SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி தலைமையிலான பாஜ அரசுதான் தமிழகத்துக்கு நிதியை வாரி வழங்குகிறது: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

2020-11-22@ 01:15:09

சென்னை: சென்னையில் நடந்த தேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்டம், மெட்ரோ ரயில் 3வது வழித்தட திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் பேசியதாவது: உலகின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியில் பேச என்னால் முடியவில்லை. எனக்கு தமிழ் தெரியாது. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். தமிழ் கலாச்சாரம் உலகின் மிக பழமையான கலாச்சாரம். இதை யாரும் மறுக்க முடியாது. தமிழர்களின் கலாச்சாரத்திற்கு நான் தலை வணங்குகிறேன். தமிழகத்தில் தற்போது ரூ70 ஆயிரம் கோடி அளவிலான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நோய்க்கு எதிரான போர் நடந்துவருகிறது. அந்த போரில் பிரதமர் மோடி முன்னின்று செயல்பட்டு வருகிறார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். எல்லா மாநில முதல்வர்களுடன் பேசியிருக்கிறேன். ஆனால், கொரோனா தொடர்பாக தமிழகத்திலிருந்து வரும் பிரதிநிதிகள்தான் விஞ்ஞான ரீதியில் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்று பேசுவார்கள். கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்களையும், சிசுக்களையும் பராமரித்து, பாதுகாத்ததில் தமிழகத்தின் செயல்பாடு மற்ற எந்த மாநிலங்களும் செய்யமுடியாத அளவில் சிறப்பாக இருந்தது.

கொரோனா தடுப்பு மட்டுமல்லாமல் சிறந்த நிர்வாகத்திலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. நீர் மேலாண்மையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு முதல் மாநிலம் என்ற விருதை பெற்றுள்ளது. நீர் பாதுகாப்பிலும் தமிழகம்தான் முதல் இடம் பிடித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையே நீர் மேலாண்மையில் தென் மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்த வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முதல் இரு இடங்களை பெற்றுள்ளன. விவசாய சீர்திருத்தத்தில் தமிழக விவசாயிகள் தந்த ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜன்தன் கணக்கில் பதிவு செய்த 70 கோடி பேருக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக நிதி உதவி செலுத்தப்பட்டுள்ளது.

13 கோடி ஏழை தாய்மார்களுக்கு காஸ் சிலிண்டர் தரப்பட்டுள்ளது. எல்லா ஏழை மக்களுக்கும் வீடு கட்டித்தரும் திட்டம் 2022ல் நிறைவேறும். அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வசதி செய்து தரும் மைக்ரோ பூட் திட்டத்திற்கும் தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீலப்புரட்சிக்கு ₹20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீலப்புரட்சியில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள வீடுகளில் 15 சதவீதம் வீடுகளுக்குத்தான் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. விரைவில் 90 லட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். சுத்தமான குடிநீர் வழங்குவதிலும் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது.

மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளும் விரைவில் கிடைக்கின்றன. இந்தியாவிலேயே பாதுகாப்பு வளாகம் உத்தரபிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும்தான் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம் தமிழகத்தின் துறைமுக கட்டமைப்புக்கு ₹1 லட்சத்து 35 ஆயிரம் கோடி, சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ₹57 ஆயிரம் கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் 12,460 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் 7,700 கோடியில் சாலைபணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து பெருமை சேர்த்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று மோடி அரசுதான் பெயர் மாற்றம் செய்தது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று கூற முடியுமா?. ஆனால் மோடி அரசு தமிழகத்திற்கு நிதியை வாரி வழங்கியுள்ளது. இது உதவி அல்ல. தமிழ்நாட்டின் உரிமை. இதை நான் பட்டியலிட தயாராக இருக்கிறேன். கடந்த 2013-2014ம் நிதியாண்டில் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு ₹16,155 கோடி ஒதுக்கியது. ஆனால் கடந்த ஒரே ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு பாஜக அரசு ரூ32,850 கோடி ஒதுக்கியுள்ளது.

கொரோனா காலத்தில் 108 கோடி கிலோ உணவு தானியங்களும், 3.36 கோடி பருப்பு வகைகளும் தமிழகத்திற்கு மத்திய அரசு தந்துள்ளது. சுமார் 1.83 கோடி பேருக்கு ஜன்தன் கணக்கில் ரூ917 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 52.76 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் தரப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழக அரசு முன்னேற்றம் பெரும். இலங்கை தமிழர்கள் 50 லட்சம் பேருக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். நமது தேசத்தின் பாதுகாப்பு தற்போது மிக முக்கியமானதாக உள்ளது. 2 நாட்களுக்கு முன்புகூட 4 தீவிரவாதிகள் நமது ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழக மக்களுக்கு இந்த திட்டங்களை அறிவித்ததில் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

வரவேற்பில் அசத்திய அதிமுகவினர்
தமிழகம் வந்த அமித்ஷாவை வரவேற்பதற்கு பாஜகவினரை விட அதிமுகவினரே அதிகளவில் வந்தனர். ஏராளமான அதிமுக தொண்டர்கள், அதிமுக கொடிகளுடன் விமான நிலையம், லீலா பேலஸ் ஓட்டல், கலைவாணர் அரங்கம் என அமித்ஷா செல்லும் வழிகளில் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்