சென்னையில் மியாவாக்கி காடுகள்!
2020-11-23@ 15:03:07

நன்றி குங்குமம்
குறுகிய இடத்தில் நிறைய மரங்களை வளர்க்கும் ஜப்பானிய காடு வளர்ப்பு முறைக்கு மியாவாக்கி என்று பெயர்.
சமூக வலைத்தளங்களில் இயற்கை ஆர்வலர்களின் மத்தியில் மட்டுமே அதிகமாக பகிரப்பட்ட ஒரு சொல், ‘மியாவாக்கி’. மாடித் தோட்டத்தைப் போல மியாவாக்கியும் இன்று பட்டிதொட்டி எல்லாம் பரவலாகி வைரலாகிவிட்டது. அதென்ன மியாவாக்கி? குறுகிய இடத்தில் நிறைய மரங்களை வளர்க்கும் ஜப்பானிய காடு வளர்ப்பு முறைக்கு மியாவாக்கி என்று பெயர். ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளரும், சுற்றுச்சூழல் வல்லுனருமான அகிரா மியாவாக்கி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த நவீன காடு வளர்ப்பு முறை. ‘இடைவெளி இல்லாத அடர்ந்த காடு’ என்பதே இவருடைய தத்துவம். அதாவது குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவு செய்து ஒரு காட்டை உருவாக்க வேண்டும். உதாரணத்துக்கு, 1000 சதுர அடி நிலத்தில் 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். இப்படிச் செய்வதால் மரங்கள் அதிவேகமாக வளரும். வீட்டின் காலியிடமே ஒரு காட்டை உருவாக்க போதுமானதாக இருக்கும். இந்த முறையில் இதுவரைக்கும் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியாவாக்கி. இவரது இந்தச் சேவைக்காக 2006ம் ஆண்டு ‘புளூ பிளானெட்’ விருது அளித்து கவுரவித்தது சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு. உலகம் முழுவதும் நல்ல பலனைத் தந்துவருகிற மியாவாக்கி சென்னையிலும் கால்பதித்துள்ளது.
‘‘சமீபத்தில் சென்னை மாநக ராட்சி கோட்டூர்புரம் ரயில்நிலையத்துக்குப் பக்கத்தில் மியாவாக்கி காட்டை உருவாக்கியுள்ளது. தவிர, வளசரவாக்கத்தில் 20 சென்ட் நிலத்தில் 50 வகைகளில் 800-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், மவுலிவாக்கத்தில் 60 சென்ட் நிலத்தில் 2,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நடப்பட்டன. இப்போது அந்த மரங்கள் காடுகளாக பசுமை பூத்துக் குலுங்குகின்றன. அத்துடன் புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளிலும், மேலும் 5 இடங்களிலும் மியாவாக்கி முறையில் அடர்ந்த காடுகளை உருவாக்கும் பணியைத் துவங்கி விட்டோம்...’’ என்று உற்சாகமாக ஆரம்பித்தார் சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ். ‘‘இந்த காடுகளில் விதவிதமான மரக்கன்று களை நடுவது, வளர்ப்பது மிகவும் எளிது. மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளில் குட்டி காடுகளாக மாறிவிடும். அதன்பின்னர் எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. 2 ஆயிரம் மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு 11 டன் கார்பன்- டை - ஆக்சைடை உட்கொண்டு, 4 டன் ஆக்சிஜனை வழங்கும். தவிர, இந்த மரங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாகக் குறையும். காற்றின் ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதால் மழைப்பொழிவும் அதிகரிக்கும்.
ஏராளமான நுண்ணுயிர்கள், பறவைகள், புழு, பூச்சி பெருக்கமும் அதிகமாகும். மரங்கள் நெருக்கமாக இருப்பதால் ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத்தேடி ஒன்றுக்கொன்று வேகமாக போட்டி போட்டு வளர்கின்றன. அதனால் ஒரு மரத்தின் பத்து வருட வளர்ச்சி இரண்டு வருடத்திலேயே கிடைத்துவிடும். ஆழமான குழியில் செடியை நடவு செய்வதால், வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும். இந்த மரங்களுக்கு உரமாக இயற்கைக் கழிவுகள், வீட்டு சமையல் கழிவுகளைப் பயன்படுத்தினாலே போதும். இந்தக் காடுகள் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதோடு சிறியவர்கள், பெரியவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாகவும் அமையும். நகர்ப்புறத்திலுள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் காடுகளை படத்தில்தான் பார்த்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் அடர்ந்த வனம் என்றால் என்ன என்பதை நேரில் தெரிந்துகொள்ளவும் முடியும். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியை கோவையிலும் செயல்படுத்தியுள்ளார்கள்...’’ என்று முடித்தார் ஆல்பி ஜான் வர்கீஸ்.
தொகுப்பு: திலீபன் புகழ்
படங்கள்: கிஷோர்
மேலும் செய்திகள்
ஹர்ஷா டொயோட்டா வேலப்பன்சாவடி மற்றும் பல்லாவரம் ஷோரூமில் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்.!
இயல்பான பிரசவத்திற்கு கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி: அரசு சித்த மருத்துவர் அசத்தல்
ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது?
உடல் பருமனும் மகளிர் நலமும்
ஒரு தம்பதியர் கர்ப்பமடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் பொழுது அது தாமதமான கருவுறுதல்
தீபாவளியை தித்திப்பாக்க திண்டுக்கல் ஜிலேபி ரெடி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்