SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10% வாக்கோடு வலிமையோடு தான் இருக்கிறோம் என இலையை எச்சரித்த பெண் தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-03-01@ 00:24:22

‘‘தூங்கா நகரம் இன்னும் தூங்கி வழியுதாமே... தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது கூட தெரியாமல் தேமேனு இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘எந்த நேரத்துல தூங்கா நகரம் என்று பெயர் வைத்தார்களோ தெரியல... அதிகாரிகள் ரொம்பவே தூங்கறாங்க போல... தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் அப்படியே இருக்காம். பொதுமக்கள் அதை பார்த்தபடியே போறாங்களாம். தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி வெளியானது.அறிவிப்பு வந்த மறுநிமிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. சென்னை கோட்டையில கூட படத்தை அகற்றிட்டாங்க... அது என்ன பாசமோ... பந்தமோ தெரியல... தூங்கா நகரத்துல மட்டும் முன்னாள் முதல்வரும் இன்னாள் முதல்வரும் படங்களில் சிரித்தபடி போஸ் தர்றாங்களாம். இதை கண்டுக்க வேண்டிய மாவட்ட உயரதிகாரி மவுனம் காக்கிறாராம். குறிப்பாக மதுரை நகர், புறநகரில் இலை கட்சியின் சுவர் விளம்பரங்கள் கூட பளிச்சுனு தெரிந்தாலும்... அதை யாரும் அழிக்கவோ... மறைக்கவோ இல்லையாம். அதுபோல மதுரைகே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளை மட்டும் அதிமுகவினர் துணியால் மூடினர். ஆனால் சிலைக்கான படிக்கட்டுகள், ரவுண்டானாவில் அடிக்கப்பட்ட கட்சி சின்னத்தின் நிறம் பளிச்சுனு தெரியுதாம்...’’என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட சுகாதாரத் துறையினரை என்னத்த சொல்றது... கேட்டால் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கதை அளக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகம் முழுக்க அரசு சார்புல 2 ஆயிரம் மினி கிளினிக் திறக்கப்பட்டிருக்கு. இதுல வேலை செய்யறதுக்கு, மாவட்ட நிர்வாகம் மூலமாக பணியாளர் செலக்‌ஷன் நடக்குமுன்னு அறிவிச்சாங்க. டாக்டர், நர்ஸ், உதவியாளர் பணியிடங்களுக்கு அப்ளிகேஷன் கொடுத்து, இன்டர்வியூவும் நடத்துனாங்க. மாங்கனி மாவட்டத்துல 107 மினி கிளினிக்குலயும் வேலைக்கு சேர, ஆயிரத்துக்கும் அதிகமானவங்க அப்ளிகேஷன் கொடுத்தாங்க. இதுக்கிடையில திடீர்னு தேர்தல் தேதி அறிவிச்சுட்டாங்க. ஆனா, விதிகளை மீறி மாவட்டம் முழுசும் ஹெல்த் டிபார்ட்மென்ட் சார்புல, போஸ்டிங் போட்டுகிட்டு வராங்களாம். இந்த மாவட்டத்துல இருக்குற 11 சட்டமன்ற தொகுதியிலயும் இல கட்சி கூட்டணி ெஜயிக்கணும்னு பிளான் பண்ணி, எலக்‌ஷன் விதிகளை காத்துல பறக்கவிட்டுட்டு, இப்டி செஞ்சிட்டு வராங்களாம். இந்த விவகாரம், மினி கிளினிக்குல வேலைக்காக இன்டர்வியூல கலந்துகிட்டவங்க மத்தியில கடும் அதிருப்திய ஏற்படுத்தி இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர்ல இலை மேலே மாம்பழ நிர்வாகிகள் கடும் அதிருப்தியில இருக்காங்களாமே, ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக சட்டமன்ற தேர்தலில் இலை கூட்டணியில் மாம்பழ கட்சிக்குதான் முதலில் சீட் ஒதுக்கீடு முடிந்த நிலையில், உத்தேசமாக மாம்பழ கட்சிக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளை கேட்டிருந்தாங்க. அதுல சோளிங்கர், ஆற்காடு. அணைக்கட்டு, திருப்பத்தூர் என 4 தொகுதிகள் இடம்பெற்றிருந்ததாம். ஆனால் மாம்பழ ஆற்காடு சட்டமன்ற தொகுதியை தனது முக்கிய பட்டியலில் வைத்திருந்ததாம். அதை விட்டுவிட்டு மற்ற 3 தொகுதிகள் மட்டுமே 3 மாவட்டங்களுக்கு தலா ஒன்று என ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால் உள்ளூர் மாம்பழ கட்சியினர் மத்தியில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளதாம். குறிப்பாக, சோளிங்கரில் மணியானவரையும், ஆற்காட்டில் இளவரசரையும், அணைக்கட்டு தொகுதிக்கு அந்த தொகுதியில் ‘‘ப’’ வைட்டமினுடன் தைலாபுரத்தை சுற்றி வரும் ஓய்வு பெற்ற காக்கியையும், திருப்பத்தூரில் அரசரையும் நிறுத்த கட்சி திட்டமிட்டிருந்ததாம். ஆனால் ஆற்காட்டை பட்டியலில் இணைக்காதது மாம்பழ கட்சியினர் மத்தியில் முணுமுணுப்பை அதிகப்படுத்தியுள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கெத்து காட்டி இலையை மிரள வைத்தாராமே பெண் தலைவர்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கள்ளக்குறிச்சி மாவட்டத்துல கோயம்பேடு கட்சிக்காரரின் செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கோயம்பேடு கட்சியின்அதிகாரம் மிக்க பெண்மணி கலந்து கொண்டு தேர்தல் பணிகள் நிறைய அட்வைஸ்களை வாரி வழங்கினாராம்.  தனித்து போட்டியிடவும் தயங்கக் கூடாது என்று கொந்தளித்தாராம்... அதை கேட்ட அங்கிருந்த நிர்வாகிகள் நெளிந்தார்களாம்... தனித்து போட்டியிட்டால் டெபாசிட் பறிபோகும்... கடன் வாங்கிதான் தேர்லுக்கு செலவு செய்யணும்... தோற்றுவிட்டால் கடன்காரன் கண்ணுல படாம தலைமறைவாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுமே... இது நமக்கு தேவையா என்ற தங்களுக்குள் பேசிக் கொண்டார்களாம். தொடர்ந்து பேசிய கோயம்பேடு கட்சியின் அதிகார பெண்மணி, கட்சியின் வரலாற்றில் தலைவருக்கு முதல் வெற்றி விருத்தாசலம் தொகுதி. இரண்டாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு எதிர்க்கட்சி தலைவராக உருவாக்கிய வரலாறு உண்டு. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் கோயம்பேடு கட்சி தனித்து நின்றாலும், கூட்டணி கட்சி நின்றாலும் அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற பணியாற்ற வேண்டும். தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டின் ஏழு மண்டலமாக பிரிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இறுதிகட்ட பிரசாரத்திற்கு தலைவர்  வருவார்.  ஓட்டுக்கள் குவியும்... யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைவர் அறிவிப்பார். இந்த முறை ஆண்களுக்கு சரிசமமாக பெண்களையும் பூத் கமிட்டிக்கு போட இருக்கிறோம்...அவர்களும் ஆண்களுக்கு சமமாக வேலை செய்ய வேண்டும். தமிழகத்தில் இன்று போட்டியிட்டால் கூட நாம் 10 சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி பெற முடியும். ஆனால் வெற்றி பெறவேண்டும், பொருளாதார பிரச்னை என்பதால் கூட்டணி பற்றி பேசி வருகிறோம்... பொருளாதார பிரச்னை இல்லையென்றால் தனித்து போட்டியிட கூட தயங்க மாட்டோம்... அதை கேட்ட நிர்வாகிகள் கூட்டணி கட்சியோடு பேசி தொகுதியோடு... ‘சி’ க்களை வாங்கித் தந்தால் சந்தோஷமாக இருக்கும் என்று பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்