SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்தது-தென்னை விவசாயிகள் கவலை

2021-03-09@ 14:46:26

உடுமலை : தேங்காய் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்ததால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடுமலை, மடத்துகுளம் தாலுகாக்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக தென்னைகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதலினால் தேங்காய் மகசூல் குறைந்த நிலையில் தற்போது தேங்காய் விலையும் சரிவடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் நெல்,கரும்பு,மக்காச்சோள சாகுபடியை விட விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் தருவதாக இருப்பது தென்னை சாகுபடி மட்டுமே. ஒரு ஏக்கருக்கு தலா 70 தென்னைகளை நட்டு பராமரித்து வந்த வேளையில் 2 மாதத்திற்கு ஒரு வெட்டு என்ற கணக்கில் வருடந்தோறும் 6 முறை தேங்காய் விற்பனை மூலம் குறிப்பிட்ட அளவு வருவாய் பெற முடிந்தது.

ஆனாலும் பருவமழை பொய்ப்பது, வெள்ளை ஈக்கள்,இலைகருகல் உள்ளிட்ட நோய்கள் தாக்குவது, பூக்கள் உதிருதல், குரும்புகள் உதிருவது என பலதரப்பட்ட நோய்களின் தாக்குதலில் இருந்து தென்னையை பாதுகாக்க வேளாண்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை வாங்கி தெளித்து தென்னைகளை பாதுகாத்து வந்தனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்வது அடிேயாடு பாதிக்கப்பட்டது. நிலத்தடி நீர்பற்றாக்குறை, வெள்ளை ஈக்கள் தாக்குதல் போன்றவற்றால் மகசூலும் வெகுவாக பாதிக்கபட்டது. இருப்பினும் ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி,பொங்கல் பண்டிகையையொட்டி தேங்காய் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு டன் ரூ.46 ஆயிரம் வரை விற்பனையானது.

இதே போல தேங்காய் பருப்பு (கொப்பரை) போன்றவற்றின் விலையும் கிலோ ரூ.140 வரை விற்பனையானது. விலை உயர்ந்த போதும், போதிய மகசூல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். இருந்த போதும் தோப்பு பராமரிப்பு,உரம் வைத்தல், தேங்காய் பறிக்கும் கூலி போன்ற செலவுகளுக்கு கட்டுப்படியாக கூடிய விலையாக அமைந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தேங்காய் விலை சரிவடைந்து தற்போது ஒரு டன் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாகிறது. உடுமலையில் இருந்து தாராபுரம், மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது தேங்காய் விலை டன்னுக்கு 2 ஆயிரம் வரை சரிவடைந்துள்ளது. இதே போல கொப்பரையும் ஒரு கிலோ ரூ.130 என கிலோவிற்கு 2 ரூபாய் சரிவடைந்துள்ளது.

 தேங்காய் மகசூல் குறைந்து வருவதால் இன்னும் ஒரிரு மாதங்களில் மீண்டும் தேங்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேங்காய் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், விலைசரிவு தென்னை விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. ஏனெனில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்து வருதால் அடுத்து வரும் மாதங்களில் மகசூல் இதை விட குறைந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்