அரிகேசவநல்லூர் பகுதியில் அறுவடை துவங்கியும் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம்: மழைக்கு பயந்து தவிக்கும் விவசாயிகள்
2020-11-26@ 13:58:19

வீரவநல்லூர்: அரிகேசவநல்லூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீரவநல்லூரை அடுத்த அரிகேசவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கிரியம்மாள்புரம், பத்தல்மேடு, தென்திருப்புவனம், மானாபரநல்லூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விளைநிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாக கன்னடியன் கால்வாய் திகழ்கிறது. கன்னடியன் கால்வாயில் கார் சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜூன் மாதம் கன்னடியன் கால்வாயில் முறையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த 3 வருடங்களாக விவசாயிகள் அதிகாரிகளுடன் போராடி கால்வாயில் தண்ணீர் கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்காமல் அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் திறந்துவிட்டதால் மழைக்கு பயந்து குறைந்த அளவே கன்னடியன் கால்வாய் பகுதியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் அரிகேசவநல்லூர் சுற்றுப் பகுதிகளில் மட்டும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது நெல்மணிகள் முற்றிலுமாக விளைந்து கடந்த 5 தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் அறுவடைப் பணிகள் துவங்கியது. ஆனால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்ய இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அரிகேசவநல்லூர் சமுதாய நலக்கூடம் மற்றும் வயல்வெளிகளில் நெல்லுடன் காத்துக் கிடக்கின்றனர்.
நெல்லுக்கு உரிய விலை உள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வியாபாரிகள் மற்றும் புரோக்கர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் எப்பொழுது மழை பெய்யுமோ? அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க முடியாமல் போய் விடுமோ என விவசாயிகள் அச்சத்துடனே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க அரிகேசவநல்லூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாகும்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்காததால் அவதி
தற்போது கன்னடியன் கால்வாயில் பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கார் சாகுபடிக்கு கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்காமல் ஆகஸ்ட் மாதம் திறந்ததால் தற்போது அரிகேசவநல்லூர் பகுதிகளில் ஒருபுறம் அறுவடையும், மறுபுறம் நடவுப்பணியும் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட வயலில் மேயும் மாடுகள் நாற்று நடப்பட்டுள்ள வயலிலும் மேய்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் இரவு முழுவதும் வயலிலேயே காத்துகிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கன்னடியன் கால்வாயில் முறையாக கார் சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கவேண்டும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் செய்திகள்
வாக்களர்களின் பிள்ளைகளுக்கு லஞ்சமா?: தஞ்சையில் ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த இலவச புத்தக பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்!!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு
யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து
கொடைக்கானலில் காட்டுத்தீ
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்