மீண்டும் குட்கா
2021-01-21@ 00:27:39

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் குட்கா வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் பிரதமர் மோடியுடன் டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நேரத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பது தமிழக அரசியலில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 2013ல் தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடை செய்யப்பட்டாலும் ஆளும்கட்சியினர் மற்றும் போலீசார் ஆதரவுடன் விற்பனை தொடர்ந்தது. இதுதொடர்பாக தற்போதைய அமைச்சர், முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரித்தது. பலகோடி முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் சட்ட விரோத பணிப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் 2013 முதல் 2016 வரை மட்டும் ₹634 கோடிக்கு பணப்பரிமாற்றம் செய்து இருப்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது. இதில் ₹246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டன.
பலகட்ட விசாரணை இழுத்தடிப்பிற்கு பிறகு தற்போது 31 பேர் மீது 263 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்பினர் மத்திய அரசின் விரல் அசைவுக்கு ஏற்றார்போல் தான் நடந்து கொள்வார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக, பா.ஜ தொகுதி பங்கீடு இழுபறி நிலையில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில், திடீரென அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை அதுபோன்ற ரகம்தானா என்பதை நிச்சயம் காலம் பதில் சொல்லும். ஏனெனில் ஏராளமான ஆவணங்கள், வாக்குமூலங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்தபின்னும், இதுதொடர்பாக பலரை விசாரித்த பின்னும் குட்கா ஊழல் வழக்கை முழுமனதுடன் விசாரிக்க இன்று வரை சிபிஐ தயக்கம் காட்டி வருகிறது.
நேர்மையான விசாரணை நடந்து இருந்தால், இத்தனை ஆண்டு இழுபறி தேவையே இல்லை. இந்த வழக்கை அப்போதே முடிவுக்கு கொண்டு வர சிபிஐயால் முடிந்து இருக்கும். மத்திய அரசை பொறுத்தவரையில் தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் நபர்களின் தகவல்களை கசியவிடுவது வழக்கம். அப்படி மிகச்சிலருக்கு மட்மே தெரிந்த ராணுவ ரகசியங்கள் அர்னாப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறதென்றால், அதுபற்றிய முழு உரையாடல் விவரம் வெளியே வந்தும், எதிர்கட்சிகள் கேள்வி கேட்டும் வாய்திறக்க மறுக்கிறார்கள் என்றால் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் ஆதாயத்தின் பின்னணி கொண்டது என்பதை அப்பட்டமாக அறிய முடியும். அதுேபால் தான் நீண்ட காலத்திற்கு பிறகு குட்கா வழக்கு தேர்தலுக்காக மீண்டு வந்திருக்கிறது. அவ்வளவுதான்.