SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்ல துவக்கம்

2021-01-20@ 02:02:56

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கவில்லை. தற்போது, கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளதால், 10 மற்றும் 12ம் வகுப்புகள் மட்டும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. சுமார் 300 நாட்களுக்கு பிறகு நேற்று இவ்விரு வகுப்புகளும் மீண்டும் தொடங்கியதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர். அரசும் பள்ளிகள் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதால், மக்கள் கருத்து கேட்டு இவ்விரு வகுப்புகளும் துவக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பிளஸ் 1 வகுப்புகளில் குரூப் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. 12ம்  வகுப்பு மாணவர்கள் கல்லூரிகளில் குரூப் தேர்வு செய்ய  வேண்டும். எனவே அவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி மதிப்பெண்  வழங்க வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், வகுப்புகள் செயல்பட தொடங்கியுள்ளன.

மீதமுள்ள வகுப்புகள் திறப்பு எப்போது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் அரசு அவசரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் மக்கள் மத்தியில் நிலவி வந்த கொரோனா அச்சம் தடுப்பூசி மூலமாக கொஞ்சம் குறைந்துள்ளதால், இந்த பள்ளி திறப்பு நடவடிக்கையும் மக்கள் மனதில் தைரியத்தை விதைத்துள்ளது. ஆனால் தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக மாணவ, மாணவிகளின் நிலை ஆகிவிடக்கூடாது. எனவே அரசு இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பள்ளி நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல், மாணவர்கள் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வந்து அதை மற்ற நண்பர்களுக்கு பகிராமல் சாப்பிடுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தவறாமல் கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு கண்டிப்பாக தினமும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்திரைகளை தொய்வின்றி வழங்க வேண்டும். இதுபோன்ற கண்காணிப்பில் எக்காரணம் கொண்டும் அலட்சியம் காட்டக்கூடாது. பள்ளி தொடங்கிய சிறிது காலம் இதை கடைபிடித்துவிட்டு பின்னர் ஏனோதானோவென்று பள்ளி நிர்வாகங்கள் இருந்துவிடக்கூடாது. அதற்கு அரசும் உடந்தையாகிவிடக்கூடாது.
பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று அதிகாரிகளை உஷார்படுத்தி பள்ளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. தற்போது பள்ளிக்கு ெசல்லும் மாணவ, மாணவிகளின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு கொரோனா அறிவுரை வழங்கி, அவர்களை தினமும் கண்காணிப்பது அவசியம்.

ஏனென்றால் மாணவ, மாணவிகள் மூலம் கொரோனா பரவினால் மிகப்பெரிய ஆபத்தை அனைவரும் சந்திக்க வேண்டியது வரும். மேலும் எஞ்சியுள்ள 2 மாதத்தில் மாணவர்களால் எந்த அளவு பாடம் கற்று பொதுத்தேர்வை சந்திக்க முடியும் என தெரியவில்லை. அவர்கள் சுமையின்றி தேர்வு எழுதினால் மன ரீதியாகவும் உற்சாகம் அடைவார்கள். இதையும் அரசு கவனத்தில் கொள்வது நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 06-03-2021

    06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்