வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனை
2021-01-18@ 00:11:36

சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து வருகிற 27ம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், அவரது ஆதரவு போலீஸ் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றிய சசிகலா, திடீரென்று நீதிமன்ற தீர்ப்பு வந்ததால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார். அவரது சிறை தண்டனை நாட்கள் வருகிற 27ம் தேதியுடன் முடிகிறது. இதனால் அன்று அவர் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது வருகை அதிமுகவில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. அவரது ஆதரவு அமைச்சர்கள் என்று கூறப்படும் செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அமைதியாக உள்ளனர். அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியும் குரல் கொடுத்தார். மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அமைதியாக உள்ளனர். சசிகலா விடுதலையாகும்போது அதிமுகவில் சலசலப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், சசிகலாவை தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சந்திக்கிறார்களா என்பதை மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தற்போதைய போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலர் வாரம் ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ராதாகிருஷ்ணன் சாலையில் முன்னாள் உளவுத்துறை ஐஜி ஒருவரின் ஏற்றுமதி நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரது தலைமையில் அதிகாரிகள் கூடுவதாக கூறப்படுகிறது. அதில் ஒரு ஏடிஜிபி, சென்னை மாநகரத்தில் பணியாற்றும் ஒரு கூடுதல் கமிஷனர் மற்றும் ஐஜி அந்தஸ்தில் 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் சில எஸ்பிக்கள் இந்த அலுவலகத்தில் கூடுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வாரம் ஒரு முறை பார்ட்டி என்ற முறையில் கூடுவதாகவும் கூறப்படுகிறது.
அப்போது சசிகலா விடுதலை குறித்தும், அவரால் பல போலீஸ் அதிகாரிகள் நல்ல பதவிகளை அடைந்ததாகவும், தற்போது ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றினால் மட்டுமே மீண்டும் தாங்கள் அதிகாரத்துக்கு வர முடியும் என்று அதிகாரிகள் சிலர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா விடுதலையானவுடன் அவருக்கு ஆதரவாக அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சமுதாய தலைவர்களை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து சசிகலாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது போலீஸ் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Coming up on the 27th release ? Sasikala support officials secret consultation வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனைமேலும் செய்திகள்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு
தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி: 2 பேர் கைது
தாம்பரம் அருகே சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு
தொலைதொடர்பு ஊழியர்களின் வீட்டுமனை திட்டத்திற்காக வாங்கிய நிலத்தை தனியாருக்கு விற்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நெடுஞ்சாலை துறையில் கணக்காளர் பணி நியமன முறைகேடு தமிழக அரசு நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு