மிரட்டும் புயல்
2020-11-24@ 01:01:18

தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, நிவர் புயலாக நாளை (நவ. 25) தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80லிருந்து 90 கி.மீ, இடையிடையே 100 கி.மீ வேகத்தில் நாளை வீசக்கூடும் என்றும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100லிருந்து 110 கி.மீ வேகத்தில் இடையிடையே 120 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு சென்னை மட்டுமின்றி, டெல்டா மாவட்ட மக்களையும் பீதியடையச் செய்துள்ளது. 2018ம் ஆண்டு நவ. 15ம் தேதி நள்ளிரவு தொடங்கி நவ. 16ம் தேதி காலை வரை வீசிய கஜா புயல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது. டெல்டா மாவட்டங்களில் 62.42 லட்சம் தென்னை மரங்கள் வேருடனும், பாதியாகவும் முறிந்து விழுந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் மட்டும் 45.07 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6.20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்தன.இவை மட்டுமின்றி மா, பலா போன்ற லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. மின் விநியோகம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு சார்பில் இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. வனத்துறை சார்பிலும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. கஜா புயல் வீசி 2 ஆண்டுகளாகியும் இதுவரை மீள முடியாமல் கடனில் ஏராளமான விவசாயிகள் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் நிவர் புயல் அறிவிப்பு டெல்டா மக்களின் உறக்கத்தில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்ைக காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரியலூர், பெரம்பலூரில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏரி, கண்மாய்களை கண்காணிக்கவும், மீனவர்களுக்கு அறிவுறுத்தவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பழைய கட்டிடங்களில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையான முகாம்களை ஏற்படுத்தவும், தேவையான மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கஜா புயலால் இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லையென கலங்கிடும் விவசாயிகளைப் போல, நிவர் புயலால் பாதிக்கப்படுபவர்கள் புலம்பிடாமல் இருக்க அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். மத்திய அரசும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் நிவர் புயல் நிவாரணப்பணிகளை முடுக்கி விடுவதுடன் தமிழக அரசுக்குத் தேவையான நிதி உள்ளிட்ட அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது தான் பேரிடர் காலக்கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகள்
மீண்டும் குட்கா
நல்ல துவக்கம்
காத்திருக்கும் சவால்
உயிர்துளியை உணர்வார்களா?
ஆபத்தை தரும் செயலிகள்
பொங்கல் பரிசு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்