SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலாவை சந்தித்து இலை தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்கும் ‘வைத்தியக்காரர்’ முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-02-26@ 00:17:07

‘‘ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது... தேர்தல் நேரத்துல அது வீசப்போகுது’’ என்று பாட்டு பாடியபடி வந்தார்... பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தின் ‘நதியூர்’ தொகுதியில் இலைகட்சிக்கு எதிராக வாக்காளர்களிடம் அதிருப்தி பெருகி வருகிறதாம். இதனால நதியூர்ல நிக்க தயங்கும் இலை கட்சி.. அதை கூட்டணிக்கு தாரை வார்க்கலாமானு யோசனை செய்து வருதாம். தங்கள் சமூக மக்களின் ஓட்டு கிடைக்கும் மிதப்பில் தொகுதியில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வந்த மாவட்ட நிர்வாகி ஒருவரும் ‘டக்’குன்னு பின்வாங்கிட்டாராம். தவிர, ‘பட்டு நகரத்தின் மருத்துவரை’ வலுக்கட்டாயமாக அழைத்துப்போய் சீட் கேட்க வைச்சாங்களாம். ஆனால் இவரும், செலவு செய்து ஜெயிக்க முடியுமானு பின்வாங்கிட்டாராம். இதனால், கூட்டணிக் கட்சிக்கே இந்த தொகுதியை ஒதுக்கி விட்டு தப்பித்துக் கொள்ள ஆளுங்கட்சி முடிவு செய்திருக்கிறதாம். இதனால இந்த ெதாகுதியை தாமரைக்கு தாரை வார்க்க முடிவு செய்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குழாயடி சண்டை, குடுமிபிடி சண்டை எல்லாம் பார்த்தும்... கேட்டும் ரொம்ப நாளாச்சு... புதுசா ஏதாவது இருக்கா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சென்னை மடிப்பாக்கத்தில் தாமரை கட்சியின் மகளிர் அணி தலைவர் ஒருவர், பள்ளிக்கரணையை சேர்ந்த தாமரை கட்சியின் வர்த்தகர் அணியை சேர்ந்த பெண் ஒருவரை வீட்டுக்கே சென்று தலைமுடியை பிடித்து அடித்து உதைத்தாராம். இந்த குடுமிபிடி சண்டை தான் அரசியல் வட்டாரத்தில் பேச்சாம். இந்த குடுமிபிடி சண்டை விசாரணையை தாமரை தலைமை தொடங்கியிருக்காம். தற்போது வீடு புகுந்து தாக்கிய பெண் தலைவரை அந்த மாவட்டத்தோட தலைவரான ‘மிஸ்டர் பிராமிஸ்’ காப்பாற்ற துடிக்கிறாராம். இதனால இவருக்கு எதிராக மற்றொரு குழு இறங்கி இருக்காம். குடுமிபிடி சண்டை கோஷ்டி மோதலில் விட்டு தேர்தலில் கட்சிக்கு வேட்டு வைத்துவிடுமோ என்று தாமரை தரப்பு அலறுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல்ல ஜெயிச்ச... என்ன மறந்தே தங்கமே ஞான தங்கமே... வர்ற தேர்தல்ல உன்னை மறக்க போறேன் ஞான தங்கமேனு யார்... யாருக்கு எதிராக தேர்தல் பாட்டு பாடறா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட இலை கட்சிக்காரங்க பயங்கர ஆர்வத்தில் இருக்காங்க. ஆனால் பப்ளிக் அதிருப்தியில் இருக்காங்களாம். இந்த நிலையில் ராசியான புரத்தில் போட்டியிட ஆயத்தமாகி வரும் சிட்டிங் மினிஸ்டரான டாக்டருக்கு ஒரு ஷாக் குடுத்திருக்கிறாராம் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர். கடந்த கால தேர்தல்களில் மினிஸ்டரின் தேர்தல் செலவுகளுக்கு அந்த தொழிலதிபரின் பங்களிப்பு பெரிதாக இருந்ததாம். அதேபோல், அவர் சொன்னால் கணிசமான ஓட்டுகளும் விழுமாம். ஆனால் வரப்போகும் தேர்தலில் எதிரணியில் எதிர்பார்க்கப்படும் வேட்பாளர் ஒருவருக்கு தொழிலதிபர் உற்சாகம் குடுத்திருக்காராம். சமீபத்தில் தொழிலதிபர் நெருக்கடியை சந்தித்தபோது, சம்பந்தப்பட்ட மினிஸ்டர், கண்டும் காணாமல் இருந்தாராம். இதுதான், தொழிலதிபரின் மன மாற்றத்திற்கு காரணமாம். இதனால் சிட்டிங் மினிஸ்டருக்கு சீட் கிடைப்பது உறுதியானாலும், அவரை தோற்கடித்தே தீருவேன்னு தொழிலதிபர் களத்தில் இறங்கி இருப்பதால் பெண் மினிஸ்டர் மிரண்டு போய் உள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நான் வருவேன்னு சொல்லு... திரும்ப அதே ஸ்டேஷனுக்கு பலத்தோடு வருவேன்னு ெசால்லு என்று பெண் இன்ஸ்பெக்டர் ஏன் மிரட்டுறாரு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்ட நிர்வாக அலுவலகம் அமைந்த பகுதிக்கான காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த 3 ஸ்டார் பெண் அதிகாரி குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கி விடுவித்ததாக எழுந்த புகார்கள் காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டாலும், அவரது அதிகாரம் ஸ்டேஷனில் கொடிக்கட்டி பறக்கிறதாம். தினமும் ஸ்டேஷனுக்கு போன் போட்டு எப்படியாவது நான் அங்கு வந்துடுவேன். அதனால வரும் புகார்கள், எப்ஐஆர், சிஎஸ்ஆர் தகவல்கள் எனக்கு தரப்பட வேண்டும். நான் சொல்லும் பிரிவில்தான் வழக்கு போட வேண்டும். யாரை கைது செய்தாலும் என்னை கேட்டுதான் செய்யணும் என்று அதிகாரம் செய்கிறாராம். எல்லாம் பணம் படுத்தும் பாடு. என்ன செய்வது என்று புழுங்கிக் கொண்டிருக்கிறார்களாம் கீழ்நிலை அதிகாரிகள். ஆனால் இது எதையுமே பொறுப்புக்கு வந்திருப்பவரும் கண்டுகொள்வதில்லை என்பதுதான் காமெடி...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ‘வைத்தியகாரர்’’ பற்றி சொல்லுங்க... என்றார் பீட்டர் மாமா. ‘‘காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக விவிஐபி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து புதுக்கோட்டைக்கு சென்றார். திருச்சி ஏர்போர்ட்டில் டெல்டா மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என ஒரு பட்டாளமே விவிஐபியை வரவேற்றனர். ஆனால், திருச்சி மண்டல பொறுப்பாளராக உள்ள எம்பியான ‘வைத்தியக்காரர்’.. விமான நிலையத்துக்கு வரவில்லையாம். முதல்வர் பங்கேற்ற விழாவையும் புறக்கணித்து விட்டாராம்.. கட்சியில் செல்வாக்கு குறைந்ததாலும், மத்திய அமைச்சர் பதவி பரிந்துரை செய்யாததாலும் கடும் அதிருப்தியில் எம்பி இருந்து வருகிறார். இதனால், சசிகலா பக்கம் தாவ ஆயத்தமாக உள்ளாராம். தஞ்சைக்கு வர திட்டமிட்டுள்ள சசிகலாவை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் இலை கட்சிக்குள்ளே பரவலாக பேசிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்