SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காக்கி உயரதிகாரி கொடுத்த பணத்தை ஸ்வாகா செய்தவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-03-04@ 00:51:59

‘‘தேர்தல் நேரத்துல கூட்டணி கட்சியே ஆப்பு வைக்குதே என்று இலை கட்சியினர் புலம்புறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கன்னியாகுமரியில அடங்கி கிடந்த சரக்கு பெட்டக மாற்று முனைய விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்காம். தேர்தல் சமயத்துல தாமரை தரப்பு செய்யும் சில்மிஷ வேலைகளால் நம்ம வெற்றி பறிபோகும் போல இருக்குதே என்று பலரும் புலம்புறாங்களாம். அதாவது, துறைமுகம் வேண்டாம் என கூறி வரும் மீனவர்கள், துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி, கூட்டணியில் உள்ள கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் தீர்மானம் போட்டு இருக்காங்களாம். ஏற்கனவே காஸ், பெட்ரோல் விலை உயர்வால் ஓட்டு குறையும்... இதுல துறைமுகம் விஷயத்துல மீனவ மக்களிடம் போகவே முடியாதபடி தாமரை தரப்பு செய்யுது என்று இலையின் மேலிடத்துக்கு தங்கள் கவலையை சொன்னாங்களாம்... அவங்களோ... எங்க நிலைமையும் அப்டி தான் இருக்கு.. மக்களின் மனசை மாற்றுகிற மாதிரி ஏதாவது செய்யுங்க... நமக்கு 6 தொகுதியிலும் வெற்றி முக்கியம்னு சொன்னாங்களாம்... டெல்லி சிறப்பு பிரதிநிதி எப்படியாவது இந்த முறை ஜெயித்து விட வேண்டும் என கருதி கடந்த ஒரு வருஷத்துக்கு மேலலே உழைத்து வருகிறார். இதனால் எப்படியும் நமக்கு ஓட்டு விழுந்து விடும் என எண்ணிய அவரின் எண்ணத்தில் துறைமுக திட்ட அறிவிப்பு பேரிடியாக விழுந்துள்ளது. கட்சிக்காரர்களிடம் இது குறித்து கூறி புலம்புகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தங்களை அவமானப்படுத்திய இலையை அடித்து... துவைக்க வேண்டும் என்று முடிவு செய்துட்டார் போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை தரப்பின் மீது சமீபகாலமாக கடும் அதிருப்தியில் இருந்த சமக தலைவர்.. இலையின் பிரபலங்களை தோற்கடிக்கும் வகையில் கணக்கிட்டு அங்கு வலுவான வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணத்திலும் இருக்கிறார். முத்துநகரில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட சமத்துவக்காரர், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்து ஆச்சர்யப்படுத்தினார். கட்சியின் முதன்மை பொதுசெயலாளரை வேளச்சேரி, கோவில்பட்டி என இரு இடங்களில் நிற்க வைக்கும் திட்டமும் உள்ளதாம். தென்காசி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் சமத்துவ தலைவரே களமிறங்கும் எண்ணத்தில் உள்ளாராம். சமத்துவத்தின் தனி ரூட்டை பார்த்து தென்மாவட்டங்களில் இலை தரப்பு விக்கித்துப் போய் நிற்கிறதாம். 2 சீட்டை கொடுத்து சரிகட்டியிருக்கலாமோ என நிர்வாகிகள் வழக்கம் போல் இலை தரப்பு புலம்பி வருதாம். இன்னொரு பக்கம், தலைவர் ஏன் ரிஸ்க் எடுக்கிறார்... 5 தொகுதியை கேட்டு வாங்கி இருக்கலாம்னு சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூட்டு மாவட்டத்துல அறையின் பூட்டை உடைத்து அதிகாரப்பூர்வமாக திருடிச் சென்ற அதிகாரியை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தில் பாறையில் முடியும் ஒன்றியத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரை, அவ்வூரின் அரசு பள்ளியில் தனிமைப்படுத்தி தங்க வைத்தனர். இவர்கள் பயன்பாட்டிற்கென கட்டில், மின்விசிறி, மெத்தை, தலையணை, பாய் உள்ளிட்ட பொருட்களை கல்வி நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வழங்கினர். தற்போது தொற்றின் தீவிரம் குறைந்ததால், இப்பொருட்களை ஒன்றிய அலுவலகத்தின் மாடிக் கட்டிட அறையில் பூட்டி வைத்தனர். இத்தனை பொருட்களும் ‘‘குழலூதும் கடவுள் பெயர் கொண்ட’’ அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இதற்கிடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில், திடீரென இந்த அதிகாரி இடமாறுதல் செய்யப்பட்டார். ஞாயிறு விடுமுறை நாளில் அலுவலகத்திற்கு லாரியுடன் வந்த அதிகாரி, கொரோனா நிவாரணப் பொருட்கள் இருந்த அறையைத் திறந்து, அங்கிருந்த 25 மின்விசிறிகள், 50 தலையணைகள், 60 பாய்கள், 20 மெத்தைகள் உள்ளிட்டவைகளை அள்ளி எடுத்துச் சென்றார். பின்னர் காலி அறையின் சாவியை ஊழியரிடம் கொடுத்து விட்டுச் போனாங்களாம். இது அனைத்து ஊழியர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறதாம்... அட இதை தான் கொரோனா கொள்ளைனு சொல்வாங்க போல் இருக்கே... இவர் ஒருத்தரே தன் ரூமில் 25 பேன் ஓடவிட்டு காத்துவாங்குவாரோ என்று சிரித்தபடி பேசிக் கொள்கிறார்கள் ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ காக்கி உயரதிகாரி கொடுத்த பணத்தை யார் ஸ்வாகா செய்தா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் மாவட்டத்தில், மது கடத்தலில் அதிக வழக்குபதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ததற்காக மதுவிலக்கு காவல் நிலையங்களுக்கு, அந்த துறையின் உயரதிகாரி சென்னையில் சான்றிதழ்களையும், தலா 2 லட்சத்தையும் வழங்கினாராம். இந்த வெகுமதி தொகையை செக்போஸ்ட் போலீஸ், கலால் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டுமாம், ஆனால், விழுப்புரம், திண்டிவனம் ஸ்டேஷனில் மொத்த பணத்தையும் இன்ஸ்பெக்டர்கள், ஆட்டைய போட்டுட்டாங்களாம். உழைச்சது நாங்கள், பலன் அனுபவிக்கிறது வேறொருத்தவங்களா என்று ஆவேசத்தில், செக்போஸ்ட், கலால் ஸ்டேஷன் காக்கிகள் அதிருப்தியில் இருக்காங்களாம், இன்ஸ்பெக்டரிடம் கேட்டால், வெகுமதி கொடுத்த, உயரதிகாரியிடமே சொன்னாலும் கவலையில்லை என்று நடிகர் பெயரைக் கொண்ட லேடி இன்சு கறாராக கூற, எங்களுக்கு கலாலே வேண்டாம் என்று பொட்டியை கட்ட ரெடியாகி விட்டார்களாம். தேர்தல் நேரத்தில், கரன்சிக்காக இன்சுடன் சண்டைபோடும் காக்கிகளால் பரபரப்பு அடங்கவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

 • 22-04-2021

  22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்