ஈழத் தமிழர்களின் சுயமரியாதையை பறிக்கும் 'மாகாண ஒழிப்பு' திட்டத்தை கைவிடும்படி இலங்கைக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுக்க வேண்டும் : டி.ஆர்.பாலு
2020-12-31@ 10:57:46

சென்னை : ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் 'மாகாண ஒழிப்பு' திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும்; அது, இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் அறிக்கை.
ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன் - 'இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்' என்று இலங்கை அரசு அறிவித்து - அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
'ராஜபக்சே சகோதரர்கள்' புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் - அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசும் கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-ஆவது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப் படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ - ஏன், நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம் - அதுவும் 13-ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி - ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் - அப்படியொரு முடிவு, 'இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்' என்றும், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி
எம்ஜிஆர் நகர் மயானம் ஓராண்டு இயங்காது
பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை ஒதுக்க அரசு உத்தரவு
நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்