SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயலால் போலீசுக்கும் மாநகராட்சி ஊழியருக்கும் மூண்ட மோதல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-11-28@ 01:50:07

‘‘இரண்டு பெண் அதிகாரிகளின் அட்டகாசம் தாங்க முடியலையாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நல துறையில் 2 பெண் அதிகாரிகள் கோலோச்சுகிறார்களாம். இந்த அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் ஆய்வு என்ற பெயரில் கடும் அட்ராசிட்டி செய்றாங்களாம். தொண்டு நிறுவனங்கள் நடத்துவோரை சகட்டு மேனிக்கு அசிங்கமாக திட்டுவது, காசு வாங்கி கொடுப்பதற்கு என ஒரு ஊழியரை வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வர்றாங்களாம். ஏற்கனவே பக்கத்து மாவட்டத்தில் புகாரில் சிக்கி, இடம் மாறி வந்த அந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மீது தற்போது ஏகப்பட்ட புகாரை அரசின் துறை சார்ந்த செயலர் வரைக்கும் தொண்டு நிறுவனங்களை நடத்துவோர் தட்டி விட்டுருக்காங்களாம். மற்றொரு புறம் விஜிலென்ஸ் பிரிவுக்கும் புகார்கள் சென்றதால், அவர்களும் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கு.

அதனால விரைவில் அந்த 2 பெண் அதிகாரிகளும், விவிஐபி மாவட்டத்திற்கு ஏன் தொல்லையின்னு வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப் போறாங்கன்னும் அலுவலர்கள் மத்தியில் பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘சென்னையில் போலீஸ் தலைமேல் பாரத்தைப் போட்டுவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் கொள்ளை லாபம் பார்க்கிறார்களாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சென்னையில் தற்போது வீசிய புயலில் ஏராளமான மரங்கள் சாலையில் விழுந்தன. இவற்றையெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் தான் அப்புறப்படுத்துவார்கள். மேலும் தீயணைப்பு துறை வீரர்கள் பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோரும் இதனை சரி செய்வார்கள். ஆனால் சமீபகாலமாகவே போலீசார் களத்தில் இறங்கி மரங்களை வெட்ட வேண்டும் என்றும் அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி தர வேண்டும் எனவும் உயரதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் இந்த முறை மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரை ஒரு பிடி பிடித்து விட்டனர். புயலடித்த மறுநாள் பெரும்பாலான இடங்களில் போலீசார் தான் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும் அதற்கு முன்னால் இரவு டார்ச்லைட், ஜெனரேட்டர், மழை கோட் என பலவற்றையும் வாங்கி தர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகளும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்து வேறுவழியின்றி அனைத்தையும் தயார் செய்து கொடுத்துள்ளனர். மாமூல் வாங்கினாலும் உயரதிகாரிகள் திட்டுகிறார்கள். ஆனால் இதை செய், அதைச் செய் என வேலையும் வாங்குகிறார்கள். நாங்கள் மாமூல் வாங்காமல் இதையெல்லாம் எப்படி செய்ய முடியும் என சென்னை போலீசார் முணுமுணுத்து வருகின்றனர். மேலும் ஒரு மரத்தை அப்புறப்படுத்த இவ்வளவு என மாநகராட்சி அதிகாரிகள் பில் போட்டு அதையும் சுவாகா செய்து விடுகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றிலும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் பனிப் போர் மூண்டது. தற்போது இந்த புயலில் அது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. குறிப்பாக வடசென்னையின் பலபகுதிகளில் போலீசாரை ஒரு பிடி பிடித்து உள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘ஒரே ‘இருக்கையில்’ பல ஆண்டுகள் பணியை தொடர்வதாக குற்றச்சாட்டு வந்திருக்கிறதே..’’ ‘‘திண்டுக்கல் மாவட்டத்தின் ‘குளுகுளு’ ஊரின் ‘உள்ளாட்சி அலுவலகத்தில்’ 10க்கும் அதிக கிளார்க் நிலை ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்ந்து பல ஆண்டுகள் இங்கேயே மாறுதலின்றி பணிசெய்து வருகிறார்களாம். தலைமை அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், ஆளுங்கட்சியினரின் ஆதரவாலும், இவர்கள் இங்கேயே தொடர்ந்து பணியில் தொடர முடிகிறதாம். ‘புரமோசனோ’, ‘டிரான்ஸ்பரோ’ எது போட்டாலும் சுற்றி இங்கேயே, கேட்டு வந்து விடுகிறார்கள். இங்கிருக்கிற முருகப்பெருமானின் ‘மறு பெயர் கொண்ட’ அதிகாரி ஒருவர் நான்காம் ஆண்டில் பணிதொடர்கிறாராம். இதைப்போலவே ‘இன்ஜினியரிங்கில்’ இருக்கிற ‘இரண்டெழுத்துக்காரர்’ உள்ளிட்ட நான்கைந்து பேர் எல்லை கடந்து நான்கைந்து ஆண்டுகளை தொடர்கின்றனர்.

இன்னும் அதிர்ச்சியாக இவர்கள் எல்லோருமே ஒரே அலுவலகத்தின் பல துறைகளிலும் பணி செய்து, பதவி உயர்விலும் இங்கேயே போஸ்ட்டிங் பெற்றும், கூடுதல் பதவியில் வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டாலும், வேண்டாமென எழுதித்தந்தும் இந்த அலுவலகத்தை விட்டு போகாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்களாம். காரணம், இங்கே ‘கணக்கிட முடியாத வகையில் வருவாய்’ கொட்டுகிறதாம். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி தொடரக்கூடாத விதி இருந்தும், இதனையும் மீறி ஒரே இடத்தில் இவர்கள் தொடர்கிறார்கள். இவர்களை மாற்றம் செய்யாதவரை, லஞ்ச லாவண்யங்களும், ஆளும்தரப்பின் ஆதரவில் தவறிழைப்போரும் பெருகிக் கொண்டே போவதால், வரும் நாட்களில் மக்களைத் திரட்டி இதற்கென கட்டாயம் மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நடத்தப் போவதாக இவ்வூரின் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்