SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துப்பாக்கி சுடும் இடத்தில் பரிகார பூஜை செய்த காக்கி அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-11-29@ 03:01:22

‘‘முதலிடமா... கடைசி இடமா என்று கோவையில் குழம்பும் அதிகாரிகள் பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ரூ.998 கோடியில் கோவை மாநகராட்சியில் 45 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில், ரூ.224 கோடிக்கு 30 பணிகள் முடிந்துவிட்டதாக கூறிய அதிகாரிகள், இன்னும் ரூ.760 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன என்கிறார்கள். இச்சூழலில் ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் செயலாக்கம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், கோவை மாநகராட்சி முதலிடம் வகிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி மிஷன் வெளியிடும் அறிக்கையில் 42-வது இடமே அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் சொன்னது உண்மையா... அல்லது துறையின் முக்கிய விஐபி சென்னையில் இருப்பதால் அவரை குஷிப்படுத்த முதலிடம் அறிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லையே என்று குழப்பத்தில் இருக்காங்க... ஆனால் கோவையில் உள்ள அதிகாரிகள் நம்மை முதலிடம் சொல்லிட்டாங்க... அதை ஏன் கிளறி பார்க்க வேண்டும் என்று நைசாக நழுவி விட்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘துப்பாக்கி சுடும் மையத்தில் யாகம் யாருக்காக நடந்தது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகர காக்கி அதிகாரிகள் சுத்திவிட்ட கோழி போல இருக்காங்க. அவர்கள் காதில் வாக்கி-டாக்கி சத்தம் கேட்டாலே கண்களில் இருள் சூழ்கிறதாம். இனம் புரியாத பீதி நிலவுதாம். அதற்கான காரணத்தை சொல்ல முடியாம காக்கி அதிகாரிகள் திணறி வர்றாங்க. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் யோசிச்ச நிலையில் தான் போலீசுக்கான கன் சூட்டிங் இடம் தேர்வாகியிருந்தது. இன்னும் ஒன்றரை மாதத்திற்கு நல்ல நாள் இல்ல, உடனே பூஜையை நடத்துங்கன்னு ஜோசியக்காரர் சொன்னாராம். இதையே சாக்கா வச்சி ஸ்பெஷல் யாகம் ஒன்றை சூட்டிங் இடத்துல வளர்த்தாங்களாம். மாநகர காக்கிகளுக்கு பிடிச்சிருக்கிற பித்து போகணும்னு சில அதிகாரிகள் வேண்டிக்கிட்டாங்களாம். பூஜை செய்தவர்களுக்கு உயரதிகாரிகளே பணம் கொடுத்தாங்கன்னா பாருங்களேன். இது சாதாரண பூஜை தான், இன்னும் 10 நாள்ல கிடா வெட்டி துன்பத்துல இருந்து வெளியே வருவோம்னு காக்கி அதிகாரிகள் சத்தமில்லாமல் நெஞ்சை நிமிர்த்தி சொல்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கடும் நடவடிக்கையை கடவுள் பெயர்ல போட்ட காக்கி அதிகாரிகள் பற்றி மலைக்கோட்டையில என்ன ஓடுது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் போலீஸ் கமிஷனர், பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வர்றார். மாநகரில் கஞ்சா விற்பனை, பாரில் மது விற்பனை ஆகியவற்றை முற்றிலும் தடுப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவ்வளவு டார்ச்சரா என மாநகர காக்கிகள் கேள்வி எழுப்பினாலும், பொதுமக்கள் நலனே முக்கியம் என கூறி காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் வேலை வாங்குகிறாராம்... இவரிடம் இனி வேலை பார்க்க முடியாது என கூறி ஒருசில இன்ஸ்பெக்டர்கள் வேலையே இல்லாத சொகுசான பணிக்கு சென்று போயிட்டாங்க.

காவல்நிலையங்களில் கஞ்சா மற்றும் மது விற்பனை நடப்பதாக புகார் வந்தால் பணியில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு மெமோ வழங்கப்பட்டு அதற்குரிய பதில் அளிக்க கால அவகாசம் அளிக்கப்படும். பொய் புகார் என்றால் அந்த பகுதியில் கஞ்சா, மது விற்பனை நடைபெறவில்லை, மீறி நடந்தால் புகார் அளிக்கலாம்னு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்களாம். அதையும் மீறி தவறுகள் நடந்தால் கடவுளால் கூட தடுக்க முடியாத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளதால் காக்கிகள் கலக்கத்தில் உள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பொறுப்பு அதிகாரி கோயில் பணிக்கு டூருக்கு வருவது போல வேலைக்கு வருவது பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்களுக்கு ஐஏஎஸ் அதிகாரியை நிர்வாக அதிகாரியாக நியமித்தால் தான் நிர்வாக சீர்கேடுகளை களைவதுடன், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை. இதனால் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதை பக்தர்கள் வரவேற்றனர். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றிட்டாங்க... அவருக்கு பதிலாக 225 கிமீ தூரத்தில் உள்ள ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையரை திருச்செந்தூர் கோயிலுக்கு கூடுதல் பொறுப்பாக நியமிச்சாங்க... அவர் ராமேஸ்வரம் டூ திருச்செந்தூருக்கு வந்து செல்லவே ஒரு நாள் கழிந்துவிடுகிறது.. அவரும் டூருக்கு செல்வது போலதான் திருச்செந்தூருக்கு வர்றாராம். இதனால அலுவலக பணி மற்றும் கோயில் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காம்... எனவே, பெரிய கோயில்களுக்கு பொறுப்பு அதிகாரியை நியமிக்காமல்... நிரந்தர அதிகாரியை நியமிக்கணும்னு பணியாளர்களும், பக்தர்களும் எதிர்பார்க்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரையின் கணக்கை காலி செய்ய இலை தலைகள் முயற்சி செய்யறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் எப்படியேனும் போட்டியிட வேண்டும் என்று இலை தரப்பு கணக்கு போட்டு வருகிறதாம்... அவர்களின் நினைவை கனவாக்கும் வகையில் தாமரை தரப்போ, ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் கூட்டணியில் கைப்பற்றி போட்டியிட வேண்டும் என்று குறி வைத்து காய்களை நகர்த்தி வர்றாங்க. தேர்தல் தொடர்பான உள்கட்சி கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளின்போது குமரியை நம்ம கோட்டையாக மாற்றணும்... அப்படி என்றால் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் நிற்க வேண்டும்னு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசிட்டு வர்றாங்களாம்.

இந்த தகவல் கூட்டணி கட்சியான இலையின் தலைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். அதற்காக அவர்கள் தாமரைக்கு செக் வைக்கும் வகையில்... ஒரு சீட் கூட கொடுக்கக் கூடாது என்று மாவட்டத்தில் உள்ள இலையின் முக்கிய தலைகள் மேலிடத்திடம் பேசி வர்றாங்க... இடைத் தேர்தலிலும் அவர்கள் ஜெயித்தால் தானே 6 சீட் கேட்பாங்க... அவங்க எப்படி ஜெயிக்கிறாங்கனு பார்க்கலாம் என்று ரகசியமா இலையின் மாவட்ட நிர்வாகிகள் சபதம் எடுத்துள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்