SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவான் 98, கோஹ்லி 56, ராகுல் 62*, க்ருணல் 58*: இங்கிலாந்தை அடித்து நொறுக்கியது இந்தியா: பந்துவீச்சாளர்களும் அசத்தல்

2021-03-24@ 02:03:22

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா,  ஆல் ரவுண்டர் க்ருணல் பாண்டியா அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர். ரோகித், தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.
நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 64 ரன் சேர்த்தனர். ரோகித் 28 ரன் (42 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஸ்டோக்ஸ் வேகத்தில் பட்லர் வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார்.  இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இருவரும் அரை சதம் விளாசினர். கோஹ்லி 56 ரன் (60 பந்து, 6 பவுண்டரி), ஷ்ரேயாஸ் 6 ரன்னில் வெளியேற, சதத்தை நெருங்கிய தவான்  துரதிர்ஷ்டவசமாக 98 ரன்னில் (106 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 9 பந்துகளை வீணடித்து 1 ரன்னில் வெளியேற, இந்தியா 40.3 ஓவரில் 205 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. 36 ரன்னுக்கு 4 விக்கெட் சரிந்ததால், இங்கிலாந்து அணியினர் உற்சாகமடைந்தனர். இந்த  நிலையில், கே.எல்.ராகுல் - க்ருணல் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை தவிடுபொடியாக்கியது. அறிமுக வீரர் க்ருணல் 26 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். மறு  முனையில் ராகுல் 39 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 112 ரன் சேர்த்து அசத்தியது. இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன் குவித்தது. ராகுல் 62* ரன் (43 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), க்ருணல் 58* ரன் (31 பந்து, 7 பவுண்டரி, 2  சிக்சர்) விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 3, மார்க் வுட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 318 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ இணைந்து முதல் விக்கெட்டுக்கு 14.1 ஓவரில் 135 ரன் சேர்த்து மிரட்ட,  இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. செய்வதறியாது திகைத்த இந்திய அணிக்கு, அறிமுக வேகம் பிரசித் கிருஷ்ணா புதிய உத்வேகத்தை கொடுத்தார். ராய் 46 ரன் (35 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பென்  ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து பிரசித் வேகத்தில் அடுத்தடுத்து நடையை கட்டினர். பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட்டு டென்ஷன் ஏற்றிய பேர்ஸ்டோ 94 ரன் (66 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி தாகூர் பந்துவீச்சில் குல்தீப் வசம்  பிடிபட்டார். இதனால் உற்சாகம் அடைந்த இந்திய வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதற்குப் பலனாக கேப்டன் மோர்கன் 22 ரன், பட்லர் 2 ரன் எடுத்து தாகூர் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். சாம் பில்லிங்ஸ் 18, மொயீன் 30, சாம்  கரன் 12 ரன்னில் அணிவகுக்க, அடில் ரஷித் டக் அவுட்டானார்.

டாம் கரன் 11 ரன்னில் வெளியேற, இங்கிலாந்து 42.1 ஓவரில் 251 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மார்க் வுட் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 66 ரன்  வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. இந்திய பந்துவீச்சில் அறிமுக வேகம் பிரசித் 8.1 ஓவரில் 1 மெய்டன் உட்பட 54 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி திறமையை நிரூபித்தார். தாகூர் 3, புவனேஷ்வர் 2, க்ருணல் 1 விக்கெட்  வீழ்த்தி வெற்றிக்கு உதவினர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

தந்தையை நினைத்து கலங்கிய க்ருணல்!
ஒருநாள் போட்டியில் நேற்று அறிமுகமான க்ருணல் பாண்டியா அமர்க்களமாக விளையாடி அரை சதம் அடித்தார். ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக அரை சதம் அடித்த அறிமுக வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் ஜான் மோரிஸிடம்  (35 பந்து) இருந்து பறித்த க்ருணல் (26 பந்து), இந்த சாதனையை சமீபத்தில் மறைந்த தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்து கண் கலங்க... சகோதரர் ஹர்திக் பாண்டியா கட்டி அணைத்து ஆறுதல் கூறி தேற்றினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்