SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் விவசாயிகள் தற்கொலை: இனியாவது விழித்து கொள்ளுமா மத்திய, மாநில அரசுகள்

2021-01-24@ 18:21:55

* சதவீத அடிப்படையில் மட்டுமே சேதமான பயிர்களுக்கு பணம்
* நிவாரணம் கொடுக்க விஏஓக்களுக்கு லஞ்சம்
* கடன் தொல்லையால் கடும் நெருக்கடி

நாகை: கோடிக்கணக்கான மக்களின் பசியை தீர்க்கும் காவிரி டெல்டா விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. மழை, புயல் என எத்தனை இயற்கை சீற்றங்கள் வந்தாலும் உடைந்து போகாமல் மனத்தை இரும்பாக்கி கொண்டு மீண்டும் மக்களுக்கான பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்களின் இன்னல்களை மத்திய, மாநில அரசுகள் செவிசய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிவர், புரெவி, அடைமழை என அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் 13.57 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கிய சேதமடைந்துள்ளது. முதல் போட்ட விவசாயிகளின் கண்ணில் தண்ணீரில் மட்டுமே மிஞ்சியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது போல், விளைந்த நெல்லை கரைசேர்க்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், கரூர் (குளித்தலை) ஆகிய 7 மாவட்டங்கள் காவிரி டெல்டா பகுதியாகும். இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி பயிர்கள் சுமார் 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பயிர்கள் தற்போது அறுவடைக்காகவும், பால்பிடிக்கும் பருவத்திலும் இருந்து வருகிறது. இதேபோல் பருத்தி, மக்காசோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவ மழை தவறி பெய்ததாலும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் மற்றும் தொடர் மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள், மக்காசோளம், பருத்தி என சுமார் 13.57 லட்சம் ஏக்கர் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் வாங்கி கடனை திருப்பி கொடுக்காமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன் சாகுபடி தண்ணீரில் இல்லாமல் பயிர்கள் கருகியதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது மழையால் பயிர்கள் நாசமடைந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக நாகையை சேர்ந்த விவசாயி ரயில் முன் பாயந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). இவரது மனைவி அமுதா. இவர்களது முதல் மகன் அரவிந்த் (24) டிப்ளமோ படித்து விட்டு பணி தேடி வருகிறார். இரண்டாவது மகன் ஹரிஷ் கிருஷ்ணா (17). நாகையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

நாகை திருக்குவளை அடுத்த மோகனம்பாள்புரம் பகுதியில் ரமேஷ்பாபுக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர ரமேஷ் பாபு, 3 ஏக்கர் நிலம் குத்தகை எடுத்து சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில், வடக்கு பனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வலிவலம் கனரா வங்கி ஆகிய கிளைகளில் விவசாய கடன்களை ரமேஷ்பாபு வாங்கியுள்ளார். நாகை மாவட்டத்தில் கடந்த சில மாதமாக பெய்த தொடர் மழையால் இவர் சாகுபடி செய்திருந்த 10 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர் நீரில் மூழ்கியது. மேலும், வயலிலேயே நெற்பயிர்கள் அழுகி வந்தது. இதை  பார்த்த ரமேஷ்பாபு, கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்தார். மேலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறேன் என்று புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நாகையில் உள்ள தனது வீட்டிலிருந்து நிலம் அமைந்துள்ள இடத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆவராணிபுதுச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தபோது எர்ணாகுளத்தில் இருந்து நாகை வழியாக காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் ரமேஷ்பாபு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ்பாபு சம்பவ  இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்  இன்ஸ்பெக்டர்கள் தண்டபாணி, ஞானசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று  ரமேஷ்பாவு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி ரமேஷ்பாபு கடந்த 2ம் தேதி நடந்த நாகையில் நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம், நேற்றைய முன்தினம் தஞ்சையில் நடந்த பச்சைக்கொடி போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. நாகை அரசு மருத்துவமனைக்கு காவிரி விவசாயிகள் சங்க  மாநில பொது செயலாளர் தனபாலன், திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் மற்றும்  விவசாயிகள் சென்றனர். பின்னர் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரமேஷ்பாபு  உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் கூறியதாவது: ஒரு ஏக்கர் ஒன்றுக்கு செலவு ₹35 ஆயிரம் ஆகிறது.

ஆனால் விவசாயிகள் ஏக்கருக்கு ₹30 ஆயிரம் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தமிழக அரசு ஹெக்டேருக்கு ₹20 ஆயிரம் தான் அறிவித்துள்ளது. அதுவும் சதவீத அடிப்படையில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணம் போதுமானது இல்லை. மேலும் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களும் சேதமடைந்துவிட்டது. சராசரியை விட 14 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது. இதனால் நெற் பயிர் முற்றிய நேரத்தில் மழை நீர் சூழ்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனே நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை நீடிக்காமல் இருக்க நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

கடைமடை விவசாயிகள் சங்கதலைவர் பாலையூர் தமிழ்செல்வன் கூறியதாவது: கடந்த காலங்களில் இழப்பீடு என்பது விவசாயிகள் கடன் பெற்ற வங்கி கணக்கு அல்லது காப்பீடு செய்யும் போது தரும் வங்கி கணக்கில் தான் வரவு வைக்கப்படும். காப்பீடு செய்யாத விவசாயிகள் அல்லது வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள்  விஏஓவிடம் பட்டா மற்றும் சிட்டா அடங்கல் பெற்று வங்கி கணக்கு எண்ணை விவசாயிகள் விஓவிடம் தெரிவிப்பர்கள். அதன்பின்னர் அந்த வங்கி கணக்கில் நிவாரணம் வரவு வைக்கப்படும். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பிரதமரின் புதிய காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய நடைமுறையாக விஏஓவிடம் பட்டா, சிட்டா பெற்று வங்கி கணக்கை கொடுக்க வேண்டும். அதன்பின்னர் அந்த வங்கி கணக்கில் நிவாரணம் வரவு வைக்கப்படுகிறது. இது மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது.

நாகை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் விஏஓக்கள் இதுவரை விவசாயிகளிடம் வங்கி கணக்கை பெறவில்லை. சில கிராமங்களில் விஏஓக்கள் தங்களது இஷ்டம் போல் லஞ்சம் பெற்று கொண்டு பதிவு செய்து வருகின்றனர். இது விவசாயிகளிடம் மன வேதனையை தருகிறது. இந்த மன வேதனை தான் விவசாயி ரமேஷ்பாபுவை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளது. இனியும் இந்த நிலை டெல்டா மாவட்டத்தில் நீடிக்காமல் இருக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு கேட்டுள்ள நிவாரணத்தொகையான ₹30 ஆயிரத்தை வழங்க வேண்டும்.

ஏனெனில் ஒரு ஏக்கருக்கு செலவு என்பது ₹35 ஆயிரம் ஆகிறது. இதை தவிர அறுவடை செய்து நெல்லை களத்து மேட்டிற்கு கொண்டு வர ₹25 ஆயிரம் செலவு ஆகிறது. கஷ்டத்தில், நஷ்டத்தில் வாழ்ந்து வரும் விவசாயிகள் மற்றவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தாங்கி கொண்டு உழவுதொழிலை செய்து வருகின்றனர் என்றார்.

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் முதல்வர் எடப்பாடி: -தயாநிதி மாறன் எம்.பி குற்றச்சாட்டு
தற்கொலை செய்து கொண்ட விவசாயி ரமேஷ் பாபு வீட்டுக்கு நேற்று இரவு தயாநிதி மாறன் எம்பி சென்றார். அங்கு ரமேஷ்பாபு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தயாநிதி மாறன் எம்பி ஆறுதல் கூறினார். இதைதொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் விவசாயி இறப்பு குறித்து தயாநிதி மாறன் எம்பி கேட்டறிந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயி ரமேஷ் பாபு இறந்த செய்தி அறிந்தவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை தொடர்பு கொண்டு, இறந்த விவசாயி குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கும்படி கூறினார். அதன்படி விவசாயி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வந்தேன்.

மார்கழி மாதம் பெய்த மழை டெல்டா மாவட்ட விளைநிலங்களை முற்றிலும் பாதிப்படைய செய்துள்ளது. இதற்கு நிவாரணமாக ஏக்கருக்கு ₹30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ₹30 ஆயிரம் ஏக்கருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். ஆனால் தமிழக அரசு ஹெக்டேருக்கு ₹20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இந்த நிவாரணம் ஒரு ஏக்கருக்கு ₹8 ஆயிரம் தான் கிடைக்கிறது. இதனால் வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லையே என்ற விரக்தியில் இந்த விவசாயி உயிரிழந்துள்ளார். ₹30 ஆயிரம் கொடுத்திருந்தால் இந்த விவசாயி உயிரிழந்திருக்க மாட்டார்.

இவர்கள் குடும்பத்தின் சந்தோஷமும் போயிருக்காது. விவசாயிகள் மீது அக்கறை இல்லாத தமிழக அரசின் மெத்தன போக்கின் காரணமாக விவசாயி ரமேஷ்பாபு தனது குடும்பத்தை கூட நினைக்காமல் இந்த முடிவை எடுத்து இருப்பது வேதனை தருகிறது. முதல்வர் பழனிச்சாமி விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார். இவர் போலி விவசாயி. கடந்த திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகளின் கடன் ₹7600கோடியை தள்ளுபடி செய்தார். அவரது மகன் திமுக தலைவர் மு.க.டாலினும் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வேன் சென்று பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.

இவர் கருணாநிதி மகன். சொன்னதை செய்வார். இன்னும் மூன்றே மாதத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி. இதுபோன்ற முடிவுகளை இனி எந்த விவசாயிகளும் எடுக்க வேண்டாம். 3 மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம்
திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் பெய்த தொடர்மழை  காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள்  நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இவ்வாறு பாதிப்படைந்த பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ₹30,000 நிவாரணம் வழங்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ₹20,000  நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரணமும் சதவீதம் அடிப்படையில்  வழங்கப்படுகிறது. இது போதிய நிவாரணம் இல்லை. போதிய நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் மன உளைச்சலில் உள்ளனர்.

நாகையை சேர்ந்த விவசாயி ரமேஷ்பாபு  தனது 10 ஏக்கர் மழைநீரில் மூழ்கியதை கண்டு வேதனையடைந்து ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். எனவே அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக ₹20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல் ஏக்கர் ஒன்றுக்கு ₹30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையெனில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி விவசாயிகளை திரட்டி டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மனைவி கதறல்
தனியாக விட்டு சென்றதால் குடும்பத்தை எப்படி கவனிப்பேன் என்று ரமேஷ்பாபுவின் மனைவி அமுதா கதறி அழுதார். இவர் கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கேள்விபட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனார். வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டில் இருந்தபடியே கதறி அழுதார். என்னை விட்டு போய் விட்டீங்களே மாமா இனி எப்படி நமது குடும்பத்தை பார்த்து கொள்வேன். என்னை தனியாக விட்டு சென்று வீட்டீர்களே என்று கதறி அழுதார்.

தலைவன் இல்லையே மகன் வேதனை
ரமேஷ் பாபு  மகன் ஹரிஷ்கிருஷ்ணா கூறியதாவது: நான் நாகையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறேன். எனது அண்ணன் டிப்ளோ படித்து விட்டு பணி தேடி வருகிறார். எனது தந்தை தான் எங்களது குடும்பத்தை வழி நடத்தி சென்றார். திடீரென எனது தந்தை இப்படி முடிவு எடுத்தது எதிர்காலத்தில் எங்களது குடும்பத்தை வழிநடத்தி செல்ல தலைவன் இல்லாமல் போய்விட்டது என்றார்.

அன்றே சொன்னது தமிழ்முரசு
நிவர், புரெவி, அடைமழை என அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 13.57 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கிய சேதமடைந்துள்ளது. இதற்கு இழப்பீடாக ₹32 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கடந்த 18ம் தேதி தமிழ் முரசு நாளிதழில் அழுகிய பயிர்களின் புகைப்படத்துடன் விரிவான செய்தி வெளியிட்டு இருந்தோம். ஆனால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிகா ஒரு நிவாரணம் கொடுத்துவிட்டு பின்னர் கணக்கெடுப்பின் நிவாரணம் கொடுத்திருந்தால் இன்று ஒரு விவசாயியை நாம் இழந்திருக்க மாட்டோம் என்பதே நிதர்சன உண்மை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-school-beach

  ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்