தொய்வு வேண்டாம்
2020-11-27@ 00:03:22

நிவர் புயல் கரையை கடந்தாலும், அரசின் மெத்தன நடவடிக்கைகளால், புயல் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இயற்கைச் சீற்றங்களில் இருந்து முழுமையாக தப்பிக்க முடியாது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கச்சிதமாக மேற்கொண்டால், பாதிப்புக்களை பெருமளவில் குறைக்க முடியும்.
கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைகின்றனர். மழைநீருடன், கழிவுநீரும் தேங்குவதால், மழைக்கால நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ெவறும் வார்த்தைகளால் பேசுவதை விடுத்து, செயல்களில் இறங்கி தண்ணீர், கழிவுகளை அகற்றும் முயற்சியில் அரசு இறங்க வேண்டியது சூழலின் அவசரம். முக்கியமாக, கொசுக்களின் உற்பத்தியை தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணியை துவங்க வேண்டும்.
பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உரிய உதவி உடனே கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, மத்திய அரசிடம் நிவாரண தொகை கோரப்படுகிறது. மத்திய அரசும் குறிப்பிட்ட நிதியை மாநில அரசுக்கு வழங்குகிறது. ஆனால், மக்களுக்கு நிவாரணம் ‘பெயரளவுக்கு’ மட்டுமே சென்று சேர்வது தான் வேதனை. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அதன்பிறகு, நிவாரணமும் கிடைக்காமல் அல்லல்படுவது சோதனை.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வீடுகள் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த கட்டிடம் மற்றும் பழமையான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள், தாங்களாகவே நிவாரண முகாம்களுக்கு செல்வது நல்லது. நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை சிறந்த முறையில் கிடைக்க வேண்டும். கொரோனா முழு கட்டுக்குள் வராத நிலையில், வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டு இருப்பதால், மழைக்கால நோய்கள் தலைதூக்கும். அலட்சியங்களின்றி தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டியது மிக அவசியம். முக்கியமாக, மீட்புப்பணிகளில் எவ்வித தொய்வும், பாரபட்சமும் இல்லாமல் துரிதமாக செயல்பட வேண்டும். மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டால், பொதுமக்கள் கூடுதல் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும். வெள்ளப்பாதிப்பில் இருந்து விரைந்து மீள்வதற்கான முயற்சியை உடனே மேற்கொள்ள வேண்டியது அவசியம்.நிவர் புயல் கற்றுத்தந்த பாடத்தை உணர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, கண்மாய் உள்ளிட்டவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நகரங்களில் வீதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் அரசு இறங்கவேண்டும். தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாமல் இருக்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
கனமழையை சந்திக்க தயார் என சவால் விடுவது முக்கியமல்ல. இக்கட்டான நேரத்தில் மக்களை பாதுகாப்பதே முக்கியம். மழையை எதிர்கொள்ள பல கோடி நிதி ஒதுக்கி, பணிகள் நடந்தது. ஆனாலும், சென்னை புறநகர் உள்பட பல பகுதிகள் மிதக்கிறது. மழைக்கால தடுப்பு பணிகள் எந்தளவுக்கு நடந்திருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். இனியாவது, மக்கள் நலன் கருதி சுறுசுறுப்பாக மீட்புப்பணிகள் நடக்கும் என்று நம்புவோம்.
மேலும் செய்திகள்
மீண்டும் குட்கா
நல்ல துவக்கம்
காத்திருக்கும் சவால்
உயிர்துளியை உணர்வார்களா?
ஆபத்தை தரும் செயலிகள்
பொங்கல் பரிசு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்