SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணையத்துக்கு கண்டம்!

2020-12-29@ 16:03:31

நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் என்பதே அபூர்வம். நம்முடைய தாத்தாக்கள் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால் -
இன்று?

பிறந்த குழந்தையில் தொடங்கி குடுகுடு தாத்தா வரை யாரை வேண்டுமானாலும் இக்கொடிய உயிர்க்கொல்லி நோய் பாதிக்கிறது.‘‘பொதுவாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான அறிகுறியான உடல் இளைப்பு, வாந்தி, கட்டி போன்றவை நமக்கு தென்படும். ஆனால் கணையத்தில் ஏற்படும் புற்றுநோய் முற்றிய நிலைக்கு பிறகு தான் நம்மால் அதன் பாதிப்பையே கண்டறியமுடியும்’’ என்கிறார் ஜெம் மருத்துவமனையின் இரைப்பை மற்றும் புற்றுநோய் நிபுணர் டாக்டர் செந்தில்நாதன்.‘‘கணையம் நம் வயிற்றின் பின்பகுதியில் இருக்கும் ஒரு உறுப்பு. இது ஒரு குஷன் போன்ற அமைப்பில் இருக்கும். அதாவது நம்முடைய வயிறு, குடல், கல்லீரலுக்கு பின்னாடி தான் கணையம் இருக்கும். அறுவை சிகிச்சை செய்யும் போது கூட நாம் இதை நேரடியாக பார்க்க முடியாது. குடலை எல்லாம் விலக்கிய பிறகு தான் பார்க்கலாம். அதனால் தான் கணையத்தில் வலி ஏற்பட்டாலும் வலி முதுகு பக்கம் தான் ஏற்படும்.

கணையம் இரண்டு விதமாக செயல்படும்.

 எண்டோகிரைன் பான்கிரியாஸ் : கணையத்தின் முக்கிய வேலை இன்சுலின் சுரப்பது. அவ்வாறு சுரக்கும் இன்சுலின் நேரடியாக  ரத்தத்தில் கலந்திடும். இன்சுலின் சுரப்பதில் பிரச்னை ஏற்பட்டால் நீரிழிவு பிரச்னை ஏற்படும். நீரிழிவில் இரண்டு வகை. கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்கவில்லை என்றால் அதனை டைப் 1 நீரிழிவு நோய் என்று குறிப்பிடுவோம். கணையத்தில் இன்சுலின் சுரக்கும் ஆனால் அதற்கான வேலையினை செய்யாது. இன்சுலின் ரத்தத்தில் கலக்காது. அதனால் இன்சுலின் தேவையான உறுப்புகளுக்கு சென்றடையாது. இது டைப் 2 டயபெட்டிக். நம்மில் முக்கால்வாசி பேர் டைப் 2 டயபெட்டிக் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எக்சோகிரைன் பான்கிரியாஸ் : கணையத்தில் இருந்து வெளியாகும், உமிழ்நீர் செரிமானத்திற்கு உதவும். ஒரு தனி டியூப் மூலம் கணையத்தில் இருந்து குடலுக்கு சென்று அங்கு செரிமான வேலையை அந்த உமிழ்நீர் செய்து வரும். அந்த உமிழ்நீர் சரியாக சுரக்கவில்லை என்றால் செரிமான பிரச்னையில் சிக்கல் ஏற்படும். அதாவது நாம் சாப்பிடும் கொழுப்புள்ள உணவுகள் மட்டுமில்லாமல் இதர உணவுகளும் சரியாக செரிமானமாகாது. மலம் எண்ணெய்  திரவம் போல் வெளியாகும்.

கணையத்தில் தொற்று ஏற்பட்டால் இந்த இரண்டு பிரச்னையான டைப் 1 டயபெட்டிக் மற்றும் செரிமான பிரச்னை ஏற்படும். கணையத்தை பொருத்தவரை அது சாதாரணமாக இருக்கும் வரை உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அதில் நோய் தொற்று ஏற்பட்டால் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. அது எவ்வாறு நிகழ்கிறது என்று கண்டறிவது மிகவும் கடினம். அதனால் கணையத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

பொதுவாக கணையத்தில் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பித்த நாளத்திற்கும் கணையத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதனால் பித்தப்பையில் கல் இருந்தால் அது கணையத்தையும் பாதிக்கும். மேலும் மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற காரணங்களும் கணையத்தை பாதிக்கும். இதில் ஏற்படும் சின்ன தொற்று நாளடைவில் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. விளைவு உயிரிழப்பு. காரணம் கணையத்தில் சின்ன பிரச்னை ஏற்பட்டால், அது வீங்கி அதிலுள்ள திரவங்கள் எல்லாம் வெளியேறும். அதன் பிறகு கணையம் செயல்படாமல் போகும்.

கணையத்தின் அமைப்பை தலை, உடல், வால் என மூன்று பாகமாக பிரிக்கலாம். அதில் தலைப்பகுதியில் சின்ன கட்டி ஏற்பட்டால், வாந்தி, மஞ்சள்காமாலை பிரச்னை ஏற்படும். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் எடை கணிசமாக குறையும். உடல் மற்றும் வால் பகுதியில் கட்டி ஏற்பட்டால் அது பெரிய அளவில் வளர்ந்த பிறகு தான் தெரிய வரும்.

அதற்குள் புற்றுநோயின் பாதிப்பு கணையத்தில் பரவி இருக்கும். இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு. அறுவை சிகிச்சை மூலம் கட்டியுள்ள பகுதியினை வேரோடு நீக்கலாம். அதன் பிறகு அது மேலும் பரவாமல் இருக்க கீமோதெரபி, ரேடியேஷன் போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்கள் கண்டிப்பாக வாழ்க்கை முறையிலும் மற்றும் உணவுப்பழக்கங்களில் மாற்றம் செய்வது அவசியம். தவறினால் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சை செய்ய தவறினால் அவர்கள் உயிரோட இருப்பது சில மாதங்கள் மற்றும் வாரங்கள் மட்டுமே!. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். கணையத்தில் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். ஆனால் கணையம் தன் வேலையை செய்யாது. மறுபடியும் அதனை செயல்படுத்த மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

அறிகுறிகள் :
செரிமானப் பிரச்னை ஏற்படும்.
பசி இருக்காது
மஞ்சள் காமாலை ஏற்படும்.
குடலில் அடைப்பு ஏற்பட்டு வாந்தி பிரச்னை ஏற்படும்.
உடல் இளைத்து, வயிறு வீங்கி ரொம்ப மெல்லியதாக காட்சியளிப்பர்.

இது போன்ற பிரச்னை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி கணையத்தில் என்ன பிரச்னை என்று கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு எடுக்காத பட்சத்தில் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அனைவரும் சாதாரண வாழ்க்கையினை வாழலாம். அதே சமயம் அவர்கள் சாப்பிடும் உணவிலும் கட்டுப்பாடு மிகவும் அவசியம். குறிப்பாக சத்துள்ள உணவினை சாப்பிட வேண்டும்.

தடுக்க என்ன வழி?
மது மற்றும் புகை பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
கணையத்தில் கல் ஏற்படக்கூடிய உணவினை தவிர்க்க வேண்டும். கணையத்தில் கல் பாதிப்பு ஏற்பட்டால் அது நாளடைவில் புற்றுநோயாக மாறும்.
கெட்டுப்போன கணையம், அதாவது கணையம் சுருங்கி போய் இருந்தாலும், அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
சரிவிகித உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறுவை சிகிச்சையினை லேப்ரோஸ்கோபி மூலம் செயல்படுத்தப் படுவதால் ஆபரேஷனுக்கு பயப்பட அவசியமில்லை” என்கிறார்
டாக்டர் செந்தில்நாதன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்