கூடுதல் நிதி கிடைக்குமா?
2020-11-29@ 02:21:02

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் புயல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. 2018ல் கஜா புயலால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் கடும் சேதம் ஏற்பட்டது. பல லட்சம் ஏக்கர் பயிர்கள், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வரை தொடர்கிறது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 23ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இப்புயலானது கடந்த 25ம் தேதி நள்ளிரவு, புதுச்சேரிக்கும் - மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது.
கனமழையால் சென்னையில் அண்ணா சாலை உட்பட புறநகர் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். லட்சக்கணக்கான வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்தது. மேலும், கடலூர், அரியலூர், செங்கல்பட்டு உட்பட 18 மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் விழுந்ததால் மக்கள் மின்தடையால் பெரும் அவதியடைந்தனர். பலர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள், கால்நடைகளுக்கு தமிழக அரசு தரப்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மதிப்பீடு செய்வதற்கு மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இக்குழுவினர் வரும் செவ்வாயன்று நிவர் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்விற்கு பின் ஆலோசனை நடத்தி, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கடந்தாண்டு கஜா புயல் தாக்கம், தொடர்ந்து கொரோனா ஊரடங்கு, கிசான் திட்டத்தில் மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் பலர் வேலையிழந்துள்ள நிலையில், தற்போது சூறைக்காற்றால் வீடு, வாசலையும் இழந்து பரிதவிக்கின்றனர்.
எனவே, மத்திய குழு கடமைக்கு ஆய்வு செய்யாமல், முறையாக மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கிசான் திட்ட மோசடி போல அல்லாமல், நிவாரண நிதி முறையாக சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். தற்போது வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகி தமிழகத்திற்கு வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயலானது டிச.2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிவர் புயல் பாதிப்பில் இருந்தே மக்கள் மீளாத நிலையில், அடுத்த புயல் அறிவிப்பு மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
மேலும், கனமழை காலங்களில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் போல தேங்கும் மழை நீரை, முறையாக சேகரித்தால் கோடைக்காலத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. எனவே, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் முழுவீச்சில் அரசு செயல்படுத்த வேண்டும். சாலையோரங்களில் முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும். கால்வாய்களை முறையாக தூர்வாரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும்.
மேலும் செய்திகள்
மீண்டும் குட்கா
நல்ல துவக்கம்
காத்திருக்கும் சவால்
உயிர்துளியை உணர்வார்களா?
ஆபத்தை தரும் செயலிகள்
பொங்கல் பரிசு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்