SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையிலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநரை நேரில் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

2020-11-25@ 00:06:20

சென்னை: “சட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையிலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்’’ என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ஆளுநர் மாளிகையில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது கடிதம் ஒன்றையும் வழங்கினார். சந்திப்பின்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தயாநிதி மாறன் எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும் நளினி, ஸ்ரீகரன் என்கிற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் பி.ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாங்கள் வலியுறுத்திய போதும், அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் மற்றும் திமுக கொடுத்த அழுத்தத்தாலும், தமிழக அமைச்சரவை இந்த விவகாரத்தை பரிசீலித்து, 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படும் வகையில், மீதமுள்ள தண்டனை காலத்தைக் குறைக்க வேண்டும் என்று, 9.9.2018 அன்று தங்களுக்கு பரிந்துரைத்தது.

அமைச்சரவையின் இந்த பரிந்துரை தங்களுடைய ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது. அமைச்சரவை பரிந்துரைத்த போதும், ஆளுநர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்.

தண்டனை பெற்றவர்களில் ஒருவரான பேரறிவாளன் தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மனு மீதான வழக்கு கடந்த 3ம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது- உச்ச நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன. கடந்த 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள உறுதிமொழி ஆவணத்தில், “பன்னோக்கு விசாரணை முகமை மேற்கொண்டு வரும் விசாரணையில் மனுதாரர் (பேரறிவாளன்) குறித்து விசாரிக்கவில்லை”. “மனுதாரரால் கோரப்பட்டுள்ள விடுதலையானது மனுதாரருக்கும் ஆளுநருக்கும் இடைப்பட்ட விவகாரம்”. “இந்த விடுதலை விவகாரத்தில்  சிபிஐக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவின்படி, மாநில அமைச்சரவை சட்டப்பிரிவு 163ன்படி தங்களுக்கு செய்துள்ள பரிந்துரையை ஏற்க ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், இது 2 ஆண்டுகளாக தங்களது அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதென்பது மாநில நிர்வாகத்தைக் குறைத்து காண்பிப்பதோடு, மாநில அரசு சட்டத்தின்பாற்பட்டு நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை இப்போதாவது ஏற்று, நளினி, ஸ்ரீகரன் என்கிற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் மற்றும் பி.ரவிச்சந்திரன் ஆகிய தண்டனை பெற்றுள்ள ஏழு பேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து, அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: 29 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக திமுக ஆளுநரை சந்தித்தோம். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். சட்டரீதியாகவும் மனிதாபிமான முறையிலும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். ஆளுநரும் அவற்றையெல்லாம் முறையாக பரிசீலித்து உரிய முடிவெடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு: தீர்மானம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் ஆகியும் முடிவெடுப்பதில் ஏன் காலதாமதம் என்று ஆளுநர் சொன்னாரா? சட்டரீதியிலான விஷயங்களை விளக்கினார். நாங்களும் சட்டரீதியான விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ஏற்கனவே ஜெயலலிதா ஊழல் வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு வந்த போது தர்மபுரியில் மூன்று மாணவிகளை அதிமுகவினர் எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவினர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினோம். ஏழு தமிழர் விடுதலையில் சட்டரீதியாக மட்டும் அணுகதேவையில்லை. 29 ஆண்டுகாலம் சிறையில் வாடியிருக்கிறார்கள் என்பதால் மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். ஆளுநர் பதில் திருப்தியாக இருந்ததா? நாங்கள் திருப்தியுடன்தான் செல்கிறோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார். ஏழு தமிழர் விடுதலையில் சட்டரீதியாக மட்டும் அணுகதேவையில்லை. 29 ஆண்டுகாலம் சிறையில் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்