SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டணி கட்சிகள் கொடுக்கும் குடைச்சலால் இலை தலைமை கிறுகிறுத்து போய் உள்ளதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-11-27@ 00:47:16

‘‘அரசு நிலத்தை ஆட்டைய போட நினைக்கும் சாமியாரின் லீலைகளை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி அருகே ஆசிரமம் வைத்திருந்த பிரபல ‘மூன்றெழுத்து சாமியார்’ கூடுதல் வசதிகள் கருதி, இப்போது அங்கிருந்து கைலாசபட்டி அருகே மலை அடிவாரத்திற்கு தன் ஆசிரமத்தை மாற்றிக் கொண்டாராம். தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பக்தர்கள் சிலரை வளைத்து வைத்திருக்கும் இவரிடம் இலை கட்சியின் முக்கிய தலைகள், தொழிலதிபர்கள் பக்தர்களாக இருக்காங்களாம். தன்னை சந்தித்து ஆசி பெற வரும் இவர்களிடம் தன் ஆசிரமத்துக்கு பட்டா வாங்கி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாராம். காரணம் ஆசிரமம் புறம்போக்கு நிலத்தில் இருக்காம். சாமியார் நேரடியாக செய்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால், பக்தர்களின் தோளில் சாய்ந்து பட்டா பெற முயற்சிக்கிறார்.

இதை கேட்ட செல்வாக்குள்ள பக்தர்கள் வருவாய் துறைக்கு நெருக்கடி கொடுத்து ஆசிரமத்துக்கு பட்டா வாங்க முடிவு செய்து இருக்காங்களாம். ஆனால் நிலத்தின் வரலாற்றை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம்... நிலத்தை அனுபவிக்கலாம்... ஆனால் பட்டா வழங்க முடியாது என்று எஸ்கேப் ஆகிவிட்டதாம். ஆனால் சாமியாரை திருப்திப்படுத்தும் நோக்கில் இலை தரப்பினர் அலை அலையாக அதிகாரிகளை நோக்கி படையெடுக்கிறார்களாம். சாமியாருக்காக போராடுகிறவர்கள், மாவட்ட மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெற்றி வாய்புள்ள தொகுதிகளுக்கு கூட்டணி கட்சிகள் குறி வைத்துள்ளதால்... இலை கட்சியின் தலைமை திணறி போய் இருக்கிறதாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் பத்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மூன்று தொகுதியை தங்கள் கட்சிக்கு கேட்டுப்பெற வேண்டும் என தாமரை கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர். ஒரு பெண் வேட்பாளர், ஒரு மாஜி ஐபிஎஸ் அதிகாரி, ஒரு தொழிலதிபர் என மூவரை களம் இறக்கி, சட்டமன்ற உறுப்பினர் என்ற கணக்கை முதல்முறையாக துவக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் காய் நகர்த்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி, சூலூர் தொகுதி எங்களுக்கு வேண்டும்... என முரசு கொட்டுகின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.

கூட்டணியில் உள்ளவர்கள் சுட்டிகாட்டும் தொகுதிகளில் இலை கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி தொண்டர்கள் அடித்து சொல்கிறார்கள். இந்த தொகுதியை இவர்களுக்கு தாரைவார்த்துவிட்டு கூட்டணி கட்சி பின்னால் ஓட முடியாது. எனவே, கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தரக் கூடாது என புகாராக கட்சி நிர்வாகிகள், மாவட்ட விவிஐபி உள்பட பலரும் தட்டி வருகின்றனர். இந்த விவகாரம், இலை தலைமைக்கு கடும் தலைவலியை உருவாக்கியுள்ளது.

அதாவது, பத்து தொகுதியில், தற்போது 9ல் இலை கட்சி மக்கள் பிரதிநிதிகள் தான் இருக்காங்க... கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தால், இலை  வெறும் 6 தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும். அதிலும் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என தெரியவில்லை. அதனால், பக்கத்து மாவட்டமான நீலகிரி, திருப்பூர், ஈரோடுக்கு கூட்டணி கட்சிகளை தள்ளிவிட்டால், நாம கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே... என அதிகளவில் ‘சீட்’’ கேட்கும் கரைவேட்டிகள் கணக்கு போடுகின்றன...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கரன்சி வேட்டை நடத்தும் அதிகாரிகளை களையெடுக்க நேர்மையான அதிகாரிகள் காத்திருக்காங்களாமே, எந்த மாநகராட்சியில்...’’  என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில் அதிகாரிகள் பண்ற தப்பு அளவு மீறி போயிருச்சாம். திடக்கழிவு  திட்டம், வாட்டர் சப்ளைக்கு தேவையான பொருட்கள் வாங்குன வகையில செமையா அள்ளிட்டாங்களாம். உரம் தயாரிக்கிறதா சொல்லி ஊழல் நடக்குதாம். பர்சேஸ், டிஸ்போஸ் எல்லாம் இன்ஜினியரிங் பிரிவு தான் கவனிக்குதாம். பல லட்ச ரூபாய்க்கு வாங்குன பொருட்களை பயன்படுத்தாம கழிவாக கண்டமாக மாற்றிட்டாங்க. வெச்சிருந்தா மாட்டிக்குவோம் என நினைத்து ஏலம் விட்டுட்டாங்களாம்...

மாநகராட்சியில இருக்கிற சில நேர்மையான அதிகாரிகள், மோசடி அதிகாரிகளின் தில்லுமுல்லு, முறைகேடு போன்றவற்றை ஆவண ஆதாரங்களுடன் பைல் போட்டு வெச்சிருக்காங்களாம். தணிக்கை துறையை ஏமாத்த இவர்கள் வெச்சிருந்த போலி பில்களையும் முக்கிய ஆதாரமாக எடுத்துட்டாங்களாம். இதை எப்போ, எப்படி யார் மூலமா வெளியிட போறாங்கன்னு தெரியலன்னு பேசிக்கிறாங்க. பல ஆதாரங்களை ஊழல் பேர்வழிகள் அழிச்சுட்டாங்களாம்... ஆனால் ஒரு குரூப் ஆதாரங்கள கையில எடுத்து சுத்துதாம். சமயம் பார்த்து ஆதாரத்தை அம்பலமாக்கணும். இப்போ விட்டா நம்மை காலி செஞ்சிருவாங்க என பீதியில இருக்காங்க. ஆதாரம் எல்லாம் எப்படி போச்சுன்னு  ஊழல் அதிகாரிகள் அதிர்ச்சியில புலம்புறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மருத்துவ பணியாளர்கள் எந்த மாவட்டத்துல அதிருப்தியில இருக்காங்க...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பேரிடர் காலத்துல பணி செஞ்சாலும், கண்டுக்க ஆளில்லைன்னு மருத்துவ பணியாளர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்களாம். அதாவது கொரோனா காலத்தில் எல்லாரும் பயந்து ஓடும்போது, நாம தான் முன்ன நின்னு பொதுமக்களுக்கு சேவை செஞ்சோம். அப்போதைக்கு ஊக்க ஊதியம் கொடுக்கப் போறோம்னு அறிவிச்ச அரசு, அதுக்கப்புறம் கண்டுக்கல. இப்போது நிவர் புயலுக்கு வேலை பாருங்கனு, மாவட்டத்துக்கு 50 டீம் ரெடி பண்ணி அனுப்பி விடுறாங்க. அடுத்து டெங்கு, எச்1என்1 சீசன்னு அடுத்தடுத்து வரிசையா வரும். என்னதான் பொதுமக்களுக்கான சேவையா பணி செஞ்சாலும், எங்களுக்கான ஊக்கமும் அவசியம்னு டாக்டர், நர்சு உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கான அனைத்து அறிவிப்பையும் அரசு நிறைவேற்ற வேண்டும்னு புலம்பி தவிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்