SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவையற்ற அடக்குமுறை

2020-11-30@ 00:01:06

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தற்போது தலைநகரில் களம் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோதே விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக தெரிவித்தனர். விவசாயிகளை ஒரு பொருட்டாக கொள்ளாமல் மத்திய அரசு இம்மசோதாக்களை சட்டமாக்கியது. வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விளைபொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுமே விவசாயிகளை வஞ்சிப்பவையாகும். இவை கார்ப்பரேட்டுகளுக்கு முழுக்க முழுக்க சாதகமாக மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களாகும். இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னர் விவசாயிகள் பற்பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். பருவநிலைக்கு ஏற்ற விளை பொருட்களை விவசாயிகள் வயல்களில் விளைவிக்க முடியவில்லை. ஒப்பந்தக்காரர்களின் ஆதிக்கம் விவசாயத்தில் அதிகம் படர தொடங்கியுள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட விளை பொருட்களின் விலை மெல்ல மெல்ல ஏறி வருகின்றன. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ‘டெல்லியை நோக்கி’ என்னும் பேரணி வடிவிலான போராட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளனர்.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என பல மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அடக்குமுறைக்கு பெயர் போன மத்திய அரசு துணை ராணுவத்தை களத்தில் இறக்கிவிட்டு, இம்முறை விவசாய போராட்டங்களை அடக்க துடிக்கிறது. போலீசாரின் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சியடிப்பு உள்ளிட்ட பல்வேறு தடைகளால் டெல்லியில் போராட்டம் ஒடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக ரீதியில் போராட விரும்பும் விவசாயிகளை, அவர்களின் கருத்துகளை கூட சொல்ல விடாமல் மத்திய அரசு விரட்டி அடித்து வருகிறது. விவசாயிகளும் மத்திய அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் நெடுஞ்சாலைகளில் உணவு சமைத்து, அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்கின்றனர். டெல்லியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை. டெல்லியின் எல்லைகள் அனைத்திலும் பதற்றம் நீடிக்கிறது. விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தங்கள் உரிமைகளை பறிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட கூட உரிமையற்று சாலையோரங்களில் விவசாயிகள் கதியற்று நிற்கின்றனர். மத்திய வேளாண் அமைச்சகம் வரும் 3ம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், இம்முறை விவசாயிகள் போராட்டம் நீண்டகாலம் நீடிக்கும் என்றே தெரிகிறது.

டெல்லியில் 6 மாதம் தங்கியிருந்து போராடுவோம் என விவசாய சங்கங்கள் கூறி வருகின்றன. மத்திய அரசு உடனடியாக இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்துவதே நல்லது. விவசாயிகளின் நண்பன், நானே விவசாயி என சப்பைக்கட்டி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வேளாண் சட்டங்களுக்கு ஏற்கனவே ஆதரவு கரம் நீட்டிவிட்டார். சமீபகாலமாக தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பேரத்திற்கு தூண்டுகின்றன. மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால், நாங்களும் டெல்லி செல்வோம் என தமிழக விவசாயிகளும் போர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். போராட்டத்திற்கு செல்லும் விவசாயிகளை தமிழக அரசு தடுக்க முனைந்தால், மத்திய அரசின் ஊதுகுழல் பட்டத்தை மீண்டும் ஆட்சியாளர்கள் பெற நேரிடும். எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதே நாட்டுக்கு நல்லதாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்