SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூஸ் சாண்ட்விச்

2020-11-23@ 15:05:49

நன்றி குங்குமம்

நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்!

குஜராத்தைச் சேர்ந்த 18 வயது நிலான்ஷி படேல், கடந்த 2018ம் ஆண்டு இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘தி நைட் ஆஃப் ரெக்கார்ட்ஸி’ல் கலந்துகொண்டார்.  அங்கு அவருக்கு 170.5 செமீ (5 அடி 7 அங்குலங்கள்) முடி வளர்த்ததற்காக பரிசு கொடுக்கப்பட்டது. இப்போது அந்தச் சாதனையை மேலும் 2 மீட்டர் அளவு முடிவளர்த்து அவரே முறியடித்துள்ளார்! இதனால் இளம் பருவத்தில் மிக நீளமான முடியை வளர்த்தவர் என்று கின்னஸ் புத்தகத்தில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.

6 வயதாக இருக்கும் போது ஒரு முறை முடிவெட்ட (பாப் கட்) சென்றபோது, முடி திருத்துவோர் செய்த சிகை அலங்காரம் நிலான்ஷிக்கு பிடிக்காததால் அன்றிலிருந்து இன்று வரை முடிவெட்டாமலே இருக்கிறாராம்!வாரம் ஒரு முறை தாயின் உதவியோடு தலை குளிப்பதற்கு அரை மணி நேரமும், அதனைக் காய வைக்க அரை மணி நேரமும் எடுத்துக் கொள்ளும் நிலான்ஷி, “முடியை பராமரிப்பதில் எந்த ஒரு சிரமமும் இல்லை...” என்கிறார்!

Road Schooling!

கல்வி முறையில் பள்ளி சென்று படிப்பது, வீட்டிலேயே கற்றல் உள்ளிட்ட நடைமுறைகளோடு சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறையும் இப்போது பிரபலமாகி வருகிறது.  அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கங்காதர் என்னும் தம்பதி, 90 நாட்களில் 15 மாநிலங்களுக்கு தனது இரட்டை மகள்களை அழைத்துச் சென்றதுடன் சாலைப் பள்ளிக் கல்வி முறையையும் கற்பித்துள்ளனர். ‘‘இதற்காக 13 ஆயிரம் கிமீ பயணித்தோம். கார்ப்பரேட் துறையில் 17 வருடங்கள் பணியாற்றினாலும் பயணத்தின் மீதே எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. 2018ல் வேலையை விட்டுவிட்டு, 2019ல் வடகிழக்கு இந்தியா முழுவதும் 7 மாதங்கள் பயணம் செய்தேன். என் மனைவிக்கும் பயணத்தில் அதிக ஆர்வம் உண்டு. இரட்டை மகள்கள் பிறந்ததும் 6 மாதக் குழந்தைகளாக இருக்கும்போது முதல்முறையாகப் பயணித்தோம். இப்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாலைப் பள்ளிக் கல்வி முறைக்காகப் பயணித்தோம். பெற்றோர்களாலோ ஆசிரியர்களாலோ கற்பிக்க முடியாததைப் பயணம் கற்றுக் கொடுக்கும். 4 சுவர்களுக்குள் கற்கும் கல்வியும் அறிவும் என்னைப் பொறுத்தவரையில் சரியாக இருக்காது...’’ என்கிறார் கங்காதர்.

விடிய விடிய வெப்சீரிஸ் பார்த்தார்...75 உயிர்களைக் காத்தார்!

மும்பை டூம்பிவிளியில் கொபர் என்ற இடத்தில் 2 மாடிக் கட்டடம் இருந்தது. இந்தக் கட்டடம் எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என 9 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனாலும் அந்தக் கட்டடத்தில் 75 பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் அதே வீட்டில் வசித்த குணால் என்ற இளைஞர், விடிய விடிய செல்போனில் வெப் சீரிஸ் பார்த்திருந்துள்ளார். வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கட்டடத்தில் விரிசல் விழுவதைக் கண்ட குணால், சப்தம் எழுப்பி அனைவரையும் சாலையில் தஞ்சமடைய வைத்தார். அனைவரும் வெளியேறிய 20வது நிமிடத்தில் கட்டடம் முழுமையாக சரிந்து விழுந்தது. பொருட்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இளைஞரின் சாதுர்யத்தால் 75 பேரும் உயிர்தப்பினர்.

மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!

குளிர்பான விற்பனையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய வெங்கட் ராவ், இப்போது பிரபல தனியார் நிதி நிறுவனத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். கோதாவரி ஆற்றங்கரை அருகே ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள கொட்டிலிங்கலா மற்றும் இன்னஸ்பேட்டா மயானங்களை ‘கைலாசநாதா’ என்னும் பெயரில் இவர் புதுப்பித்திருப்பது வைரலாகி உள்ளது. நாய்களும் கழுகுகளும் வேட்டையாடும் இடமாக இருந்த கொட்டிலிங்கலா மற்றும் இன்னஸ்பேட்டா பகுதிகளைப் புதுப்பித்த வெங்கட் ராவ், அங்கே சிலைகள், மரங்கள், கோயில்களை எழுப்பியுள்ளார். அதோடு நூலகத்தையும் அங்கு அமைத்திருக்கிறார். அத்துடன் உடல்களை மயானத்துக்கு எடுத்து வருவதற்காக கைலாச ரதங்கள் என்ற பெயரில் வாகனங்களையும் வாங்கி இலவசமாக அளித்துள்ளார். ஒவ்வொரு மயானத்திலும் சுமார் 400 உடல்களை எரியூட்டலாம். இப்போது ராஜமகேந்திரவரம் பகுதியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மகா காளி, மகா காளீஸ்வரர் ஆலயத்தையும் எழுப்பி வருகிறார். இதற்காகத் தன் சொந்தப் பணத்தில் ரூ.14 கோடியை இதுவரை செலவிட்டுள்ளார்.

இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!

கொரோனா நெருக்கடியால் உள்ளூர் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், கொல்கத்தாவின் நாடியா மாவட்டத்தில் இருந்து இம்ரான் ஷேக் என்ற 19 வயது வாலிபர் தனது சைக்கிளில் தினமும் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இனிப்புகளை விற்று வருகிறார்.  இதற்காக தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் பயணம் செய்கிறார். நாடியா மாவட்டம் இனிப்புகளுக்கு பேர் போனது, குறிப்பாக சர்பூரியா இனிப்பிற்கு அதிக ரசிகர்கள் உண்டு. அதிகாலை 3 மணிக்கே வேலையைத் தொடங்கும் இம்ரான், கொல்கத்தா நகரம் மட்டுமின்றி அவர் கடந்து செல்லும் கிராமங்கள், நகரங்களிலும் இனிப்புகளை விற்று இறுதியாக காலை 7 மணிக்கு கொல்கத்தாவை அடைகிறார். “முன்னர் 300 இனிப்புகளை விற்பனை செய்தேன். இப்போது சுமார் 700 இனிப்புகளை ஒரே நாளில் விற்கிறேன்...” என்கிறார் இம்ரான்.    

அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!

‘Forest man of India’ என்று அழைக்கப்படும், அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு, அமெரிக்காவின் பிரிஸ்டல் கனெக்டிக்கட்டில் இருக்கும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியின் ஒரு பகுதியாக ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள். 1978ம் ஆண்டு பெய்த பெருமழையும் அதனைத் தொடர்ந்து நிலவிய வறட்சியும்தான் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. ‘‘ஏறத்தாழ 12 நாள்கள் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. நாங்கள் அனைவரும் உலகம் அழியப்போகிறது’ என நினைத்தோம். ஆனால், சில நாட்களிலேயே மழை நின்றுவிட்டது. அந்த மழைக்குப் பிறகு, எங்கள் ஊரை கடும் வறட்சி தாக்கியது. வீட்டு விலங்குகள் ஒவ்வொன்றாக மடியத் தொடங்கின. பிறகு, வெப்பம் தாங்காமல் பாம்புகள் செத்து மடிந்தன.

வீதியெங்கும், செத்துப்போன பாம்புகளின் சடலங்கள். இந்தக் காட்சி மனதை உலுக்கியது. பின் பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில் அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊருக்குள் அடிக்கடி வெள்ளம் புகுந்தது. எதிர்காலம் குறித்த கேள்விகள் மனதில் எழுந்தன...’’ என்று சொல்லும் ஜாதவ் பயேங், இந்த கேள்விகளுக்கு விடைகாண பழங்குடிகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். ‘‘அவர்கள் மனிதனின் நுகர்வும், கட்டற்ற பேராசையும்தான் இந்த அழிவுக்குக் காரணம். மனிதன் தன் தேவைக்காக இயற்கையின் சமன்பாட்டை முற்றாகக் குலைத்துவிட்டான். இறைவன் நம்மிடம் இந்த பூமியைக் கொடுத்தபோது, எல்லாம் சரிவிகிதத்தில் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டமான ஒரு நாளில், மனிதன், தான் மட்டும்தான் இருக்க வேண்டும் என நினைத்தான். அது இயற்கைக்கு எதிரானது. இது, மனிதனுக்குப் புரியவில்லை.

பாவம், அவனும் இல்லாமல் போகப்போகிறான். அதன் தொடக்கம்தான் இது’ என்றார்கள். அவர்களே இதற்குத் தீர்வையும் சொன்னார்கள், இறைவன் எந்த விகிதத்தில் இதை நம்மிடம் கொடுத்தானோ, அதை மீட்டு உருவாக்கு’ என்றார்கள். 25 மூங்கில் மரங்களையும் கொடுத்தார்கள். அவைதான் என் பயணத்துக்கான விதைகள். அவையே இன்று ஒரு கானகமாக விரிந்து நிற்கின்றன...’’ என்கிறார் ஜாதவ்.இவர் உருவாக்கிய காட்டின் பரப்பு 550 ஹெக்டேர். பிரம்மபுத்திரா நதியின் மத்தியில் இருக்கும் மஜூலி தீவில் இக்காடு பரந்து விரிந்து கிடக்கிறது. இவரைக் குறித்து இந்தியாவைச் சேர்ந்த ஆர்த்தி ஸ்ரீவத்சவா ஓர் ஆவணப்படமும், கனடா நாட்டைச்  சேர்ந்த வில்லியம் டக்ளஸ் மெக்மாஸ்டர் ஓர் ஆவணப்படமும் இயக்கியிருக்கிறார்கள்.

தொகுப்பு: அன்னம் அரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்