SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதானி குழுமத்தின் பேராதிக்கத்துக்கு தோள் கொடுத்து வரும் பிரதமர் மோடி அரசு :தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்

2021-01-17@ 11:04:20

சென்னை : சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை தமதாக்கிக் கொண்ட அதானி குழுமம், தற்போது அதனை பல ஆயிரம் மடங்கு பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனைகிறது. அதற்குச் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைக் கோரியுள்ளது.
அதானி குழுமத்திற்குச் சேவை செய்வதே தனது தலையாயக் கடன் என, துளியும் கூச்சமின்றி அதானிக்கு பணிவிடை ஆற்றிவரும் மோடியின் தலைமையிலான 'கார்ப்பரேட் அரசும்', தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மோடியின் 'பொம்மலாட்ட அரசும்' கூட்டுசேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன.

அதன்படி, சட்டப்படியான சில சடங்குகளைச் செய்யும் வகையில், வரும் ஜனவரி-22 அன்று அதற்கான ' பொதுமக்கள் கருத்துக் கேட்பு' கூட்டத்தை நடத்தவுள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள், பழங்குடிகள் மற்றும் பிற பொதுமக்கள் மட்டுமின்றி, அனைத்துத்தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து அதற்குத் தீவிரமான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதாவது, இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தக் கூடாது எனக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அப்பகுதிவாழ் மீனவர்கள் மட்டுமின்றி, அனைத்துச் சமூக பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஏறத்தாழ நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான அளவில் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவுள்ளனர். அத்துடன், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலையும் தூற்று விரிவுப்படுத்த உள்ளனர்.

இதனால், கடல்நீரானது நிலப்பகுதியில் உட்புகும் பேரிடர் நிகழ வாய்ப்புள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் சென்னை பெருநகரத்துக்கும் பேராபத்து ஏற்படலாம். மீன்வளம் அழியும். கடல்வாழ் பன்ம உயிரினங்களும் அழிந்தொழியும். பொதுமக்களின் புலப்பெயர்வு நடக்கும். அதாவது, எண்பதுக்கும் மேலான கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும்.

இதனால், லட்சகணக்கான ஏழை எளிய மக்களின் இயல்பான வாழ்வு சீர்குலைந்து சிதையும். சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். அரசு நடத்தும் பிற துறைமுகங்களின் செயற்பாடுகள் படிப்படியாக முடங்கும்; காலப்போக்கில் அவை முற்றாக மூடப்படும்.

இத்தகைய பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ள இத்திட்டத்துக்கு மையஅரசு அனுமதியளிப்பதை பொதுமக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து இதனை முறியடிக்க முன்வரவேண்டும்.

வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கத்துக்கு முழுமூச்சாகத் தோள்கொடுத்துவரும் மோடியின் 'கார்ப்பரேட் அரசு' , தமிழகத்தில் ஏற்கெனவே இயங்கிவரும் அரசு துறைமுகங்களை முறையாகவும் வெற்றிகரமாகவும் இயங்க ஆவனசெய்ய வேண்டுமெனவும் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்