பாடம் கற்கவில்லை
2020-11-26@ 01:05:33

நிவர் புயலால் சென்னை மற்றும் அதன் தாக்கம் உள்ள பகுதிகள் முழுவதிலும் கனமழை கொட்டித்தீர்த்து விட்டது. அதன் விளைவு சென்னையின் அத்தனை சாலைகளும் மீண்டும் ஒருமுறை வெள்ளத்தின் பிடியில் சிக்கிக்கொண்டன. எத்தனை முறை கனமழை வெள்ளத்தால் பாடம் படித்தாலும் இன்று வரை அந்த பாடத்தை ஆளும் அதிமுக அரசு கற்றுக்கொள்ளவில்லை என்பதை விட கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெரிந்து விட்டது. சென்னைக்கு புயலும், பெரு வெள்ளமும் புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்வதுதான். கொஞ்சம் வலுவான புயல் தாக்கும் போதுதான், அதன் பாதிப்பால் சென்னை பரிதவிக்கிறது. 2015ம் ஆண்டுதான் அதிமுக ஆட்சியாளர்களின் கோரமுகத்தை சென்னை பெருவெள்ளம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பை தாமதித்ததன் விளைவால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. தவித்துப்போன மக்கள் மீள்வதற்கே பலமாதங்கள் ஆனது. பலர் சென்னையை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லவும் வழிவகுத்தது.
பல்வேறு விமர்சனங்கள், நீதிமன்ற வழக்குகள் அடிப்படையில் இதேபோன்று ஒரு பிரச்னை உருவாகாமல் தடுக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அதிமுக அரசு அறிவித்து அதற்காக பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியது. 5 ஆண்டுகள் தான் கழிந்து இருக்கும், இதோ நிவர் புயல் அதிமுக அரசின் கட்டமைப்பு பணிகளை கேலி செய்து விட்டு சென்று இருக்கிறது. அந்த அளவுக்கு எங்கு திரும்பினாலும் தண்ணீர், வெள்ளம். ஒவ்வொரு ஆண்டும் எங்கு தண்ணீர் தேங்குகிறதோ, அங்குதான் இந்த ஆண்டும், இப்போதும் ஏன் எப்போதும் தண்ணீர் தேங்குகிறது. அதை ஒழுங்குபடுத்ததான் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த எண்ணிக்கையை குறைத்து விட்டதாகவும் சென்னை பெருநகர மாநகராட்சியும் அறிவித்தது. அதற்காக 3,815 கோடி பட்ஜெட் போடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் கோடி குறையாத அளவுக்கு செலவழித்தும், பட்ெஜட் தாக்கல் செய்தும், தமிழக அரசால் சிறப்பு நிதி ஒதுக்கியும், மத்திய அரசால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கப்பட்டும், சென்னை நிலை அப்படியே தான் இருக்கிறது என்றால் என்ன நடந்து ெகாண்டு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையை அறிவியலால் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால் அறிவால் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அது எதையுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அரசு மற்றும் அதிகாரிகள் இங்கு அதிகம். அதனால்தான் இத்தனை பாதிப்புகள், சோகங்கள், வேதனைகள். விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் கூட சென்னை உயர் நீதிமன்றம் மிகவும் வேதனையுடன், 2015 சென்னை பெருவெள்ளத்திற்கு பின்னரும் அதிகாரிகள் பாடம் கற்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் உண்மை நிலை.
மேலும் செய்திகள்
மீண்டும் குட்கா
நல்ல துவக்கம்
காத்திருக்கும் சவால்
உயிர்துளியை உணர்வார்களா?
ஆபத்தை தரும் செயலிகள்
பொங்கல் பரிசு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்