SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிப்பாகுமா கசப்பு மருந்து?

2020-12-02@ 00:28:56

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு வகுப்புகள், மருத்துவ கல்லூரிகளில் இளநிலை,  முதுநிலை வகுப்புகள் வரும் 7ம் தேதி முதல் துவங்கும் என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. மாணவர் விடுதிகளை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் கல்வி நிறுவனங்கள் திறப்பில், தமிழக அரசு, முதல்படி எடுத்து வைத்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களின் வகுப்பு நிலவரத்தை பொறுத்தே, பிற வகுப்புகளை திறப்பது பற்றி தமிழக அரசு முடிவெடுக்க உள்ளது. கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின்னரே, பள்ளிகள் திறப்பு பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வெளிவர உள்ளது.  மாணவர்கள் வீடுகளில் முடங்கிக்கிடந்தாலும், ஆன்லைன் வகுப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தேர்வும் ஆன்லைன் முறையிலேயே நடக்கிறது. ரெகுலர் வகுப்பறை மற்றும் தேர்வு அறையைவிட இது முற்றிலும் மாறுபட்டது. இதில், பல விதிமீறல்கள் அப்பட்டமாக நடக்கிறது. இது, கல்வி நிறுவனங்களுக்கும் தெரியும். இருப்பினும், தடுக்க வேறு வழியில்லை. வாய்மூடி மவுனமாக இருக்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாறி, தற்போது, கல்லூரி திறப்பு என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு பயம் தொற்றிக்கொண்டது. எஞ்சியுள்ள மிக குறுகிய நாட்களில் எப்படி பாடத்தை கவனிப்பது, எப்படி தேர்வு எழுதுவது, தேர்வில் நம்மால் சாதிக்க முடியுமா என்ற பயம் ஒவ்வொரு மாணவர்களின் மனதிலும் ஒட்டிக்கொண்டுள்ளது. காரணம், ஆன்லைன் கல்வி முறை, அந்த அளவுக்கு மாணவர்களை மாற்றி வைத்துள்ளது. இனி, மாணவர்களை வகுப்பறைக்கும், தேர்வு அறைக்கும் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு மற்றும் அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது.

குறிப்பாக, மாணவர்கள் மீது ஒட்டுமொத்தமாக பாடச்சுமையை ஏற்றாமல், தேர்வு அட்டவணையை திணிக்காமல், மென்மையாக கையாள வேண்டியது அவசியம். மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க, பாடத்திட்டம் குறைப்பு ஒன்றே அருமருந்தாக அமையும். பயமின்றி தேர்வு எழுதவும் இது உதவும்.  அத்துடன், கொரோனா தொற்று தடுப்பிலும் தீவிர கவனம் செலுத்தவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றை கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதை, தொய்வின்றி பின்பற்ற வேண்டும். அலட்சியம் காட்டினால், மாணவர் சமுதாயம் பேராபத்தை சந்திக்க நேரிடும். மாணவர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கையாண்டு கல்வி நிறுவனங்களுக்கு சென்று திரும்ப வலியுறுத்தப்பட வேண்டும்.

அடுத்தகட்டமாக, பள்ளிகள் திறக்கப்படும்போதும், இதே விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதை, முறையாக செய்யும்போது, மாணவ-மாணவிகள் மன அழுத்தம் இன்றி பாடம் கற்பதும், தேர்வு எழுதுவதும் எளிதாகும். இத்தனை நாள் ஓய்வில் இருந்துவிட்டு, வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்பது என்பது மாணவர்களுக்கு கசப்பான மருந்தாகத்தான் இருக்கும். இருப்பினும், அதை இனிப்பாக மாற்ற வேண்டியது அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் கடமை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்