SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழாவுக்கு வராத எம்.பி.யை வீடு தேடி சென்று மிரட்டல் விடுத்த மாவட்ட செயலாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா ‘

2021-02-27@ 00:59:41

‘ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் நடந்த முப்பெரும் விழாவில் குழப்படியாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘உண்மைதான்... அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடத்த மாவட்ட இலைகட்சி சார்பில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருச்சி மண்டல பொறுப்பாளராக உள்ள எம்பி கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்ததாம்.. இந்நிகழ்ச்சிக்காக அரியலூர் பேருந்து நிலையம் முதல் புறவழிச்சாலை வரை கொடி, தோரணம் என தடபுடலாக கட்டப்பட்டு இருந்ததாம்.. நிகழ்ச்சி 3 மணிக்கு துவங்குவதாக இருந்ததால் நலத்திட்ட உதவிபெறும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், கட்சியினர் 2 மணியில் இருந்தே காத்து கிடந்தார்களாம். ஆனால் மாலை 6 மணி ஆகியும் எம்பி வரவில்லையாம்.
 இதில் கடுப்பான மாவட்ட செயலாளர் தாமரையானவர் தஞ்சைக்கு காரில் புறப்பட்டு சென்று அங்கு வீட்டில் இருந்த எம்பியை சந்தித்து அவ்வளவு செலவு பண்ணிருக்கோம் சும்மா இருக்க சொல்றீங்களா.. உடனே புறப்பட்டு வாருங்கள் என மிரட்டல் தொனியில் கூறியுள்ளார். அதன்பிறகு எம்பி அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணியளவில் விழா நடைபெற்ற மேடைக்கு வந்து சேர்ந்தாராம். ஆனால் அங்கு நலத்திட்ட உதவிகளை பெற குறைந்தளவே மக்கள் இருந்ததால் எம்பி கடுப்பாகி விட்டாராம்... வேற வழியில்லாமல் நலத்திட்ட உதவிகளை வழங்கி சென்றாராம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘டிரான்ஸ்பரெல்லாம் பொருட்டல்ல
இந்த இடத்துக்கு கண்டிப்பா வருவேன்னு சபதம் எல்லாம் போட்டுருக்காங்களாமே.. அது என்ன விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகரத்துல மாணவிகளின் எண்ணிக்கைக்கு இணையா, சர்ச்சையும் அதிகமாக இருக்குற பள்ளிக்கூடத்துல லேடி ஹெச்எம் இருக்காங்க. கட்டண வசூலில் முறைகேடு, ஆர்டிஐ.,யில் தவறான தகவல், கொரோனா கால அலட்சியம், சக வாத்தியார்களை கேவலமாக நடத்துவது என அவர் மீது ஏராளமான புகார்கள் இருக்குது. சமீபத்துல சம்பள பட்டியல் ெகாடுக்குற விவகாரத்துல, ஹெச்எம்.,க்கும், அந்த ஸ்கூல் லேடி டீச்சருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாம். இதுல ஹெச்எம் கணவரும், வேறொரு கவர்மென்ட் ஸ்கூல்ல ஹெச்.எம்., தானாம். அதேபோல், டீச்சரோட கணவர் ரூரல் டெவலப்மென்ட் அதிகாரியாம். இந்த பஞ்சாயத்து முதன்மையான கல்வி அதிகாரிகிட்ட போயிருக்கு. போன இடத்துல, ரெண்டு கணவன்மார்களுக்கும் முட்டி மோதிக்கிட்டாங்களாம். இதுல, ஹெச்எம் தரப்பு, ஒட்டுமொத்தமா வாத்தியார்கள பத்தி இஷ்டத்துக்கும் வசை பாடியிருக்காங்க. இதனால அதிருப்தியடைஞ்ச கல்வி அதிகாரி, லேடி ஹெச்.எம்.ஐ மாவட்ட புறநகருக்கு தூக்கியடிச்சிருக்காரு. ஆனா இதை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லி மெடிக்கல் லீவுல போயிட்டாராம். இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்ல. ஆர்டர வாங்காமலேயே, ரத்து பண்ணிட்டு அதே ஸ்கூலுக்கு மறுபடியும் வந்துருவேன்னு சபதம் போட்டுருக்காங்களாம் அந்த ேலடி ஹெச்.எம்.’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காவல்துறையை பொறுத்தவரை குமரி மாவட்டம் பொன் முட்டையிடும் வாத்தாக இருக்காமே..’’
‘‘ஆமா.. சாதாரண பிரச்னைக்கே, ஆயிரக்கணக்கில் வாரி கொடுப்பார்கள். எனவே இந்த மாவட்டத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இங்கிருந்து செல்ல மனமே இருக்காது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் இங்கேயே தங்கி விட்டனர். இவ்வாறு தங்கிய பல அதிகாரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோடிகளை நெருங்கி விட்டனர். இப்போது சட்டமன்ற தேர்தலையொட்டி இந்த மாவட்டத்தை விட்டு மாறுதல் வந்ததும், மனம் நொந்து போனார்கள். குமரி மாவட்டத்தை நம்பி வீடு கட்டும் பணி, நகை வாங்குவது என பல கனவுகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் சிலர் இப்படி ஆகி விட்டதே என நொந்து போனார்கள். ஆனால் இதிலும் சுதாரித்த சிலர், தங்களது பணியிட மாறுதல் உத்தரவையே பிரிவுபசார விழாவாக நடத்தி, ஆயிரக்கணக்கில் குவித்து விட்டனர். குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், பிரிவுபசார விழா நடத்தி முக்கிய பிரமுகர்களை மட்டும் அழைத்து விழா நடத்தி பரிசு பொருட்களை அள்ளியுள்ளார். பல்வேறு வழக்கு சம்பந்தமாக தன்னை அணுகி காரியம் சாதித்தவர்களை போன் ேபாட்டு என்னை மறந்து விடாதீர்கள். 3 மாதம் தான். தேர்தலுக்கு பின் மீண்டும் வந்து விடுவேன். என்னை வந்து தனியாக பார்க்கவும் என்று நச்சரித்து வருகிறார். சில மேட்டரை முடித்ததற்கு, ₹10 ஆயிரம் (10,000 ரூபாய்) வாங்கி கொடுங்கள். பார்ட்டி பிகு பண்ணினால் ₹5 ஆயிரம் கேளுங்கள் என்றும் கறாராக கூறி வருகிறார். திரும்ப வந்தால் சிக்கல் என்ற பயத்தில் பலரும் இவர் கேட்பதை கொடுத்து இவரை குளிர வைத்து வருகிறார்கள். வாங்கும் தொகை முழுவதையும் இன்ஸ்பெக்டர் தானே வசூலித்து கொள்ளுவதால், உடன் பணியில் இருக்கும் காவலர்கள் கொதித்து போய் உள்ளனர்.
‘‘கோயில் அதிகாரி ஆபீசுக்கே வர்றதில்லையாமே..’’
‘‘பூட்டு நகரத்தில்தான் புகழ் பெற்ற ‘‘பெண் தெய்வக்கோயில்’’ இருக்கிறது. இங்கே இயக்க அதிகாரியாகவும் பெண் ஒருவரே இருக்கிறார். தூங்கா நகரத்திலிருந்து வந்து போகிற இவர், பெரும்பாலும் கோயில் அலுவலகத்தில் இருப்பதில்லை. அதிகாரி இல்லாததால், அலுவலக பணியாளர்களும் கையெழுத்து போட்டு விட்டு கிளம்பி விடுகிறார்களாம். பிரார்த்தனைக்கென கோயிலுக்கு வருகிற பக்தர்கள், நன்கொடை தருவோர் என எவரும் அதிகாரியை அணுக முடியவில்லை. இதனால் கோயில் வருவாயும் குறைகிறதாம்.
பலமுறை உயரதிகாரியே வந்து விட்டு, ஆளில்லாமல் ‘‘காத்திருந்து’’ கிளம்பிச் சென்ற கதைகளும் இருக்கிறது. உள்ளூரில் தன் சமூகத்தவருக்கு சாதகமாக இருப்பதும், அவர்களுக்கு கோயிலில் முன்னுரிமை தருவதும் என அதிகாரி மீது புகார் இருக்கிறது. கோயிலுக்கான கடைகள் வாடகை வசூல் உள்ளிட்டவைகளில் முறையான கணக்குகள் இல்லாதது உள்ளிட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகிறது.
உள்ளூர் ஆன்மிக ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து குறைகளை நிவர்த்தித்து, ஆலயத்தை மேம்படுத்த ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பதும் இங்கு பரபரப்பைத் தந்திருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்