SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொகுதியே ஒதுக்காத நிலையில் எலெக்‌ஷன் ஆபீஸ் திறக்க முயன்ற மாஜி அமைச்சரின் அலம்பலை சொல்கிறார்: wiki யானந்தா

2021-02-25@ 01:02:11

‘‘டாஸ்மாக் விற்பனையில் எட்டு பர்சென்ட் கமிஷன் கேட்கும் அல்வா மாவட்ட அதிகாரி பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்துல சுந்தரமான அதிகாரி கறார் வசூல் நடத்துவதில் கில்லாடியாம். கடைக்கு விற்பனை டார்க்கெட் 1 லட்சம் நிர்ணயித்து கமிஷனாக எட்டாயிரம் கப்பம் கட்டச் சொல்கிறாராம். இதனால குறைவாக விற்பனை காட்டி கமிஷனில் இருந்து தப்பிக்க முயற்சிக்கலாம் என்றால் கடைக்கு ₹20 ஆயிரம் முதல் ₹40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கிறாராம்.  இதற்கு பயந்தே கடை ஊழியர்கள் ஒரு லட்சம் விற்பனை இலக்கிற்கு படாதபாடு படுகின்றனர். எப்படி வித்தாலும் மாதம் ₹25 லட்சம் எங்களுக்கு வந்து சேர வேண்டும் என்ற அதிகாரியின் கண்டிப்பு காரணமாக டாஸ்மாக் வட்டாரம் திகைத்து போய் நிற்கிறதாம்...’’என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்துல மிரட்டி கரன்சி பிடுங்குறாருனு பார்த்தா... மாங்கனி மாவட்டத்துல மாம்பழத்தை ஸ்மார்ட்டா அழுத்தி பணம் குவிக்கிறாரானு பேசிக்கிறாங்களே... உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கார்ப்பரேஷனில நாலு வருஷத்துக்கு முன்னாடி, 380 கோடியில தனி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினாங்க. இதனால தினமும் வீட்டுக்கு தண்ணீர் வரும்னு சொன்னாங்க. ஆனால், இப்போது 10 நாளைக்கு ஒரு முறை தான் விடறாங்களாம். ஆனால் 24 மணி நேரமும் தண்ணீர் கொடுக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில இருந்து ₹150 கோடிக்கு குழாய், டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணி நடக்குதாம். இந்த பணியை பெயரளவுக்கு எடுத்த ஒப்பந்ததாரர், பொறியியல் பிரிவு அதிகாரியின் பினாமிக்கு சப்-கான்டிராக்ட் பணியை கொடுத்துட்டாராம். இதில் மட்டும் பல கோடி கை மாறி இருக்காம். எது எப்படியோ, அந்த அதிகாரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு கை பார்த்து பல கோடிகளை சேர்த்துட்டாராம்... பழுத்த மாம்பழம் போல சும்மாவே பல கோடி கைக்கு வந்ததால உச்சி குளிர்ந்து போய் இருக்காராம். பாதிக்கப்பட்ட கான்டிராக்டர்கள் பலர் விஜிலென்சுக்கு புகார்களாக தட்டி அனுப்பி இருக்காங்களாம். ஆனா அந்த அதிகாரியோ, விஐபி, சென்னை உயரதிகாரிகளுக்கு எல்லாம் வைட்டமின் ‘ப’வை கொடுத்து கவனித்து சரி கட்டி விடுகிறாராம்... ’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணியே முடிவாகமல் தேர்தல் ஆபிஸ் திறக்க போய் சிக்கல்ல மாட்டிக் கொண்ட மாஜி மந்திரி பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கூட்டணியில் தான் தாமரை இருக்கு. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என பங்கீடு எதுவும் நடக்காத நிலையில் அவசரப்பட்டு கையை சுட்டுக் கொண்டு நிற்கிறது தேசிய கட்சி. நெல்லை தொகுதியில் இதுவரை இரண்டு திராவிட கட்சிகள்தான் போட்டியிட்டுள்ளது. ஆனால் நெல்லை தொகுதியின் மாஜி எம்எல்ஏவும், மாஜி அமைச்சருமான நைனா என்பவர் தற்போது தாமரையில இருக்காரு... அதனால் அவர் இந்தத் தொகுதியில் போட்டியிட முஸ்தீபு காட்டி வருகிறார். எனினும் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு, பேச்சு வார்த்தை என எதுவும் துவங்காத நிலையில் நெல்ைல சந்திப்பில் உள்ள தனது ஓட்டலில் தேர்தல் அலுவலகம் திறக்க முடிவு செய்து நாள் குறித்து விட்டார் நைனா... இதற்காக தமிழ்க் கடவுள் பெயர் கொண்ட மாநில தலைவரையும் அழைத்து வந்த அவர் காலையிலேயே தனது ஓட்டலில் யாகம் வளர்த்து தடபுடல் ஏற்பாடுகளை செய்து விட்டார். ஆனால் தொகுதி உடன்பாடு கூட எட்டப்படாத நிலையில் நைனா தேர்தல் அலுவலகம் திறப்பது இலை கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் தேர்தல் அலுவலக திறப்பு விழாவை கடைசி நேரத்தில் தள்ளி வைத்த மாநில தலைவர் பைக் பேரணியோடு தனது விசிட்டை முடித்துக் கொண்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டாக்டர் வயிறு வலிக்குது... என்னது பயிறு முளைக்களைனா... அக்ரிகல்சர் டிபார்ட்மென்ட் போன்னு...அரசு டாக்டர் ஏன் சொன்னார்...’’என்றார் பீட்டர் மாமா.
‘‘கோட்டாறில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இங்கு பணியாற்றும் பேராசிரியர் உள்பட ஒரு சில மருத்துவர்கள், நோயாளிகளை முறையாக பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு பெற வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளை கூட அதிகாலை முதல் மதியம் வரை காத்திருக்க வைத்து விட்டு, உள்நோயாளிகளாக அனுமதிப்பதில்லையாம்.
மேலும், பேராசிரியர் உள்பட சில மருத்துவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில் சிலர் தமிழ் தேர்வு எழுதி, எழுத படிக்க கற்றுக் கொண்டாலும், சிலர் தமிழ் மொழியே தெரியாமல் உள்ளனர்.  இங்கே தான் பிரச்னையே... வயிறு வலியை... பயிறுனு புரிந்து கொள்கிறார்கள்... கால் வலியை கல்ல அடிப்பட்டுதானு கேட்கிறாங்க... பல் வலியை பல்லி எங்கேனுகேட்கிறாங்க...இதுக்கெல்லாம் காரணம் தமிழ்தெரியாதவங்களை டாக்டராக போட்டு...அவங்க எழுதி கொடுத்த மாத்திரையை சாப்பிட்டா நோய் எப்டி சரியாகும் என்று நோயாளிகளும் பொதுமக்கள் கேட்பது மட்டுமில்ல... தனியார் மருத்துவமனைக்கே போறது பெஸ்ட்னு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்