டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்
2021-01-26@ 16:58:31

அருமனை: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 11 கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தும், முடிவு எட்டப்படவில்லை. சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாமல், போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக, டெல்லியில் இன்று டிராக்டர் பேரணியும் விவசாயிகள் நடத்துகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், குமரி மாவட்டம் அருமனை அருகே பொறியாளர் ஒருவர், தனது திருமணத்தின் போது டிராக்டரில் மணமகளுடன் ஊர்வலமாக வந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இது பற்றிய விவரம் வருமாறு: குமரி மாவட்டம் அருமனை அடுத்த மாங்கோடு ஊராட்சி அம்பலக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெரின். கட்டிட பொறியாளர். இவருக்கும், கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்த பபி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர். வாழை குலைகள், வைக்கோல், பலாப்பழம் ஆகியவற்றால் டிராக்டர் அலங்கரிக்கப்பட்டு ஜெரின், பபி ஆகியோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மண்டபத்தில் இருந்து மணமகள் இல்லத்துக்கு, டிராக்டரிலேயே சென்று விட்டு, மீண்டும் மணமகன் இல்லத்துக்கு டிராக்டரில் தான் வந்தனர்.
விவசாயிகள் தங்களது கோரிக்கைக்காக கடும் பனி, வெயிலை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அந்த வகையில் தான் திருமணம் முடிந்ததும், விவசாயிகளின் போராட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில் டிராக்டரில் ஊர்வலமாக வந்தோம் என மணமகன் ஜெரின் கூறினார். தற்போது சமூக வலை தளங்களிலும் இது வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து: சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதி
கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படத்துடன் 3,030 நோட்டு புத்தகங்கள் பறிமுதல்: கரூர் அருகே பறக்கும் படை அதிரடி
கன்னியாகுமரியில் கலெக்டர் பாராகிளைடரில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சாகசம்
தமிழகத்தில் பாஜ போட்டியிடும் 20 இடத்தில் வெற்றி பெறுவது மட்டுமே நமது லட்சியம்: எல்.முருகன் முன்னிலையில் நிர்வாகி பேசியதால் பரபரப்பு
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ஜாமீன் காப்பகத்திற்கு பொன்னி அரிசி வழங்க நிபந்தனை