SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவுத் தொழில்நுட்பப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

2020-12-02@ 17:30:53

உணவுத் தொழில் நுட்ப படிப்பில் உணவு அறிவி யலைப் பயன்படுத்தி, உணவு செயல்முறை, உற்பத்தி மற்றும் உணவுப் பொருட்களின் பதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி கற்றுத்  தரப்படுகிறது. உணவைத் தேர்வு செய்வது, பாதுகாப்பது, பண்படுத்துவது, பேக்கிங் செய்வது, விநியோகிப்பது ஆகியவற்றைப் பற்றி படிப்பதே உணவுத் தொழில்நுட்ப படிப்பின் முக்கிய அம்சமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு வகையான படிப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.


வழங்கப்படும் படிப்புகள்

இந்தியாவில் உணவு அறிவியல் (Food Science), உணவுத் தொழில்நுட்பம் (Food Technology), உணவு மற்றும் சத்துணவு (Food and Nutrition), உணவு பதனிடுதல் (Food Preservation), உணவுப்  பொறியியல் (Food Engineering) எனும் ஐந்து பிரிவுகளில் மூன்று மற்றும் நான்காண்டு கால அளவிலான இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc./B.E or B.Tech), இரண்டாண்டு கால அளவிலான  முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc./M.Tech) உள்ளன. முதுநிலைப் பட்டப் படிப்புகளில் உணவு அறிவியல் படிப்பில் தானிய வகைகள் (Cereals), பால் பொருட்கள் (Dairy), மதுபானங்கள் (Alcohol), சர்க்கரை (Sugar), அடுமனை மற்றும் தின்பண்டப்  பொருட்கள் (Bakery and Confectionery Items), பழங்கள் மற்றும் காய்கறிகள் (Fruits and Vegetables), எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் செய்முறைகள் (Oil and Oil Seed Processing),  நொதித்தல் (Fermentation) போன்ற சிறப்புப் பாடங்களுடனான படிப்புகளும், உணவுத் தொழில்நுட்பத்தில் உணவுத் தொழில்நுட்ப மேலாண்மை (Food Technology and Management), உணவுச்  செய்முறைப் பொறியியல் மற்றும் மேலாண்மை (Food Process Engineering and Management), உணவு ஆலை இயக்கங்கள் மற்றும் மேலாண்மை (Food Plant Operations and Management),  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மேலாண்மை (Food Safety and Quality Management), உணவு வழங்கல் தொடர் மேலாண்மை (Food Supply Chain Management) போன்ற பல சிறப்புப் பாடங்களும்  உள்ளன.உணவு அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளும், உணவுத் தொழில்நுட்பத்தில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பும் ஆய்வுப் படிப்புகளாக உள்ளன. இவை  தவிர, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூன்றாண்டு கால அளவிலான உணவு பகுப்பாய்வு மற்றும் தரக் காப்புறுதிகள் (Food Analysis and Quality Assurance), உணவு அறிவியல் தொழில்நுட்பம் (Food  Science Technology), உணவு அறிவியல், பதனிடுதல் மற்றும் மேலாண்மை (Food Science, Preservation and Management) போன்ற பட்டயப்படிப்புகளும் உள்ளன.  

கல்வித் தகுதிகள்

இளநிலைப் பட்டப்படிப்பு: மூன்று ஆண்டு கால உணவு அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2-ல் இயற்பியல், வேதியியல் உயிரியல் (PCB) அல்லது மனையியல், உணவு மற்றும் சத்துணவுகள்  போன்ற தொழில் பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டு கால உணவுத் தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2-ல் இயற்பியல்,  வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் (PCMB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில மாநிலங்களில் இந்த மதிப்பெண்களில் அரசு இட ஒதுக்கீட்டு  நடைமுறைகளுக்கேற்ப மதிப்பெண் தளர்வுகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

முதுநிலைப் பட்டப்படிப்பு: இரண்டு ஆண்டு கால உணவு அறிவியல் (M.Sc) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு உணவு அறிவியல் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன்  இளநிலைப் பட்டம் (B.Sc) பெற்றிருக்க வேண்டும். உணவுத் தொழில்நுட்பம் (M.Tech) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 60% மதிப்பெண்களுடன் உணவுப் பொறியியல்/தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம்  (B.E/B.Tech) அல்லது உணவு அறிவியல் (Food Science) பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும். சில முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு வேளாண்மைப் பொறியியல் இளநிலைப்  பட்டம் (B.E/B.Tech Agri) அல்லது வேளாண்மைப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc Agri) ஆகியவை மாணவர் சேர்க்கைக்கான தகுதிகளாக உள்ளன.

ஆய்வுப் படிப்புகள்

உணவு அறிவியல் பாடத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு உணவு அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உணவுத் தொழில்நுட்பப் பாடத்தில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பிற்கு உணவுப் பொறியியல்/தொழில்நுட்பம் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.E/M.Tech) பெற்றிருக்க வேண்டும்.பட்டயப்படிப்புகள்பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பட்டயப்படிப்புகளுக்கு 10ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. +2-ல்  இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் (PCMB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையினைப் பெற முடியும்.

முதன்மைக் கல்லூரிகள்

உணவுத் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் கர்நாடகாவின் மைசூரிலுள்ள Central Food Technological Research Institute, அரியானா மாநிலம் சோனாபட்டிலுள்ள National Institute of Food  Technology Entrepreneurship and Management, தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலுள்ள Indian Institute of Crop Processing Technology, உத்திரப்பிரதேசம் நொய்டாவிலுள்ள Amity Institute Of Food  Technology, சில Indian Institute of Technology போன்றவை முதன்மைக் கல்வி நிறுவனங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள சில பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும்  உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

மாணவர் சேர்க்கை

உணவு அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. உணவுத் தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு இந்திய  அரசின் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், Indian Institute of Technology மற்றும் National Institute of Technology போன்ற கல்வி நிறுவனங்களில் +2 மதிப்பெண்களுடன் இணை நுழைவுத் தேர்வு  (முதன்மை) (JEE (Main)) தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன.
உணவு அறிவியல், உணவுத் தொழில்நுட்பம் ஆகிய முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் மூலம் சேர்க்கை நடைபெறுகின்றன. உணவு அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம்  குறித்த ஆய்வுப் படிப்புகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அறிவியல் தொடர்புடைய பாடங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) மற்றும் பொறியியல் பட்டதாரித் தகுதித்  தேர்வில் (GATE) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகின்றன.

வேலை வாய்ப்புகள்

உணவு தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களில் உணவுகளைத் தயாரிப்பதன் ஒவ்வொரு நிலையிலும் இத்துறை தொழில்நுட்ப நிபுணர்களின் பணி முக்கியமானது. மூலப் பொருட்களை பரிசோதிப்பது, சத்துப்  பொருட்களின் அளவை உறுதி செய்வது, சரியாகக் கையாளுவதன் மூலமாக உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பது, பேக்கிங் செய்வது போன்ற பல பணிகள் இதில்  மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்தியாவில் பல மில்லியன் நடுத்தரக் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வழங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள்  தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே, உணவு தயாரிப்பு, பதப்படுத்தல் சார்ந்த நிறுவன பணிகள் முதல் கொண்டு தர நிர்ணயம் செய்யும் அரசுத் துறை பணிகள் வரை  ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு உகந்தது உணவுத் தொழில்நுட்ப படிப்புகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்