SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு அமல்படுத்துமா?

2020-12-04@ 00:09:57

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்நிலையங்களில், அடுத்தாண்டு ஜன. 27ம் தேதிக்குள் சிசிடிவி கேமராவை பொருத்துமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்ததாக கூறி, வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும், சாத்தான்குளம் ேபாலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்தனர்.

இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 10 பேர் வரை கைதாகி சிறையில் உள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்தியாவில் 2009 - 2015ம் ஆண்டு வரை, சுமார் 600 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு இந்தியா முழுவதும் 1,731 பேர் காவல்துறை கஸ்டடியில் இறந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போலீசார் விசாரணையின் உண்மைத்தன்மையை அறிய, காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டுமென்ற கருத்து நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது. இந்தச்சூழலில்தான், நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப் மற்றும் அனிருத்தா போஸ் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், ‘‘நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

அதுகுறித்த துறை சார்ந்த அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும். இதனை வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவு யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தக்கூடியது. இதுகுறித்து மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை நீதிமன்றம் நிச்சயமாக கண்காணிக்கும்’’ என அதிரடியாக  உத்தரவிட்டு, ‘‘வழக்கு மீண்டும் ஜனவரி 27ம் தேதி பட்டியலிடப்படும் போது அதுகுறித்த அறிக்கையை மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளபோது, பெரும்பாலான காவல்நிலையங்களில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதே நிலை பிற மாநிலங்களிலும் தொடர்கிறது. இதனால் வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்படுவது, சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2013ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா வைக்கப்படுமென தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் ஊழியர்கள் பணி நேரத்தின்போது இல்லாதது, லஞ்சம் வாங்குவது, பணிகளை இழுத்தடிப்பு செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. காவல்நிலையங்களைப் போல அரசு அலுவலகங்களிலும் சிசிடிவியை கட்டாயம் பொருத்தி கண்காணிக்க வேண்டும். இது அரசு இயந்திரம் இயல்பாக செயல்படுவதற்கு வழி வகுக்குமென்பதே, பொதுமக்களின் எண்ணமாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்