கேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
2021-01-20@ 14:30:49

குன்றத்தூர்: சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (55). இவர் அதே பகுதியில் கேபிள் டிவி தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் மகன் தானேஸ்வரனுடன் பைக்கில் மதனந்தபுரம் பிரதான சாலையில் சென்றபோதுஆட்டோ மற்றும் பைக்கில் வந்த மர்ம கும்பல் பொன்னுரங்கத்தை வழிமறித்து சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் பொன்னுரங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மகன் தானேஸ்வரனுக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் சென்று படுகாயம் அடைந்த தானேஸ்வரனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பொன்னுரங்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், கொலை தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த யாசிம் (45), சதாம் உசேன் (25), உமர் பாஷா (31), காதர் பாஷா (48), விக்னேஷ்வரன் (23), முனுசாமி (20), காலா (23), சுரேஷ் (24) மற்றும் அனீபா (28) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கூறியதாவது; பூந்தமல்லி அருகே ஒரே இடத்தை யாசிமும் பொன்னுரங்கத்தின் தங்கையும் வாங்கியுள்ளனர். பின்னர் இருவரும் அந்த இடம் தங்களுக்குதான் சொந்தம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் யாசிம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. தங்களை தீர்த்துக்கட்ட பொன்னுரங்கம் முடிவு செய்ததை முன்கூட்டியே அறிந்தோம். இதனால் நாங்கள் முந்திக்கொண்டு பொன்னுரங்கத்தை கொலை செய்தோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிய வாலிபர்...! சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிதிருத்தம் செய்த காவல் ஆய்வாளர்
மந்த கதியில் சாலை பணி போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
பவித்திரம் ஏரிக்கரையில் சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பழுதடைந்த குடமுருட்டி பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி-இடித்துவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல்
தஞ்சை மாநகர சாலையில் மெகா பள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அமராவதி அணை பூங்காவில் புதர்கள் வெட்டி அகற்றம்