உயிர்துளியை உணர்வார்களா?
2021-01-18@ 01:39:21

பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீருக்கு தமிழகம் எப்போதுமே போதிய முக்கியத்துவம் தருவதில்லை. மழை பெய்தால் வெள்ளம், பெய்யாவிட்டால் வறட்சி என்பது தமிழகத்தின் தலையெழுத்தாகி விட்டது. கோடைகாலங்களில் மட்டுமின்றி, சில சமயங்களில் பருவமழை காலங்களில் கூட வறட்சி தமிழகத்தில் தாண்டவமாடுகிறது. பண்டைய தமிழர்கள் ‘தவித்த வாய்க்கு தண்ணீர்’ தருவதை புண்ணியமாக கருதினர். ஆனால், இப்போதெல்லாம் குடிநீர் ஒரு விற்பனை பொருளாக மாறிவிட்டது. சுத்தமான தண்ணீரை தேடி அலைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழகம் உள்ளது.
ஆறுகளில் மணல் கொள்ளை, இயற்கையை படிப்படியாக சுரண்டும் சம்பவங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. விளைவு கனமழை பெய்தால் கூட தேக்கி வைக்க நீராதாரங்கள் இல்லை. தென்மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக பொங்கலை ஒட்டி பெய்த மழை அனைவருக்கும் ஒரு படிப்பினையை உருவாக்கி இருக்கும். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் கரை புரண்டோடிய வெள்ளம், கேட்பாரற்று கடலில் சென்று கலந்தது. இதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் நீர்தேக்கும் திட்டங்கள் அனைத்துமே பெயரளவில் உள்ளது.
குறிப்பாக இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணியாறு - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் பேராதரவோடு அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அத்திட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. விளைவு பல்லாயிரக்கணக்கான கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது. சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் அணைகளால் ஓரளவுக்கு மேல் தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. மன்னர்கள் ஆட்சிக்காலம் பொற்காலமாக திகழ முக்கிய காரணம், மாதம் மும்மாரி பெய்த மழை மட்டுமல்ல. மன்னர்கள் கட்டிய அணைகள், கண்மாய்கள், குளங்கள், தடாகங்கள், கேணிகள் நீர்தேக்க வல்லமை பெற்றவையாக இருந்தன.
அதில் தேங்கிய தண்ணீரை கொண்டு வறட்சி காலங்களை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. ஆனால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உருப்படியான நீர்மேலாண்மை திட்டங்கள் எதுவும் இல்லை. அதிமுக ஆட்சியின் புகழ்பரப்பும் குடிமராமத்து திட்டங்கள் பல்வேறு குறைபாடுகளை கொண்டவையாக உள்ளன. குளங்களில் கேட்பாரற்று கிடக்கும் மண்ணை அள்ளினால் மட்டும் போதுமா?. குளங்களில் கரைகள் சீரமைப்பு, நீர்தேக்க திறனை அதிகரிப்பது, மடைகள் சீரமைப்பு உள்ளிட்ட மற்ற விஷயங்களை குடிமராமத்து திட்டம் நினைவில் கொள்ளவில்லை.
இதன் விளைவாக தென்மாவட்டங்களில் சமீபத்தில் கனமழை கொட்டியும், குளங்களுக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் மெனக்கெடவில்லை. குளங்கள் நிறைந்து உடைந்தால், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என பொதுப்பணித்துறை பொறுப்பற்ற பதிலை அளித்தது. ஆண்டுக்கு ஆயிரம் இலவசங்களை அறிவிக்கும் ஆட்சியாளர்கள், அணை கட்டுமானம் உள்ளிட்ட நிரந்தர திட்டங்கள் குறித்து ஒருபோதும் சிந்திப்பதில்லை. நம் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகம் போன்றவை தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்தேக்க திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் தமிழகம் கிடப்பில் உள்ள திட்டங்களை கூட நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 926 மிமீ மழை பொழிகிறது. ஆனால், மழைநீரை குடியிருப்புகளிலும், கடலிலும் வெள்ளமாக பாய்வதையே பார்த்து வருகிறோம். அதை நீர்நிலைகளில் தேக்கிவைக்க வேண்டியது அவசியம். மழைத்துளி ஒவ்வொன்றும் உயிர்துளி என்பதை நாம் மறக்கலாகாது.