SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூத்த குடிமக்கள்-மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குமுறை 15% வாக்குகளை பாஜ அபகரிக்க துணைபோவதா? தேர்தல் ஆணைய சுற்றறிக்கையை திரும்ப பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2020-11-22@ 01:05:15

சென்னை, நவ.22: “80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்- மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று “தபால் வாக்களிக்கும்” முறை  என்ற ‘பாசக் கயிறை’ அறிமுகப்படுத்தி-தமிழகத்தில் பாஜவுக்கும்-அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான சுற்றறிக்கையை  இந்தியத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  அறிக்கை: புதிய “தபால் வாக்களிப்பு” முறையை அறிமுகப்படுத்தி; “80 வயதிற்கு மேற்பட்டோர் எல்லாம் மூத்த குடிமக்கள். அவர்கள் தபால்  வாக்குகள் பதிவு செய்யலாம்” என்று  தேர்தல் ஆணையம் அக்டோபர் 2019-ல் கூறியது.

ஆனால் பீகார் தேர்தலுக்கு  முன்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி, இந்த “80 வயதிற்கு மேல்” என்பதை, “65 வயதிற்கு மேல் உள்ளவர்களும் தபால்  வாக்கு அளிக்கலாம்” என்று திடீரென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கண்டு, நாடு முழுவதும் ஜனநாயகத்தில் பெரும்  நம்பிக்கை வைத்துச் செயல்படும் அனைத்துக் கட்சிகளும் வெகுண்டு எழுந்தன. இதையடுத்து மீண்டும் “80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே  தபால் வாக்குகள் பதிவு செய்யும் வாய்ப்பு “ என்று தேர்தல் ஆணையம் 16.7.2020 அன்று அறிவித்தது. அந்த “பீகார் மாடல்தான்”, பீகாரில்  ஜனநாயகத்தின் சுவாசக்காற்றை மாசு படுத்தி, நாடு முழுவதும் இன்றைக்கு பாஜவின் பீகார் தேர்தல் வெற்றி குறித்து மிகப்பெரிய அய்யப்பாட்டை -  அதிர்ச்சி தரத்தக்க குற்றச்சாட்டுகளை பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமைந்து விட்டது.

இப்படியொரு “பீகார் மாடல் தேர்தல் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்” என்றுதான், இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது.  வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு வழங்கப்படும் இந்தப் புதிய “தபால் வாக்கு முறை” என்பது, பூத் லெவல் அதிகாரி-அந்த வாக்குச்சாவடிக்கு  உட்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் வீட்டிற்குப் போவார். அவரிடம் தபால் வாக்குச் சீட்டைக்  கொடுப்பார். அவருடைய வாக்குகளைப் பதியப் பெற்று, அந்த வாக்குச்சீட்டைத் திரும்ப வாங்கி  வந்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம்  ஒப்படைப்பார். ஒருவேளை பூத் லெவல் அதிகாரி போகும் போது அந்த வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஐந்து நாட்களுக்குள் அந்த  வீட்டிற்குச் சென்று, தபால் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.

இப்படிச் சேகரிக்கப்பட்ட  தபால் வாக்குகள் பற்றிய விவரங்கள், தேர்தல் அதிகாரியிடம் பூத் லெவல் அதிகாரி கொடுத்து வைத்துள்ள தபால்  வாக்குகளின் விவரங்கள், முன்கூட்டியே அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தப்பட மாட்டாது. அந்தப் புனிதமான  தேர்தல் கடமையைத்  தாரைவார்த்து விட்டு, ஒவ்வொரு தேர்தலிலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என்று வாக்களிக்க வராத 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட  வாக்குகளை, ஜனநாயக விரோதமாக பாஜவும்-அதன் கூட்டணிக் கட்சிகளும் பகிரங்கமாக அபகரித்துக் கொள்ளும் இந்த முயற்சிக்கு தேர்தல்  ஆணையமே துணை போவது,  ஜனநாயகத்தின் கண்களில் மண்ணைத் தூவும் பேராபத்தான போக்கு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 3.10.2020ம் தேதியிட்ட சுற்றறிக்கை, உச்சநீதிமன்றம் இதுவரை பல்வேறு தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தி வந்துள்ள சுதந்திரமான - நேர்மையான  - நியாயமான தேர்தலுக்கு விரோதமானது. ஒருவர் வாக்கு செலுத்துவதை, இன்னொருவர் பார்க்கக் கூடாது என்பது தேர்தலின் அடிப்படை அம்சம்.  அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவின் ரகசியத்தை, அந்த போற்றத்தக்க ஜனநாயக முறையின் உயிர்நாடியை நசுக்கும்  செயலாக “வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு” தபால் வாக்கு அளிக்கும் நடைமுறை இருக்கிறது. இது கொரோனாவை விடக்  கொடுமையானது! வாக்குச் சீட்டுகளை மூத்த குடிமக்கள் வீட்டிற்குக் கொண்டு செல்லும் “பூத் லெவல் ஆபிசர்” - பிறகு  அதைச் சேகரிக்கப் போகும்  தேர்தல்  ஊழியர்கள் அறிகுறி இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்,

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உயிருக்கு என்ன பாதுகாப்பு? என்ன உத்தரவாதம்? அந்த வாக்காளருக்கே இப்படியொரு தொற்று  இருந்தால், அங்கு போகும்  தேர்தல் ஊழியர்களுக்கு என்ன பாதுகாப்பு? வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்கிற்காக, தனியாக  வாக்குச்சீட்டுகளை அச்சடிப்பது யாருடைய வரிப்பணம்? ஆகவே, இந்தப் புதிய தபால் வாக்கு அளிக்கும் முறை, இந்தியத் தேர்தல் ஜனநாயகம்  இதுவரை வலியுறுத்தி வந்த “சுதந்திரமான - நேர்மையான” தேர்தலுக்கு விரோதமானது என்பதை விட; மக்கள் வரிப்பணத்தைத் தேவையில்லாமல்  விரயம் செய்து, பாஜகவுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ, உதவிட முனையும் போக்காகும்.

சமமற்ற தேர்தல் களத்தை உருவாக்கிட-தேர்தல் முடிவுகளைத் திரித்துச் சிதைத்திட - இந்தியத் தேர்தல் ஆணையமே  களமிறங்குவது நம் தேர்தல்  ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மிகப்பெரிய அளவில் சேதப்படுத்திவிடும். அதுமட்டுமின்றி - மக்களின் விலைமதிப்பற்ற - ரகசிய வாக்குப்பதிவு  முறையைச் சவக்குழியில் தள்ளி - புதைத்து விடும் பேராபத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே “வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வராதவர்கள்” என்று கூறி;  80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும்-மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று “தபால் வாக்களிக்கும்”முறை என்ற ‘பாசக்  கயிறை’ அறிமுகப்படுத்தி - தமிழ்நாட்டில் பாஜகவுக்கும்- அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில்,  நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்றும்;

அந்த அறிவிப்பை முதலில் கைவிட்டு, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த மாதம் 3ம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையைத்  திரும்பப் பெற வேண்டும் என்றும்; கேட்டுக் கொள்கிறேன். 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்தல்  நடைமுறைகளுக்கு மாறான “தபால் வாக்கு அளிக்கும்” வாய்ப்பினை, எவ்வித வெளிப்படையான நடைமுறைகளும் இன்றிக் கொடுப்பது குறித்து,  முதலில் பாராளுமன்றத்தில் விவாதித்து-பிறகு அதைச் செயல்படுத்தும்  நடைமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைக்  கேட்டறிய வேண்டும். இந்த மாற்றங்கள்  ஆரோக்கியமான தேர்தல் ஜனநாயகத்தை - அதன் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இருக்க  வேண்டும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவு: ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: யானைகள் ஆர்வலர் அஜய்  தேசாய் மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். மிகச் சிறந்த வன உயிரியல் பாதுகாப்பு நிபுணரை இந்தியா இழந்திருக்கிறது. அஜய்  தேசாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்