SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண் அதிகாரிகளையே அசர வைத்து கல்லா கட்டும் மூன்று பெண் அதிகாரிகளின் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2021-01-14@ 00:33:41

‘‘ஆணுக்கு பெண் சமம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது... வரும் தகவல்கள் எல்லாம் லஞ்சம் வாங்குவதில் ஆண்களை விட பெண்களே அதிகம் அள்ளுகிறார்கள் என்பதை கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘முதல்ல காக்கி பெண் அதிகாரியை பற்றிச் சொல்றேன் கேளு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல சத்தான பெயர் கொண்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர். இவரிடம் பணம் கொடுத்தால் எந்த வேலையையும் கச்சிதமாக செய்து முடிப்பாராம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உள்ளூர் போலீசாரும், தனிப்படை போலீசாரும் சேர்ந்து ஆட்டோவில் வந்த 3 திருட்டு வழக்கு குற்றவாளிகளை பிடித்தனர். அவர்களிடம் இருந்து அண்டா, பித்தளை பாத்திரங்கள் பறிமுதல் செய்துள்ளனர். மூன்று பேரையும் கொத்தாக பெண் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தனர். அவர்களை சுளுக்கெடுத்து வழக்கு பதிவு செய்யாமல்... மத்தியஸ்தர் ஒருத்தரை வைத்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஆட்டோ, பாத்திரங்கள் மற்றும் 3 திருடர்களையும் விட்டுவிட்டாராம். பெண் இன்ஸ்பெக்டருக்கு தோஸ்த்தான திருடர்கள் அதே பகுதியில்... இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து திருடினாங்களாம். இந்த திருட்டை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தான் ஏற்கனவே இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்ட திருட்டு கும்பல் என்பது தெரியவந்ததாம். அந்த கும்பலை தனிப்படை போலீசார் பிடித்து தங்கள் பாணியில் கவனித்துள்ளனர். அப்போது அவர்கள் தெனாவட்டாக, எங்களை அடிக்க கூடாது.. எங்களை பெண் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படையுங்கள், அவரிடம் நாங்கள் அனைத்து குற்றங்களையும் ஒத்துக் கொள்கிறோம் என்று கூறினார்களாம். அது சரி, பழைய திருட்டு வழக்கில் நீங்கள் எப்படி வெளியே வந்தீங்க என்று போலீசார் கேட்க... அது பெரிய விஷயம் இல்ல சார்... வழக்கு பதிவு செய்யாமல் 20 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு இன்ஸ்பெக்டர் எங்களை விடுவித்தார்’ என்று பெருமையுடன் கூறினர். இந்த தகவல் எஸ்பி, ஏஎஸ்பிக்கு தெரியவந்தது. உடனடியாக ஏஎஸ்பி திருட்டு கும்பலிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஏற்கனவே நடந்த குட்டு அம்பலமானது. இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற ஏஎஸ்பி, பெண் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை அனுப்பி உள்ளார். இந்த இன்ஸ்பெக்டர் ரவுடி கும்பல், கஞ்சா, கள்ளச்சாராய கும்பலுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறாராம். திருடர்களிடமே கைவரிசை காட்டிய இந்த தில்லு பெண் இன்ஸ்பெக்டர் பற்றித்தான் இப்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது... இதை கேட்ட பக்கத்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிசிடிவி கேமரா இருக்கும்போதே இவ்வளவு தில்லாக லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியின் செயலை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘வெயிலூர் பற்றி சொன்னீங்க... கோவையில இதை விட இன்னொரு பெண் இன்ஸ்பெக்டர் கரன்சியிலேயே குளிக்கிறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், அன்றாடம் காசு குவிப்பதில் படு கில்லாடியாம். சமீபத்தில் ஒரு இளம்பெண், இவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், ‘‘எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. ஆனால், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார். எனக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட 120 பவுன் நகை, மேலும் 20 பவுன் நகை ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, என்னை வீட்டை விட்டு துரத்துகிறார்’ என்று அழுது புலம்பி இருக்கிறாராம். இதுபற்றி தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அந்த பெண் இன்ஸ்., குற்றம்சாட்டப்பட்ட நபரை நேரில் அழைத்து, இரண்டு லகரம் கறந்துவிட்டு அனுப்பி விட்டார். ‘‘நீ ஓடுற மாதிரி ஓடு... நான் பிடிக்கிற மாதிரி பிடிக்கிறேன்..’ எனக்கூறி வழியனுப்பி விட்டார். புகார் கொடுத்து பத்து நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லை. புகார் கொடுத்த அந்த இளம்பெண், காவல் நிலையத்துக்கு நடையாய் நடக்கிறார்... பெண் இன்ஸ்பெக்டரோ... இன்னொரு கேஸ் வந்தால்...இரண்டாவது மாடிக்கு தளம் போட்டுவிடலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மதுவில் மயங்கும் மதுரையை பற்றி சொல்லுங்க... இதுலேயும் ஒரு பெண் அதிகாரி தான் சம்பந்தப்பட்டு இருக்காங்களாமே...’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒவ்வொரு பண்டிகை நாளிலும் அதிக விற்பனை காட்டி அசத்தி வருகிறது தூங்கா நகரத்தின் ‘மது மண்டலம்’. தென்பகுதியின் 9 மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் 1,600க்கும் அதிகமான கடைகள் இருக்கிறதாம். இந்த மண்டல தலைமையில் ‘இரு சினிமாக்களின் தலைப்பைக் கொண்ட’ அதிகாரி ஒருவர் இருக்கிறார். இவரது பெயரைப் பயன்படுத்தி மேற்பார்வை புரிகிற இருவர், மண்டலத்திற்கு உட்பட்ட கடைகள்தோறும் வலம் வந்து அடாவடி வசூலில் ஈடுபடுவதாக பணியாளர்கள் புலம்புகின்றனராம். தலைமையானவர் பெயரைச் சொல்லிதான் இரட்டையர் கூட்டணி அடாவடி வசூல் செய்கின்றனராம். இருவருமே ஆளுங்கட்சியினருக்கு ரொம்பவும் நெருக்கமாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம். காரணம் கேட்டால் எல்லோரையும் நாங்க கவனிக்கிறோம் இல்ல என்று சிரித்தபடி சொல்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விஷயம் இல்லாம போய்.. வசமாக சிக்கிக் கொண்ட தலைவர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கட்சி நடத்தி வரும் நடிகர் ஒருவர் கோவையில் பிரசாரம் துவக்குவதற்கு முன்பாக, கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தொழில் முனைவோர் சந்திப்பு நடத்தினார். அவர் எதிர்பார்த்தபடி கூட்டம் வரவில்லையாம். போதிய தகவல்களும் கிடைக்கவில்லை. இறுதியில், இடதுசாரி கட்சிகளின் ஆதரவில் இயங்கும் சில தொழில் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர். அப்போது, அவர்கள், தொழில்துறையில் எல்லாம் கெட்டுக்கிடக்கிறது. நீங்கள் இவற்றை முழுமையாக புரிந்துகொள்வதற்குள் எல்லாம் மாறிவிடும் என கறாராக பேசினர். இது, நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாம். விஷயம் தெரியாததால் பாதியில் கூட்டத்தை நிறைவு செய்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-03-2021

  02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்