SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஏற்காமல் தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் மோடி: கோவையில் பிரசாரத்தை தொடங்கி ராகுல் காந்தி ஆவேச பேச்சு

2021-01-24@ 00:04:59

திருப்பூர்: ‘‘ஒரே மொழி, ஒரே நாடு என்ற கலாச்சாரத்தை திணிப்பதன் மூலம் தமிழக மக்களை இரண்டாம்தர குடிமக்களாக கருதுகிறார் மோடி’’ என்று ேகாவையில் பிரசாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். மேலும், ‘‘தமிழக அரசை கைக்குள் வைத்திருப்பதைபோல, தமிழக மக்களையும் கைக்குள் வைக்க நினைப்பது நடக்காது’’ என்றும் எச்சரித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார். அதன்படி, ராகுல்காந்தி எம்.பி. நேற்று கோவை வந்து பிரசாரத்தை தொடங்கினார்.

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே அவினாசி ரோடு-சிட்ரா சந்திப்பில், திறந்த காரில் நின்றபடி ராகுல்காந்தி பேசியதாவது:- இந்திய மக்கள் மற்றும் தமிழக மக்களுடைய உரிமையை மோடி பறிக்கிறார். விவசாயிகளின் உரிமைகளை 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக பறிக்கிறார். இந்தியாவில் உள்ள விவசாயிகளை மாபெரும் தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார். அதனால்தான் நாங்கள் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம், விவசாயிகள் பக்கம் நிற்கிறோம். இந்தியாவுக்கு சிறந்த தொழில் அமைப்புகள் தேவைப்படுகின்றன. வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. தமிழக மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. தமிழக இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமாக வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருக்கின்றனர். அதேபோல், தமிழக விவசாயிகளும் சிரமப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்றி, புதிய அரசு அமைக்க, உங்களுக்காக செயல்படுகிறோம். நீங்கள் விரும்பக்கூடிய அரசாங்கத்தை தருவதுதான் எங்களது நோக்கம்.  இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

அதன்பின், நேற்று மாலை திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் திறந்த வேனில் நின்றபடி ராகுல்காந்தி பேசியதாவது: இந்தியாவின் நிலைமையை அனைவரும் அறிவோம். பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்து வருகிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனாவை கையாண்ட விதத்தால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் சூழ்நிலை நன்றாக தெரியும், பொருளாதாரம் என்பது உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், அது  இந்தியாவில் அழிந்து வருகிறது. நாட்டை ஆள்பவர்கள் இந்தியாவின் நிலைமையை அறிய தயாராக இல்லை.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்டுவர பிரதமர் மோடி போராடி வருகிறார். அது என்னவென்றால், ஒரே மொழி, ஒரே நாடு என்ற கலாசாரம். பிரதமர் மோடி, தமிழ்மொழி, கலாசாரத்தை ஏற்காமல் தமிழக மக்களை இரண்டாம்தர குடிமக்களாக கருதுகிறார். தமிழ் மொழி, கலாசாரம், வாழ்க்கை முறை பற்றி அவர் அறியவில்லை. நம் கலாசாரம் அடுத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது. இதுதான் தமிழகத்தின் கலாசாரம், அடையாளம் ஆகும். ஆனால், ஒரே மொழி, ஒரே கலாசாரத்தை பிரதமர் முன்னிறுத்த முயல்கிறார். சுய மரியாதையை சார்ந்து இருப்பவர்கள் தமிழர்கள். தமிழக அரசை கைக்குள் வைத்திருப்பதைபோல, தமிழக மக்களையும் கைக்குள் வைக்கலாம் என நினைக்கிறார்கள். பிரதமரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, நாம் போராடி வருகிறோம்.

உங்கள் கலாசாரத்தை, நாகரிகத்தை காப்பாற்றுவது எனது கடமை. வரும் தேர்தலில் புதிய அரசு அமையும். எளிய, மக்கள் ஏழை மக்களுக்கான அரசாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராகுல்காந்தியின் ஆங்கில உரையை, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழில் மொழி பெயர்த்தார். தமிழக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம்உள்ளிட்ட நிர்வாகிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

* ஜிஎஸ்டியில் சலுகை, பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தொழில்துறையில் ஜி.எஸ்.டி. முக்கிய பங்கு வகிக்கிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறிய தொழில் நிறுவனக்கள் வரை ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்படுகின்றன. தொழில் முனைவோரை நசுக்கும் வகையில் உள்ள ஜி.எஸ்.டி. வரி மாற்றி அமைக்கப்பட வேண்டும். வரி குறைப்பு செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பை அமல்படுத்த சரியான திட்டம் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரியில் நிறைய சலுகை கொண்டு வருவோம். நாடு முழுவதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வரியை கொண்டு வருவதே எங்கள் இலக்கு. பெட்ரோல், டீசல் விலை விண்ைண முட்டும் அளவுக்கு உள்ளது. விலை உயர்வு பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

* சாலையோர கடையில் டீ குடித்தார் ராகுல்காந்தி
கோவை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு சென்ற ராகுல்காந்தி, திடீரென காரை விட்டு கீழே இறங்கினார். சாலையோரம் இருந்த ஒரு டீக்கடையில், டீ குடித்துவிட்டு, அங்குள்ள மக்களிடம் சுவாரஸ்யமாக பேசினார். இது, காண்போரை வியக்க வைத்தது.

* தோடர் இன மக்களுடன் நடனம்
கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று திறந்த காரில் சென்றபடி தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அப்பகுதி மக்கள் கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர், கருமத்தம்பட்டி சென்றார். அங்கு, நீலகிரி மாவட்டத்தில் இருந்து வந்த ‘தோடர்’ இன மக்கள் நடனம் ஆடி, ராகுல்காந்தியை வரவேற்றனர். இதை பார்த்ததும், ராகுல்காந்தி தனது காரை விட்டு இறங்கி, பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறி தோடர் இன மக்களுடன் கைகோர்த்து, சிறிது நேரம் உற்சாகமாக நடனம் ஆடினார். இதைப்பார்த்ததும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ். அழகிரியும் ராகுலுடன் இணைந்து நடனம் ஆடினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-school-beach

  ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்