SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் தந்த வாய்ப்பை பண பலம் மூலம் பாஜ திருடியது இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது: தூத்துக்குடியில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2021-02-28@ 03:32:11

தூத்துக்குடி: மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கோவா,  ஜார்கண்ட்,  அருணாச்சலப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு  மக்கள் தந்த வாய்ப்பை பண பலம் மூலம் பாஜ திருடி விட்டது. இதில் அதிக பணம்   பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது, அழிவிலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என தூத்துக்குடியில் வக்கீல்களுடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி, தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தூத்துக்குடி வந்தார். இங்குள்ள வஉசி கல்லூரியில் வக்கீல்களுடன் கலந்துரையாடினார்.மாநிலத்  தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை  வகித்தார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த வக்கீல்களுடன் ராகுல்காந்தி  கலந்துரையாடி பேசியதாவது: நாடாளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்து, நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை நாட்டை ஒன்றாக இணைத்து  வைத்திருக்கக்கூடிய அமைப்புகள்.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் மீது ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டு  வருகிறது. ஜனநாயகம் ஒரேயடியாக கொல்லப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்டு வருகிறது.  மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கோவா,  ஜார்கண்ட்,  அருணாச்சலப் பிரதேசம், புதுச்சேரி ஆகியவற்றில் காங்கிரசுக்கு  மக்கள் வாய்ப்பு தந்தார்கள். ஆனால் பண பலம் மூலம் மக்கள் தந்த வாய்ப்பை  பாஜ திருடி விட்டது. இதுதான் உன்மை.   இதில் அதிக பணம்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த பெரும் பண முதலாளிகள் மூலம் நடக்கிறது. அவர்கள் இந்த சமநிலை  அமைப்புகளுக்குள் ஊடுருவி அழித்து வருகிறார்கள். இதனால் இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது என்பதை காண  முடிகிறது. இந்த அழிவிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். நாடு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. கட்சித்தாவல் தடை இருக்கிறது. அந்த சட்டத்தில் ஆரம்பத்தில் எம்எல்ஏக்கள் வெளியேறுவதை தடுக்க முடியும்.   

எல்லாவற்றையும் மாற்ற நமக்கு நாடாளுமன்றம் தேவை. நம்முடைய ஒரே  நம்பகத்தன்மை, மக்கள் மன்றம்தான். ஆர்எஸ்எஸ் ஊடுருவாத நீதித்துறையும், ஊடகத்துறையும் தேவை. மத்திய பிரதேசத்திலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசை வாங்கி விட்டார்கள். இதற்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.   அவர்களால் என்னை மிரட்ட முடியவில்லை. ஏனென்றால் நான் நேர்மையானவன். அதனால்தான் நான் உங்கள் முன்பு நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எதிராக எந்த சிபிஐயை வைத்தும் மிரட்ட முடியாது. தொழிலாளர்கள்  நலச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்கள். இதுபற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசுவேன். இதற்கு காரணம் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து இருக்கிறது. இந்த நாட்டை 4 பேர் தான் வழிநடத்துகிறார்கள்.
நீதிபதிகள் பதவி முடிந்தவுடன் அரசியலுக்கு வந்துவிடுகின்றனர். இதற்கு பல உதாரணம் உள்ளது. அரசுக்கு ஆதரவான முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கிறது.  இந்தியாவில்  பெண்கள் மிகவும் மோசமாக ஆண்களால் நடத்தப்படுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு முழுமையான இயந்திரம் அல்ல. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதிக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நாட்டில் மதச்சார்பின்மை மீது முழுமையான தாக்குதல் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ மூலம் நடந்து வருகிறது. மதச்சார்பின்மை மீது நடக்கும் தாக்குதல் நமது கலாசாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் நடக்கும் தாக்குதல் ஆகும். எங்களுடன்  நீங்களும் சேர்ந்து போராட வேண்டும். நீங்கள் பிரதமரை பயனற்றவர் என்று கூறுகிறீர்கள். நான் அதில் சிறு திருத்தம் செய்ய விரும்புகிறேன். நான் இந்த நாட்டின் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும்  பயனுள்ளவனாக  இருக்கிறேன். ஆனால் பிரதமர் 2 பேருக்கு மட்டுமே பயன் உள்ளவராக உள்ளார். நேரம் வரும்போது அவர்களே அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்.  பிரதமர் இந்திய எல்லைக்குள் சீனப்படைகள் ஊடுருவவில்லை என்று  கூறுகிறார். ஆனால் அவர்கள் 100 கிலோமீட்டருக்கு மேல் ஊடுருவியுள்ளனர். பிரதமரின் இந்த பேச்சு சீனாவுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.

 சீனாவை எதிர்ப்பதற்கு இந்திய பிரதமர் துணிய வில்லை என சீனா தெரிவித்துள்ளது. இவர்கள் ஆட்சி இருக்கும் வரை இந்தியா சீனாவிடம் இழந்த நிலத்தை மீண்டும் பெற முடியாது.  2013ல் அவர்கள் ஊடுருவிய போது நமது படை  அவர்களை எதிர்த்து பின்வாங்கச் செய்தது. நாம் அவர்களுடைய நிலத்திற்குள் ஊடுருவவும் செய்தோம்.  ஆனால் இன்றைய பிரதமருக்கு அந்த தைரியம் இல்லை.  இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தையை கொஞ்சிய ராகுல்
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து காரில் தூத்துக்குடிக்கு ராகுல்காந்தி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையில் மேம்பால பணி நடந்து வரும் பகுதியில் சில பெண்கள் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்  காரில் சென்ற ராகுல் காந்தியை பார்த்து கையசைத்தனர். இதனை கண்ட ராகுல் உடனடியாக காரை நிறுத்தி, கீழே இறங்கி அவர்களிடம் சென்று நலம் விசாரித்தார். மேலும், அங்கிருந்த ஒரு பெண் வைத்திருந்த குழந்தையை தூக்கி  கொஞ்சினார். அப்போது அங்கிருந்த பெண்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

‘தமிழகத்தின் அடிமை ஆட்சியை அகற்றுங்கள்’
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசியதாவது: தற்போதுள்ள மத்திய அரசு நாட்டு மக்களையும், சட்டத்தையும் எப்படி மதிக்கிறது என்பது உங்களுக்கே நன்றாக  தெரியும். மோடி அரசு தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, பண்பாட்டை இழிவாக நடத்துகிறது. தற்போது தமிழகத்தில் மத்திய அரசின் அடிமை ஆட்சி நடந்து வருகிறது. மோடி ஒரு அறையில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழக  அரசை ஆட்சி செய்து வருகிறார். இந்த அடிமை ஆட்சியை அனைவரும் ஒன்றுபட்டு அகற்ற வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்