SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக ஜன.13 முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

2021-01-06@ 00:21:45

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 13ம் தேதி தொடங்கப்படும்’ என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் மிரட்டிய கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பல நாடுகளிலும் படிப்படியாக பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க மத்திய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரஜெனகா நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து தயாரித்த ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கும் கடந்த 3ம் தேதி அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி தரப்பட்டுள்ளது.
அதோடு, நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைகள் நடத்தப்பட்டன. தடுப்பூசியை சேமித்து வைத்துள்ள இடத்திலிருந்து எடுத்து வருவது, பயனாளர்களின் அடையாள ஆவணங்களை சரிபார்த்து அவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்றவை குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டன. தடுப்பூசியை போட 96 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி ஒத்திகையின் மூலம் பெறப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார்.  அப்போது அவர், ‘‘ஒத்திகையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவசரகால அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த 10 நாளில் கொரோனா தடுப்பூசியை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. ஆனாலும், இது குறித்து தேதியை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. இதுதொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்,’’ என்றார்.

எனவே, கடந்த 3ம் தேதி இரு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், வரும் 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்ஸ்கள் உட்பட ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், அதைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், ஆயுதப் படையினர், போலீசார் உட்பட 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பிற உடல் உபாதைகள் இருக்கும் 27 கோடி பேருக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, 6.6 கோடி டோஸ் கோவிஷீல்டு மருந்துகளை, அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள சீரம் நிறுவனத்திடம் இருந்து வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கர்னல் (அரியானா), கொல்கத்தா, மும்பை ஆகிய 4 நகரங்களில் முதன்மை சேமிப்பு மையங்களும் அதுதவிர, 37 மாநிலங்களில் இதர சேமிப்பு மையங்களும் உள்ளன. இவைகளில் இருந்து தடுப்பூசி எடுத்து, தடுப்பூசி போடும் முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

'சண்டை ஓய்ந்து சமாதானமாகின'
கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்கவும், உற்பத்தி செய்யவும் உரிமம் பெற்றுள்ள சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதர் பூனவாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘உலகில் 3 கொரோனா தடுப்பூசியை தவிர மற்றவை தண்ணீருக்கு சமம்,’’ என்றார். ஏற்கனவே, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் நம்பகத்தன்மையில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படும் நிலையில், பூனவாலாவின் பேச்சு சர்ச்சையானது. அவசரகால அனுமதி பெற்ற இரு நிறுவனங்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இவ்விரு நிறுவனங்களும் தற்போது சமாதானமாகி உள்ளன. தடுப்பூசி வழங்கும் பணியை சீராக தடையின்றி செய்திட இணைந்து செயல்படுவதாக நேற்று கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

'கோ-வின் ஆப்பில் பதிவு செய்யலாம்'

தடுப்பூசி போட வருபவர்களின் தகவல்கள் அனைத்தையும் சேமித்து, தடுப்பூசி பணியை முழுமையாக கண்காணித்திட ‘கோ-வின்’ என்ற பிரத்யேக மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பயனாளர்கள் தங்களுக்கென பிரத்யேக சுகாதார அடையாள எண் (ஐடி)
பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்