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்