SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரிகள் ஊழல் செய்த ரூ.7 லட்சம் அரசு கஜானாவுக்கு திரும்பிய கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-12-02@ 00:08:14

‘‘ஓல்ட் மாடல் பேட்டரியை வாங்கி லகரங்களை பார்த்த அதிகாரி எஸ்கேப் ஆன விஷயத்தை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகராட்சியில் பழைய ஆபீசர் போய், புதிய ஆபீசர் வந்த பிறகு தகிடு தத்தங்கள் எல்லாம் வரிசை கட்டி வர ஆரம்பிச்சிருக்காம். இதில் ரூ.2.50 கோடிக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டிகள் வாங்கியது புதிய சர்ச்சையாக  வெடிச்சிருக்கு. இங்குள்ள 60 வார்டுகளில் தினமும் 400 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. வீடுதோறும் குப்பையை சேகரிக்க ரூ.2.50 கோடிக்கு 225 பேட்டரி வண்டிகள் கடந்த ஆண்டு வாங்கப்பட்டதாம். ஆனால், இந்த பேட்டரி வண்டிகள் அடிக்கடி ஆப் ஆயிடுதாம். இதனால துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தினமும் கஷ்டப்படறாங்க. அதிக அளவு குப்பையை சேகரிக்க முடியாமலும் சுகாதார பணியாளர்கள் திணறிக்கிட்டு இருக்காங்க.

புதுசா வந்த ஆபீசரு, இந்த பேட்டரி வாகனம் பெயில் ஆன திட்டம். இதை வாங்க யார் சிபாரிசு செய்தாங்க  என்று கேள்வி எழுப்பினாராம். அப்போது அனைவரும் ஒருமித்த குரலில் எங்களிடம் யாரும் கேட்கவில்லை. பழைய ஆபீசரே தன்னிச்சையாக முடிவெடுத்து பேட்டரி வாகனத்தை வாங்கிட்டாரு என்று சொன்னாங்களாம். பெயிலான பேட்டரி வாகனத்தை ரூ.2.50 கோடிக்கு வாங்கி ஆபீசரு லாபம் பார்த்தது வெட்டவெளிச்சமாகி விட்டதாம். இதனால், என்கொயரி ஏதும் வந்து விடுமோ என்று அவருக்கு நெருக்கமான ஆபீசருங்க கலக்கத்துல இருக்காங்க...’ என்றார்.

‘‘சிறைத்துறை ஏட்டுவை கண்டு மத்திய சிறையே ஆடிப்போய் இருக்காமே, எந்த மாவட்டம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மத்திய சிறையில் ஏட்டாக ரூபமான பெயர் கொண்டவர் பணியாற்றி வந்தார். இவர் புழல் சிறையில் பல புகார்களின் எதிரொலியாக வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், மத்திய சிறை பணியின்போது சிறைக்குள் கஞ்சா கடத்தி சென்றதாக புகார் வந்ததாம். இதுதொடர்பாக சிறை விஜிலென்ஸ் போலீசார் விசாரித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் நிலைக்கு சென்றதாகவும், பின்னர் சமரசம் செய்து கொண்டதால் புகார் அளிக்கவில்லையாம். கடந்த செப்டம்பர் மாதம் டெப்டேஷனில் பெண்கள் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்றும், ஏட்டுவின் ஆட்டம் அதிகரித்துள்ளது.

சிறைக்குள் பெண் கைதிகளுக்கு பொடி, கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உள்ளே எடுத்துச் செல்வது தொடர்பாக சிறையில் உள்ள பெண் காவலர்களிடம் பேச்சு நடத்தி வருகிறாராம். மேலும் பெண் காவலர்களிடம் அசடு வழிந்தும் வருகிறாராம். இதனால் பெண் காவலர்கள் அவர் இருக்கும் பக்கத்தில் செல்லவே தயக்கம் காட்டுகின்றனராம். மேலும் சிறையில் இருந்த பழைய பொருட்களை, எடுத்துச்சென்று விற்று காசு பார்த்து விட்டாராம். ஏட்டு ரூபமானவரின் முறைகேடுகள் தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக பெண் காவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசு துறையில் உள்ள சிலர் கைக்கு செல்லும் ஊழல் பணம் திரும்பறது ரொம்ப கஷ்டம்னு சொல்லுவாங்க... குமரியில தானாகவே திரும்பிவிட்டது போல...’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா பாதிப்பை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரண உதவி தொகையை தமிழக அரசு அறிவித்தது. குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரண தொகையில் ரூ.7 லட்சம் திடீரென மாயமானது. இந்த விவகாரம், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு போச்சு. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு இதற்கான பைல்களை கேட்டாங்களாம்.. அவர் எனக்கு எதுவும் தெரியாது. நான் புதிதாக வந்து பொறுப்பேற்று இருக்கிறேன். அதற்கான பைல்களை நான் நேரடியாக தருகிறேன் என கூறி உள்ளார்.

ரூ.7 லட்சம் மாயமான விவகாரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வரை செல்ல, இந்த பணத்தை அங்கிருந்த அதிகாரிகள் 3 பேர் தான் பங்கிட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிந்தது. தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகள் அந்தஸ்தில் உள்ள 3 பேரை குறி வைத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை விசாரணையை தொடங்க, மாயமான ரூ.7 லட்சம் திடீரென சரியாகி விட்டதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கணக்கு காட்டி உள்ளனர். மாயமான பணம் வந்ததால், லஞ்ச ஒழிப்பு துறையும் விசாரணையை நிறுத்திக்கொண்டது. ஏற்கனவே இதே அலுவலகத்தில் இலவச வேட்டி, சேலை 100 எண்ணம் மாயமான விவகாரத்திலும் வெறும் மனுரசீது போட்டதுடன், முடித்துக்கொண்டனர்.

மாயமான வேட்டி, சேலையும் வந்து விட்டதாக தகவல் வந்ததால், வழக்கு பதிவு செய்ய வில்லையாம். எப்படி தப்பு நடந்தது. ரூ.7 லட்சம் எப்படி மாயமானது... அது எப்படி அரசு கஜானாவிற்கு திரும்பி வந்தது என்பதை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என்று அதே அலுவலகத்தில் பணியாற்றும் சிலர் பேசி வர்றாங்க.. அலுவலகத்துக்கு பணம் வந்ததை அப்படியே விட்டால்... எதிர்காலத்தில் திருடர்கள் கூட திருடிய பணத்தை அதே இடத்தில் வைத்துவிட்டால் நம்மளை போலீஸ் கைது செய்ய மாட்டாங்கனு நினைக்க தோன்றும்.. அதனால எடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கேட்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்