எச்சரிக்கை தேவை
2020-12-03@ 00:04:14

நிவர் புயல் பீதி அடங்கிய அடுத்த சில நாட்களில், புரெவி புயல் சின்னம் உருவாகி தமிழக மக்களை அச்சத்தில் தள்ளி உள்ளது. குறிப்பாக, தென்தமிழகத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்ட மக்கள் கடந்த சில நாட்களாகவே பீதியில் உள்ளனர்.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி உள்ளது. ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது, நாளை (டிச. 4) அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும். இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
புயலானது இலங்கை அருகே திரிகோணமலையை கடந்து இன்று காலை மன்னார் வளைகுடா வழியாக, நாளை (டிச. 4) அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையில் தமிழக கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட 6 மாவட்டங்களிலும் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 7ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மீனவ குடியிருப்புகளை நோக்கி அலை சீற்றமெடுத்துள்ளது. இதனால் மீனவ குடும்பங்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடற்கரையோர சாலைகள், கட்டிடங்கள் அரிக்கப்பட்டுள்ளது. படகுகளும் பலத்த காற்றுக்கு சேதமடைந்து வருகின்றன. மணிக்கு 60 - 80 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை உள்ளதால், மக்கள் அவசியம் ஏற்பட்டாலொழிய வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்களை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம். மின்கம்பங்கள் உள்ள பகுதிகளில் கவனமாக செல்ல வேண்டும். குடிசை மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் தங்குவதை தவிர்த்தல் நல்லது. மண் சரிவால் பாறைகள் உருளும் ஆபத்து உள்ளதால், கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ‘ரெட் அலர்ட்’ மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினரை தயாராக வைத்திருக்க வேண்டும். நிவர் போல கனமழை எச்சரிக்கையோடு நகருமா அல்லது புரெவி புயல் புரவி (குதிரை) பாய்ச்சல் பாயுமா என்பது இயற்கையின் கையில். ஆனாலும், பொதுமக்கள் கூடுதல் பாதுகாப்பு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
மேலும் செய்திகள்
சீர்திருத்தம் சரியா?
எளியவர்களை வாழ விடுங்கள்
அதிரடி நடவடிக்கைகள்
கண்ணீரில் மிதக்க விட்டான்
மீண்டும் குட்கா
நல்ல துவக்கம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்