பொங்கல் பரிசு
2021-01-16@ 04:09:10

சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி தமிழக ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தரும் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த நடராஜன், டெத்பவுலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேவிட் வார்னர் பந்துவீச்சாளர் நடராஜன் மீது அபார நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றிய நடராஜன் சன்ரைசர்ஸ் அணியில் பந்துவீச்சாளராக ஜொலிக்க தொடங்கினார். முக்கிய பேட்ஸ்மேன்களை யார்க்கர் பந்து மூலம் ஆட்டமிழக்க செய்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்த திறமையால் முதன் முறையாக ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அணியில் இவரது திறமையை காண்பிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நடராஜன், அவ்வப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையில் முத்திரை பதித்து வந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா தனது தொடர் நாயகன் விருதை நடராஜனுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இதன்பிறகும் டெஸ்ட் தொடரில் நடராஜன் தாக்குப்பிடிப்பாரா? உள்நாட்டு போட்டிகளில் அதிகம் விளையாடாத வீரர் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட்போட்டியில் பூம்ரா காயமடைந்து விலகவே, அந்த வாய்ப்பு பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடராஜன் ஆஸ்திரேலியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில், சிறப்பாக ஆடி வந்த லாபுேஷன்-மேத்யூ வேட் கூட்டணியை உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45 ரன்கள், 87 பந்துகள்) ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் லபுசாக்னே(108 ரன்கள், 204 பந்துகள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.
இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டியுள்ள ஐசிசி, ஆஸ்திரேலியா பயணத்திலேயே ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன் தான் என்று குறிப்பிட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியில் நடராஜன் இன்னும் பல சாதனைகளை படைத்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், ரசிகர்களுக்கும் பெருமையும், உற்சாகமும் சேர்க்க வேண்டும் என்பதே தமிழர் திருநாளாம் பொங்கல் தருணத்தில் கிரிக்கெட் ஆர்வலர்களின் வாழ்த்தாகவும், எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
எச்சரிக்கை தேவை
கடன் சுமை
பாடம் புகட்டுவார்கள்
ஜனநாயக விரோதம்
தெளிவுபடுத்துமா ஆணையம்
விழிப்புணர்வு தேவை
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்
24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்