SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி முற்றுகை போராட்டம் மீண்டும் தீவிரம்: பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் நிபந்தனை: கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிக்கை

2021-02-03@ 00:11:30

புதுடெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை  முடக்கும் வகையில் சாலைகளில் கான்கிரீட் தடுப்புக்கள் மற்றும் ஆணிகளை  டெல்லி போலீசார் பதித்துள்ளனர். போலீசார் துன்புறுத்தல்  நிறுத்தப்படாதாவரை  பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த இரண்டு  மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். கடந்த 26ம்  தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம்  ஏற்பட்டது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் வெடித்தது. இதில்  300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.  கலவரத்தில் ஈடுபட்டதாக  விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர். குடியரசு தின வன்முறைக்குப்  பிறகும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படவில்லை. உபியில்  இருந்து தொடர்ந்து ஏராளமான விவசாயிகள்  போராட்ட களத்திற்கு வந்த வண்ணம்  உள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தை முடக்கும்வகையில்  டெல்லி போலீசார்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம்  போராட்டத்தை ஆதரிக்கும் வகையிலும், தூண்டிவிடும் வகையிலும் பதிவுகள்  போடப்பட்ட  200க்கும் மேற்பட்ட அமைப்புக்கள், தனிநபர்களின் டிவிட்டர்  கணக்குகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் தடை  செய்யப்பட்டது. பஞ்சாப்பில் இருந்து டெல்லி வழியாக வரும் ரயில்கள் மாற்று  பாதையில் திருப்பி  விடப்பட்டுள்ளன.எல்லையில் வாகனங்களில் நடமாட்டத்தை  தடுக்கும் முயற்சியாக பல அடுக்கு தடுப்புக்கள் போடப்பட்டுள்ளது. கான்கிரீட்  சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தடுப்புக்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையில்  ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் முன்னேறி வராமல் தடுக்கும் வகையிலும்,  வாகனங்களின் டயர்களை பஞ்சர் செய்யும் வகையிலும் இதுபோன்ற ஏற்பாடுகளை  டெல்லி போலீசார் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சம்யுக் கிசான் மோர்சா  சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாலைகளில் பள்ளங்களை தோண்டுவது, ஆணிகளை  பதிப்பது, முள்வேலிகள் அமைத்தல், உள் சாலைகளை மூடுவது, இணையதள சேவையை  நிறுத்துவது  பாஜ, ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள் மூலமாக போராட்டத்தை நடத்துவது  உள்ளிட்டவை அரசு மற்றும் அதன் காவல்துறையினரால் விவசாயிகளுக்கு எதிரான  தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்.   விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு பெருகி  வருவதால் அரசு அச்சத்தில் உள்ளது. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள  விவசாயிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்,  போலீசாரின்  துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். அது வரை அரசுடனான  பேச்சுவார்த்தைக்கு இடமில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுப்ப வேண்டியது சுவரல்ல, பாலங்கள்
விவசாயிகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டரில், ”விவசாயிகளின் போராட்டத்தை தடுப்பதற்கு சுவர்களை எழுப்பாதீர்கள்.  பாலங்களை  கட்டுங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.

சஞ்சய் ராவத் நேரில் ஆதரவு
சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத், காஜிப்பூரில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று பாரதீய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகெய்தை சந்தித்து பேசினார். அவர் வருவதை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  பிற்பகல் 1 மணிக்கு அவர் போராட்ட களம் வந்தார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர் கூறும்போது,’ ஜனவரி 26க்கு பிறகும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நேரத்தில் விவசாயிகளுடன் நிற்பது எங்கள்  கடமை. அவர்களுக்கு ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும், சிவசேனையும், முதல்வர் உத்தவ் தாக்ரேயும் ஆதரவாக உள்ளனர்’ என்றார்.

அக்டோபருக்கு முன் முடிவுக்கு வராது
பாரதிய  கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த் கூறுகையில், ”விவசாயிகளின்  போராட்டம் அக்டோபருக்கு முன்பாக முடிவடையாது. எதிர்கட்சிகள் ஆதரவு அளிப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இதனை அரசியலாக்க கூடாது”  என்றார்.

எல்லையில் போலீஸ் குவிப்பு போக்குவரத்து பாதிப்பு
டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில் நேற்று கூடுதலாக போலீஸ் படை குவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் பேரிகார்டுகள் கொண்டு வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதையடுத்து டெல்லி போலீசார் டிவிட்டர் மூலம் போக்குவரத்து நெருக்கடி பற்றிய தகவலை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். சிங்க எல்லை, டெல்லி-அரியானா எல்லை, டெல்லி-காஜிப்பூர் எல்லை ஆகியவை போக்குவரத்து நெருக்கடியால்  கடுமையாக பாதிக்கப்பட்டன

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

 • baloon111

  பலூனை தட்டி விளையாடுபவர்களுக்கான உலகக் கோப்பை டோர்னமென்ட்: ஸ்பெயினில் வினோதம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்